திருத்தலங்கள்
Published:Updated:

திருமலை திருப்பதி - 15

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

உம்பர் உலகாண்டொரு குடைக்கீழ் உருப்பசி தன்,

அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்,

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே

- குலசேகராழ்வார்

திருமலை திருப்பதி - 15


அந்த மகாவிஷ்ணுவே திருப்பாற்கடலை விட்டு ஏழுமலையில் எழுந்தருளினார். `வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரணி தடே' என்கிறது ஸ்தோத்திரம். வைகுண்டத்தையும் பாற்கடலையும் விட்டுவிட்டு (சலிப்பு உண்டாக) புஷ்கரணி தீரத்தில் எழுந்தருளினார் அந்த வைகுண்ட வாசன்.

அவர் எழுந்தருளிய கணத்தில் திருமலை வைகுண்டமானது. அங்கு கலியுகம் முடியும் வரை கோயில்கொண்டு இருக்கப்போகிறார். அப்படிப்பட்டவர் தன் அடியார்களை நாள் தோறும் திருமலை நோக்கி ஈர்த்த வண்ணமே இருக்கிறார். அப்படித்தான் சேரமன்னனான குலசேகரனையும் ஈர்த்தார்.

ஒரு நாள் குலசேகரனுக்கு ஒரு சொப்பனம். அதில் அதிரூப சுந்தரனாக ஒருவர் காட்சி கொடுத்தார். ``நான் உன்னை ஆட்கொண்டேன். இனி நீர் என் அடிமை'' என்று கூறி மறைந்தார்.

அந்தக் கணத்திலிருந்து குலசேகரனுக்குத் தூக்கம் வரவில்லை. விடிந்ததும் பண்டிதர் களையும் வேதியர்களையும் அழைத்து கனவை விவரித்து, வந்தது யார் எனக் கேட்டான்.

மன்னன் கனவில் வந்தவரின் லட்சணங் களைக் கேட்ட வேதியர்கள், அது திருமலை திருவேங்கடவனே என்றார்கள். குலசேகரனுக் குத் திருமலைநாதன் மேல் அபாரமான பக்தி பிறந்தது. திருமலையைப் பாடிக் கொண்டாடி னார். குலசேகரன், குலசேகர ஆழ்வார் ஆனார்.

பக்தி செய்தால் முக்தி கிடைக்கும். வைகுண்டம் செல்லலாம். ஆனால் அந்த வைகுண்டவாசனே திருமலையில் இருக்கும்போது வைகுண்டத்தில் என்ன சிறப்பு இருக்கிறது... எப்பிறவி எடுத்தாலும் திருமலையிலேயே பிறக்கும் விதமாக திருமலையில் ஒரு குருகாய், நரியாய், செண்பக மரமாய் பிறக்க வேண்டும் என்று தாபத்தோடு பாடுகிறார். பிறகு, அசையும் பொருளாக இருந்து பிறவி எடுத்துக் கொண்டிருப்பதை விட நித்தியமாய் திருமலை யில் ஒரு படியாக மாறிவிட்டால் நீங்காது நிலை கொள்ளலாம் என்று விரும்பினார்.

அதன் பின்னும், `தானோ வேங்கடவனின் அடிமை என்று ஆகிவிட்டபிறகு தனக்கு என்று என்ன தேர்வு இருக்க முடியும்... எதுவாக இருந்தாலும் அவனே தீர்மானம் செய்யட்டும். எப்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' என்று அவரிடமே அந்தக் கவலை யையும் விட்டுவிடுகிறார் ஆழ்வார்.

அனந்தாழ்வார் வேங்கடவனுக்குக் கைங்கர்யம் செய்ய ராமாநுஜரால் அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சுவையானது. ஒருநாள் அவர் தம் சீடர்களோடு திருமலையில் இருந்து ஒரு யாத்திரை புறப்பட்டார். கையில் உணவையும் கட்டி எடுத்துக்கொண்டார்கள்.

வழியில் ஓரிடத்தில் தங்கி அனுஷ்டானங் களை முடித்துக்கொண்டு உணவுப் பொட்டலங்களைப் பிரித்தபோது, அதில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. அதைக் கண்டதும் அனந்தாழ்வாரின் மனம் தவித்தது.

`எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' என்றல்லவா குலசேகர ஆழ்வார் பாடினார். அப்படி பாக்கியம் செய்து திருமலை யில் பிறந்த ஒரு ஜீவனை அங்கிருந்து எடுத்துவந்து, இப்படி எங்கோ ஓரிடத்தில் விட்டுவிட்டுப்போவது நியாயமா என்று கவலை கொண்டார். ஆகவே, அந்த எறும்புகளைத் திருமலையிலேயே விடவேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் திருப்பதி நோக்கிப் பயணித்தாராம் அனந்தாழ்வார்.

இப்படிப்பட்ட பெருமையைத் திருமலை அடையக் காரணம் அங்கே பெருமாளோடு தாயார் நித்ய வாசம் பண்ணுவதுதான். இந்தப் பெருமையை அந்த திவ்ய தேசம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் நிவாசன் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்தார். அந்தத் தவத்தின் பலனாக தாயார் தாமரை மலரில் தோன்றி அருளினார். தேவர்களும் ரிஷிகளும் அங்கே மலர் மாரிப்பொழிந்தனர்

நிவாசரோ தவத்தால் உடல் மெலிந்து காணப்பட்டார். தாயார் அதுகுறித்து வருந்த, சுவாமி அவர் உள்ளத்தைப் புரிந்தவராக மீண்டும் தன் திவ்ய சொரூபத்தை மீட்டுக் கொண்டு காட்சி கொடுத்தார். அப்போது பிரம்மா பிருகுவை நோக்கிக் கண் ஜாடை செய்ய, பிருகு தாயார் அருகே வந்து பணிந்தார். தான் அறியாமல் செய்த பிழையினால் உண் டான துன்பங்களைப் பொறுக்குமாறு பிருகு தாயாரிடம் வேண்டினார்.

தாயாரோ, ``நாராயணனின் லீலையல்லவா இது... கலியுகத்தில் பக்தர்களுக்காக அவர் இந்தத் திருமலையில் கோயில்கொள்ளப் புரிந்த திட்டம் இது. இதில் உன் தவறு எதுவும் இல்லை. உன் பக்தி வைராக்கியமும் போற்றத் தக்கதே'' என்று சொல்ல பிருகு மகிழ்ந்தார்.

நிவாசர் தாயாரைத் தன் அருகே வருமாறு அழைக்க தாயாரோ திருப்பாற்கடலில் இருந்து எழுந்த நாளைப் போல இப்போது மீண்டும் தாமரை மலரில் இருந்து மலர் மாலையோடு எழுந்து வந்து அதை நிவாசருக்குச் சூட்டினாள்.

தேவர்கள் மலர் தூவி வாழ்த் தினர். தேவ மங்கையர் நடன மிட்டனர். சிவனும் பிரம்மனும் வேத பாராயணம் செய்தனர்.

அந்த நாள் கார்த்திகை மாதம் பஞ்சமி திதி, வெள்ளிக்கிழமை, உத்திராட நட்சத்திரத்தோடு கூடிய சுப தினமாக இருந்தது. பின்பு பெரு மாளும் தாயாரும் ஆனந்த நிலையத்தை அடைந்தனர். அதற்கு முன்பு இருவரும் வராக சுவாமியை வழிபட்டு அவரின் ஆசிகளைப் பெற்றனர்.

பின்பு தங்கள் மண்டபத்துக்கு வர பத்மாவதி அங்கு வந்து இருவரையும் வரவேற்று நமஸ்கரித்தாள். தேவி தாயாரும் அவளை அன்போடு அரவணைத்து மகிழ்ந்தாள்.

பிரம்மாதி தேவர்களுக்கு வஸ்திரம் முதலிய மரியாதைகளைச் செய்து வழியனுப்பி வைத்தனர். ஆனந்த நிலையத்தில் உண்மையான ஆனந்தம் நிறையத் தொடங்கியது.

தாயாரோடு ஏகாந்தமாக இருக்கும் சூழலில் பெருமாள் ஒரு விவாதம் ஒன்றைத் தொடங் கினார்.

``தேவி, திருமணத்துக்காக நான் பட்ட கடன் அப்படியே இருக்கிறது. அதை அடைக்க என்ன வழி?'' என்று கேட்டார்.

உடன் லட்சுமி தேவி, ``நீங்கள் குபேரனிடம் கடன் பட்டிருக்கவே வேண் டாம். என்னைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். இப்போதும் ஒன்றும் குறைவில்லை. நீங்கள் கேட்கும் செல்வத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று சொன்னாள்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த பெருமாள், ``தேவி! நீ கொடுக்க விரும்பும் செல்வத்தை என் பக்தர் களுக்குக் கொடு. திருமலைக்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் பாவத்தை நான் போக்கு வேன். அவர்களுக்கு வேண்டிய செல்வத்தை நீ அருள். அவர்கள் மீண்டும் மீண்டும் என் சந்நிதிக்கு வந்து அந்த செல்வத்தை என் உண்டியலில் சேர்ப்பார் கள். அதைக் கொண்டு கலியுகம் முடியும் வரையில் குபேரனுக்கு வட்டி கட்டி வருவேன். கலியுக முடிவில் அசலைச் செலுத்திக்கொள்ளலாம்'' என்றார்.

இதைக் கேட்ட லட்சுமி, ``நான் தங்களுக்கே செல்வம் தருகிறேன் என்றால், நீங்கள் பக்தர்களுக் குத் தரச் சொல்கிறீர்களே. கலியுகத்தின் பக்தர்கள் கொடுத்துவைத்தவர்கள்!

அவர்களுக்கு அருள் புரியவே நீங்கள் இப்படித் தீர்மானித்துள்ளீர்கள் என்பது புரிகிறது. நான் உங்கள் சொற்படி உங்கள் சந்நிதிக்கு வந்து வேண்டிக் கொள்கிறவர்களுக்கு வேண்டும் செல்வத்தை அருள்வேன். நீங்கள் உங்கள் சக்தியின் மூலம் அதை ஈர்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல பெருமாள் புன்னகைத்தார்.

பெருமாளுக்குச் செல்வம் எதற்கு... கடன் எதற்கு... அதற்கு வட்டிதான் எதற்கு... எல்லாம் பக்தர்களுக்கு அருள்வதற்காகவே நிகழ்ந்த திருவிளையாடல்கள் அன்றி வேறென்ன! திருமலையில் ஏராளமான செல்வம் சேர்வதற்கும் மீண்டும் மீண்டும் பக்தர்கள் அங்கே படையெடுப்பதற்கும் அவரின் சங்கல்பம் அல்லவா காரணம்.

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோயில் கொண்ட அந்த கோவிந்தனைப் பாடப் பாட நம் குறைகள் எல்லாம் நீங்கும்.

இந்த மாபெரும் உண்மையை உலகுக்கு உணர்ந்த ஏராளமான ஆசார்யர்கள் தோன்றி, 'திக்கற்றவர் களுக்குத் திருமலையே கதி' என்று வழிகாட்டினர். அப்படிப்பட்ட ஆசார்யர்களின் திவ்ய சரிதம் மிகவும் சுவையானது.

- தரிசனம் தொடரும்...

தன்வந்திரி பகவான்
தன்வந்திரி பகவான்

`என்றும் நலமுடன் வாழ...'

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.

ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம்.

நோயில்லா ஆரோக்கியமான வாழ்வை வரமாகத் தந்தருளும் தெய்வம் தன்வந்திரி பகவான். அவரை மனதில் நிறுத்தி, கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் வழிபடுங்கள்; அவரின் திருவருள் உங்களை வாழவைக்கும்.

`ஓம் நமோ பகவதே

வாசுதேவாய தன்வந்தரேயே

அம்ருதகலச ஹஸ்தாய

சர்வாமய நாசாய

த்ரைலோக்ய நாதாய

மகாவிஷ்ணவே நம:'

- வி.பவித்ரா, சென்னை-44