Published:Updated:

திருமலை திருப்பதி - 16

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 16

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை, வானவர் வானவர் கோனொடும்,

சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து,

அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே.

- ஶ்ரீநம்மாழ்வார்

வைணவத்தை வாழ்விக்கத் தோன்றிய மகான் ராமாநுஜர். அவர் ஒரு நாள் தம் சீடர்களுக்குத் திருவாய்மொழியின் பாடல்களைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லிக்கொண்டிருந்தார். மேற்காணும் பாசுரத்தைச் சொல்லி முடிக்கும் முன்பாக ராமா நுஜரின் கண்கள் கலங்கின.

அதைக் கண்ட சீடர்கள் திகைத்தனர். ஒரு வேளை, திருவேங்கடம் என்ற திருநாமத்தைச் சொன்னதும் மெய்சிலிர்த்துக் கண்ணீர் சிந்து கிறாரோ என்று எண்ணினர். ஆனால் ராமாநுஜர் மெய் சிலிர்த்ததுபோல் தோன்றவில்லை. சீடர்கள் தம்முள் கலங்கினர். வேறு வழியின்றித், “தாங்கள் கண்ணீர் சிந்தும் காரணம் என்ன?” என்று கேட்டனர்.

அப்போது ஶ்ரீராமாநுஜர் சில கணம் அமைதியாக இருந்தார். பிறகு, “சில காலங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி குறித்த பல்வேறு வாதங்கள் எழுந்தன. திருமலை ஶ்ரீமந் நாராயணன் வாசம் செய்யும் தலம்தானா எனும் கேள்விகள் புறப்பட்டன. மகிமை நிறைந்த திருத்தலம் என்பதால், அதைச் சொந்தம் கொண்டாட ஒவ்வொரு மார்க்கத்தினரும் துடித்தனர்.

அனந்தாழ்வார்
அனந்தாழ்வார்அப்போது அந்த தேசத்தை ஆண்ட யாதவராஜனின் அவைக்குச் சென்று பல்வேறு வாதங்கள் புரிந்து புராண உதாரணங்களைக் காட்டி, திருமலை என்பது ஶ்ரீமந்நாராயணனான ஶ்ரீநிவாசனின் வாசஸ்தலமே என்பதை உறுதிப்படுத்தினோம். அதன்பின் அது வைஷ்ணவர்களுக்கே உரிய புண்ணியக்ஷேத்திரமாக விளங்குகிறது. ஆனாலும் அங்கே பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்கிறவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

பாருங்கள்... இந்தப் பாசுரத்தில் `சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து’ என்று பாடுகிறார் ஆழ்வார். திருமலையில் பூக்கள் எல்லாம் தாமே சிந்திக் கிடக்கின்றன. அங்கே முறையாக ஒரு நந்தவனம் அமைத்து, பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்பவர்கள் யாருமில்லை. அதை நினைக்கும்போது எனக்குக் கண்ணீர் பெருகுகிறது” என்றார் உடையவர்.

உடனே ஒரு சீடர் எழுந்தார். “தேவரீர் என்னை அனுமதியுங்கள். நான் இப்போதே திருமலைக்குச் சென்று நந்தவனம் அமைத்துப் புஷ்ப கைங்கர்யம் செய்கிறேன்” என்றார்.

ஶ்ரீராமாநுஜர் கண்கள் விரிய அவரைப் பார்த்தார். “அப்பா! உனக்கு அந்த வேங்கடவன் மீது அவ்வளவு பிரியமா? உன் மனைவிவேறு கர்ப்பவதி. இந்த நிலையில் அவளைப் பிரிந்து செல்லலாமா” என்று கேட்டார்.

“தேவரீர், அது எப்பேர்ப்பட்ட இடம் என்பதும் அங்கே வாசம் செய்யும் சுவாமி யார் என்பதும் எனக்குப் பெரிதல்ல. என் ஆசார்யனான தங்கள் கண்களில் கண்ணீர் பெருகும்படிக்கு ஒரு கவலை இருக்குமானால், அதைப் பார்த்துக்கொண்டு அடியேன் சும்மா இருக்க முடியாது. இனி அடியேன் வாழ்க்கை திருமலையிலேயே தொடரட்டும். எனவே, நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு திருமலைக்குச் செல்ல சித்தமாக இருக்கிறேன்” என்று உணர்வுப் பெருக்கோடு கூறினார்.

அனந்தாழ்வார் - திருப்பதி வேங்கடவன்
அனந்தாழ்வார் - திருப்பதி வேங்கடவன்உடனே மனம் நெகிழ்ந்த ஶ்ரீராமாநுஜர், “அனந்தாண்பிள்ளை” என்று சொல்லி ஆசீர்வதித்தார். குருவின் ஆசிகளோடு தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருமலைக்கு வந்து அங்கே தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார் அனந்தாழ்வார்.

திருமலையில் அது மழைக்காலமாக இருந்தது. அதனால் ஏராளமான புஷ்பங்கள் பூத்துக் குலுங்கின. அனந்தாழ்வார் அவற்றை முறைப்படி பறித்து மாலை தொடுத்துப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.

ஒருநாள் அவரின் திருவுள்ளத்தில் ஒரு கவலை தோன்றியது. மழைக்காலத்தில் வனம் செழித்திருக்கும். ஆனால் வெயில் காலத்தில் அது சாத்தியம் இல்லையே! எனில், பெய்யும் மழை நீரைத் தேக்கிவைக்கும் தீர்த்தக்குளம் ஒன்று வேண்டுமே என்று யோசித்தார்.

தீர்த்தக்குளம் கட்டுவது பெரும் பணி! இருப்பவர்களோ இருவர் மட்டுமே. அவர் களில் ஒருத்தி கர்ப்பவதி. ஆனாலும் கவலை யின்றி அனந்தாழ்வார் பணியைத் தொடங் கினார். மண்ணைத் தோண்டி எடுத்து அவர் கொடுக்க. அவரின் மனைவி அதைக் கொண்டுபோய் எல்லையில் கொட்டிக் கரை அமைக்கவேண்டும். வயிற்றில் ஒரு சுமை, தலையில் ஒரு சுமை எனத் தள்ளாடிய படியே மண் சுமந்தாள் அந்த தேவி. இதைக் காண்போர் யாராக இருந்தாலும் மனம் கலங்குமே! எனில், அந்த வேங்கடவன் சும்மா இருப்பானா? அருளாடல் ஆரம்பித்தது.

அனந்தாழ்வார் இருக்கும் இடத்துக்கு வேடுவச் சிறுவன் ஒருவன் வந்தான். அனந்தாழ்வாரின் தேவியை வணங்கி, “அம்மா, தாங்கள் மிகவும் சோர்வுற்று இருக் கிறீர்கள். இந்த மண் சுமையை என்னிடம் கொடுங்கள். நான் கொண்டுபோய் எல்லையில் கொட்டுகிறேன்” என்று சொல்லி, அதை வாங்கிக்கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வந்து மண்கூடையைக் கொடுத்தான்.

வழக்கத்தைவிட விரைவாக மண்ணைக் கொட்டிவிட்டுத் தன் தேவி வருவதைக் கண்ட அனந்தாழ்வார், “எப்படி இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்தாய்?” என்று கேட்டார்.

அவளோ, “யாரோ ஒரு சிறுவன் வலுக்கட்டா யமாக என்னிடம் பிடிங்கிக் கொண்டு போய்க் கொட்டுகிறான்” என்றாள். அனந்தாழ்வாருக்கு வியப்பு மேலிட்டது. அதேநேரம், ‘தானும் தன் மனைவியும் தங்களின் கையாலேயே ஒரு திருக்குளம் அமைக்கக் கிடைத்திருக்கும் பாக்கியத்தின் குறுக்கே வந்தது யார்’ என்று பார்க்கவும் விரும்பினார். நேராக அந்தச் சிறுவன் இருந்த இடம் நோக்கி வந்தார்.

“யாரப்பா நீ?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “சுவாமி நீங்கள் செய்யக் கூடிய வேலையா இது? அதுவும் கர்ப்பிணியான இந்தத் தாய் கஷ்டப்படுவதைக் காண என் மனம் ஏற்கவில்லை. இந்தக் கடினமான வேலையில் நானும் பங்கெடுக்க அனுமதியுங்கள்” என்றான்.

அனந்தாழ்வாரோ அதை ஏற்கவில்லை. “அடியேன் குருவின் கட்டளையால் இங்கு வந்தேன். அவர் ஆசைப்படி நந்தவனம் அமைக் கவும், ஆண்டு முழுவதும் புஷ்ப கைங்கர்யம் செய்யவும் ஏதுவாக இந்தத் தீர்த்தத்தை அமைக்க விரும்புகிறேன். இது முழுக்க முழுக்க எங்கள் கைங்கர்யமாகவே இருக்கட்டும். நீ வேண்டுமானால் மற்றுமொரு தோட்டம் அமைத்து, மற்றுமொரு தீர்த்தக்குளம் உண்டாக்கு. எங்கள் கைங்கர்யத்தில் தலை யிடாதே” என்று சத்தம் போட்டுவிட்டு, அவர் மண் வெட்டச் சென்றார்.

அங்கிருந்து போவதுபோல் பாவனை செய்த அந்தச் சிறுவன் மீண்டும் அங்கேயே திரும்பி வந்தான். அனந்தாழ்வான் மனைவி மண் சுமந்து வரும்போது அவள் அருகே வந்து, “அம்மா! அவர் ஆண்மகன். சிரமப்படுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் கர்ப்பவதியான நீங்கள் சிரமப்படலாமா? அதைப் பார்க்க என் மனம் பொறுக்குமா? நீங்கள் அவரிடம் சொல்லவேண்டாம். அவர் கண் பார்வை படும்வரைக்கும் நீங்கள் சுமந்து வாருங்கள். அதன் பின் என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் கொண்டுபோய் எல்லையில் கொட்டி வருகிறேன்” என்று சொல்லி, அவள் கையிலிருந்த மண் கூடையைப் பிடுங்கிச் சென்றான்.

அவளோ ஒரு கணம் திகைத்தாள். என்னதான் சௌகர்யம் என்றாலும் கணவனுக்குத் தெரிவிக்காமல் அதை அனுபவிப்பது தவறு அல்லவா... உடனே, தன் கணவனை நோக்கி ஓடிச்சென்று, “அந்தச் சிறுவன் மீண்டும் வந்துவிட்டான். என் கையிலிருந்த மண் கூடையைப் பிடுங்கிக்கொண்டு கொட்டப் போயிருக்கிறான்” என்று சொல்ல, அனந்தாழ் வாருக்குக் கோபம் வந்தது.

கையிலிருந்த கடப்பாரையோடு அவனை நோக்கி ஓடினார். அதைக் கண்டு சிறுவனும் ஓடினான். அனந்தாழ்வார் விடாமல் துரத்தி னார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கடப்பாரையை அவனை நோக்கி எறிந்தார். அது சிறுவனின் தாவாங்கட்டையில் பட்டது.

ஆனாலும் அவன் நிற்காமல் ஓடி வனத்துக் குள் மறைந்தான். அனந்தாழ்வான் தன் சினம் தணிந்து மீண்டும் தன் இடத்துக்கு வந்தார். நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலை தொடுக்க ஆரம்பித்தார்.

திருமலை அந்த நாளில் பெரும் வனப் பகுதியாகத் திகழ்ந்தது. அங்கே சென்று தரிசித்து வரலாமே தவிர, அங்கேயே வாழ்வது என்பது எளிதல்ல. ஆனால் அனந்தாழ்வார் தன் ஆசாரியனுக்காக அதைத் தேர்ந்தெடுத்தார். அதேவேளை, தன்னை நாடிவரும் பக்தர் களுக்கு அருள்பாலிப்பவனாகவும் அவர்களோடு நேருக்கு நேர் பேசுபவனாகவும் திருவேங்கடவன் விளங்கினான். அப்படித்தான் அன்றும் சிலர் ஆராதனைக்கு வந்தபோது, பெருமாள் தன் திருவாய் மலர்ந்து அனந்தாழ்வாரை அழைத்து வருமாறு கட்டளை இட்டார்.

பக்தர்கள் அனந்தாழ்வாரிடம் வந்து, “பெருமாள் அழைக்கிறார் உடனே வாருங்கள்” என்று கூறினர். ஆனால் அவரோ மும்மரமாக மாலை கட்டிக்கொண்டிருந்தார். ஆகவே அவர் தன்னை அழைக்க வந்த பக்தர்களிடம், “இன்னும் சிறிது நேரத்தில் இந்த அழகான மாலை வேங்கடவனுக்குத் தயாராகிவிடும். மாலை கட்டி எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்று சொல்லித் திருப்பி அனுப்பினார்.

பெருமாள் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டுவிட்டால். விட்டுவிடுவாரா என்ன? “உடனே அழைத்துவாருங்கள்” என்று சொல்ல பக்தர்கள் வேறுவழியின்றி அனந்தாழ் வாரிடத்தே திரும்பி வந்தனர். ஆனால் இன்னும் மாலை கட்டி முடிக்கவில்லை.

“யார் அழைத்தாலும் கைங்கர்யத் தைப் பாதியில் விட்டுவிட்டு வரமுடியாது. மாலை கட்டியானதும் வருகிறேன்” என்று சொல்ல பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர்!

- தரிசனம் தொடரும்...

கடலும் அலைகளும்!


து ஒரு பரந்த கடல். கரையைவிட்டு வெகு தூரத்தில் பொங்கி எழுந்த கடலலை ஒன்று, கரையில் மோதிச் சிதறி நுரையாகி, கடற்கரை மண்ணைத் தொட்டு மறைந்துகொண்டிருந்த மற்றொரு அலையைப் பார்த்தது.

`தன் நிலையும் அப்படித்தானா' என்று எண்ணி வருந்தியது. அதைத் தொடர்ந்து வந்த 2-வது அலை காரணம் கேட்க, முதல் அலை தன் பயத்தை விவரித்தது. உடன் அந்த புதிய அலை, ``நண்பா! பயமும் வருத்தமும் தேவையில்லை. முதலில், நீ தனியானவன் அல்ல; கடலின் ஓர் அங்கம். கடல் இருக்கும்வரை நாமும் இருப்போம்!'' என்றது.


முதல் அலை எதைப் பிரச்னையாகக் கருதி பயந்து வருந்தியதோ, அந்தப் பிரச்னை இப்போது மாறிவிட்டது. ஒரு பிரச்னையின் காரணத்தைப் புதிய பரிமாணத்தில் பார்க்கும்போது, பிரச்னை தானே மறைந்துவிடுகிறது.