Published:Updated:

திருமலை திருப்பதி - 18

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 18

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது

தேசமோ திருவேங்கடத்தானுக்கு?

நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்

பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே

- திருவாய்மொழி


திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

அனந்தாழ்வாருக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்... அந்த ஜகன்மாதாவுக்கே தந்தையாகி, அந்த வேங்கடவனுக்கே மாமனார் ஆகவும் பாக்கியம் பெற்றார். அவரின் இந்தப் புகழ் பாரெங்கும் பரவிற்று. வேங்கடவனை தரிசிக்க வருபவர்கள் அனந்தாழ்வாரையும் தரிசித்துப் பேறுபெற்றனர்.

ஆனால் அவரோ துளியும் கர்வம் இல்லாமல் நித்தியப்படித் தன் மலர் கைங்கர்யத்தைச் செய்வதிலேயே கவனத்தை வைத்தார். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப்பெரிது அல்லவா... ஆசார்யனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சீடன் குறித்த பெருமை வேங்கட வனுக்குள்ளும் நிறைந்திருந்தது. ஏழுமலைக்கு நிகரான பெருமையை அனந்தாழ்வாருக்கு வழங்க சித்தம் கொண்டார் பெருமாள். அதற்கான திருவிளையாடலைத் தொடங்கினார்.

வைணவர்களுக்கு அனைத்து திவ்ய தேசங் களும் ஒன்றுதான் என்றபோதும் கோயில், பெருமாள் கோயில், திருமலை எனும் 3 க்ஷேத்திரங்களைச் சிறப்பித்துச் சொல்வதுண்டு. `கோயில்' என்றால் ரங்கம், `பெருமாள் கோயில்' என்றால் காஞ்சி புரம், `திருமலை' என்றால் திருப்பதி. அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் இந்த மூன்றையும் தரிசிப்பது மிகவும் அவசியம் என்பார்கள்.

அதிலும் திருமலை யாத்திரை மிகவும் முக்கியம். ரங்கத்திலிருந்து சில வைணவர்கள் ஒரு கூட்டமாகத் திருமலைக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் வண்டி கட்டிக்கொண்டு, செல்லும் வழிக்குத் தேவையான ததி ஆராதனத்துக்குரிய (அன்னதானம்) பொருள் களோடு புறப்பட்டு, வழி எங்கும் உள்ள திவ்ய தேசங்களை தரிசித்துக்கொண்டே செல்வது வழக்கம். அப்படி அவர்கள் தரிசனம் செய்து கொண்டே மதுராந்தகம் வந்து சேர்ந்தனர்.

அப்போது சோதனையாகக் கொண்டு வந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இனி திருமலைக்குச் செல்ல வேண்டும் என்றால் நிறைய உணவுப் பொருள்கள் வேண் டும். அதற்கு வழியில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சகல ஜீவன்களுக்கும் உணவு அளிக்கும் பரந்தாமன் பரம பக்தர்களான தங்களுக்கு உணவு கிடைக்க வகை செய்யமாட்டானா என்ன... என்னும் நம்பிக்கையோடு அவனை ஸ்தோத்திரம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அழகிய இளைஞன் ஒருவன் வந்தான். திருமண்ணும் துளசி மாலையும் அணிந்து தேஜஸுடன் திகழ்ந்த அவன் தோற்றம் பரம வைணவன் அவன் என்பதை சொல்லாமல் சொல்லியது. அவன் கூட்டத்தின் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்துகொண்டான். அவர்கள் ``நீ யார்?'' என்று கேட்டனர்.

அதற்கு அவன், ``ஐயா! என் பெயர் வேங்கடவன். தாங்கள் திருமலை செல்ல திட்டமிட்டிருப்பதாக அறிகி றேன். என்னையும் அழைத்துச் செல்லுங்கள். செல்லும் வழி எங்கும் தங்களுக்குத் ததி ஆராதனம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்வேன்'' என்று சொல்ல வைஷ்ணவர்களுக்கோ குழப்பம்.

``அப்பா, நீ எங்களோடு வருவ தில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ததி ஆராதனத் துக்குரிய திரவியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. மேற்கொண்டு பயணத்தை எப்படித் தொடர்வது என்று தெரியாமல் நாங்களே குழம்பியிருக்கிறோம்'' என்றனர். உடனே அந்த இளைஞன் புன்னகை செய்து, ``ஐயா, அது குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம். தேவையான பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து ததி ஆராதனம் செய்யவேண்டியது என் கடமை. நீங்கள் அந்தக் கைங்கர்யத்தைச் செய்ய அனுமதித்தால் போதும்'' என்றான்.

இவர்களுக்கு ஆச்சர்யம் ஒரு புறம்... குழப்பம் ஒருபுறம். யாரோ ஒருவன் வந்து உங்களுக்கு உணவு தருகிறேன் என்று சொன் னால் எப்படி ஏற்பது? ஆசார்ய சம்பந்தமில்லாத துர்மார்க்கனாக ஒருவன் இருந்து அவன் கையால் உணவு உண்டால் அது பெரும் பாவமாயிற்றே... இவனைப் பார்த்தால் துர்மார்க்கனாகத் தெரியவில்லை. அதேநேரம், இவனுடைய ஆசார்யன் யார் என்று தெரியா மல் எப்படி இவனைச் சேர்த்துக்கொள்வது என்று குழம்பினர்.

``அப்பா, நீ செய்யும் உதவியை நாங்கள் ஏற்கவேண்டும் என்றால், நீ உன் ஆசார்யன் யார் என்பது குறித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். உன் ஆசார்யனின் தனியன் என்ன... சொல் கேட்போம்'' என்று கேட்டனர்.

அனந்தாழ்வான்
அனந்தாழ்வான்


வைணவ சம்பிரதாயத்தில் தனியன் என்பது ஒரு குறியீட்டுப் பா. ஒவ்வோர் ஆசாரியனுக்கும் ஒரு தனியன் உண்டு. சீடர்கள் தங்களின் ஆசார்யரின் தனியனைச் சொல்லித் தங் களை அறிமுகம் செய்துகொள்வது மரபு.

அந்த இளைஞன், ``திருமலையில் வசிக்கும் அந்த அனந்தாழ்வானின் திருவடி சம்பந்தம் பெற்றவன் நான்'' என்று சொல்லி,

``அகிலாத்ம குணாவாஸம்

அஜ்ஞாநதிமிராபஹம்|

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே

அநந்தார்யதேசிகம்||" என்று ஒரு தனியனைச் சொன்னான்.

இதன் பொருள், `ஆத்மாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங் களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை முற்றிலும் போக்குபவரும், தம்மை அடைந்த சீடர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்' என்பதாகும்.

பொதுவாக ஆசார்யரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆசார்ய பரம்பரையைச் சுட்டிக்காட்டித் தனியன் பாடுவதே மரபு. அப்படியிருக்க, இவன் பாடும் தனியனில் அனந்தாழ்வாரின் ஆசார்யன் பற்றிய தகவலே இல்லையே என்று அவர்கள் குழம்பினர். அதை அவனிடமே கேட்டனர்.

``இளைஞனே, நீ உன் ஆசார்யனைப் பற்றி மட்டுமே சொன்னாய். உன் ஆசார்யனின் ஆசாரியனைப் பற்றியும் தனியன் பாடுவது தானே மரபு. அப்படியிருக்க, இதை நாங்கள் எப்படி ஏற்பது'' என்று கேட்டார்கள்.

உடனே அந்த இளைஞனும், ``இவ்வளவுதானா... இதோ அடுத்த தனியனை யும் சொல்கிறேன்'' என்றவாறு பாடினான்.

'மத்ராமாநுஜாசார்ய பாதாம்போருஹத்வயம்|

ஸதுத்தமாங்க ஸந்தார்யம்

அநந்தார்யமஹம் பஜே||'

இதற்கு, `ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித் தாமரைகளாக இருப்பவரும் அதனால் நல்லோர்கள் கூட்டத்துக்கு அணியாக இருப்பவருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.' என்று பொருள். இதைக் கேட்டதும் ரங்கத்து வைணவர்கள் மகிழ்ந்தனர். `இனி நீ எங்களோடு வரலாம்' என்று அனுமதித்தனர்.

அந்த இளைஞன் அவர்களோடு பயணித்தான். வேண்டும் கைங்கர்யங்களை ஆர்வமுடன் செய்துகொடுத்தான். திருமலை வரையிலும் தேவையான உணவைத் தயாரித்து வழங்கினான். திருமலைக்குச் சென்று சேர்ந் ததும் அனைவரும் அங்கே இருந்த மண்டபத் தில் இளைப்பாறினார். அவர்களுக்குத் தங்கள் உடன் வந்த வேங்கடவனின் தொண்டு குறித்து நினைவுக்குவர நன்றியில் கண்ணீர் பெருக்கினர்.

``வேங்கடவா....வேங்கடவா'' என்று அழைத் தனர். அவன் அங்கே இல்லை. சரி திருமலை வந்தாயிற்றே... தன் ஆசார்யனைச் சந்திக்கச் சென்றிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு தாங்களும் அனந்தாழ்வானை சேவிக்கும் ஆவல் கொண்டு நந்தவனத்துக்கு வந்தனர்.

அப்போது அனந்தாழ்வார் ஒரு மலர்ச் செடியை நட்டுக்கொண்டிருந்தார். அனைவரும் சென்று அவரை நமஸ்கரித்தனர். அனந்தாழ்வார் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று அமரவைத்தார். அவர்களின் பயணம் குறித்து விசாரித்தார்.

``சுவாமி... தங்களின் சீடனான வேங்கடவன் எங்களோடு வந்தான். எங்களுக்குத் தேவை யான ததி ஆராதனங்களைச் செய்து கொடுத்தான். அவன் இல்லை என்றால் எங்களால் திருமலைக்கு வந்திருக்கவே முடியாது'' என்று சொன்னார்கள்.

உடனே அனந்தாழ்வார், ``என்ன வேங்கடவன் எனும் என் சீடனா? அப்படி யாரும் எனக்குச் சீடனாக இல்லையே'' என்றார்.

வந்தவர்களோ, ``சுவாமி, தங்களின் தனியன் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாரே..." என்று சொல்ல, அனந்தாழ்வாருக்குக் குழப்பம் ஏற்பட்டது.

``அப்படியா அவர் இப்போது எங்கே...?'' என்று கேட்டார்.

``ஐயா, திருமலை வரையிலும் எங்களோடுதான் வந்தான். இப்போது காணோம். ஒருவேளைத் தங்களை நாடிவந்திருப்பானோ என்றுதான் இங்கு வந்தோம்'' என்றனர் அடியார்கள்.

அனந்தாழ்வாருக்குச் சகலமும் புரிந்தது. கண்களை மூடி தியானித்தவருக்கு, சேவகனாய் வந்து விளையாடல் புரிந்த வேங்கடவனின் தோற்றம் தெரிந்தது. அவர் கண்களிலிருந்து பெருகிய நீர் மற்றவர்களுக்கு அந்த மாபெரும் உண்மையை உணர்த்திவிட்டது.

`அனந்தாழ்வார் தன் குரு' என்று வேங்கடவனே சொல்லிக்கொள்வார் என்றால் அனந்தாழ்வாரின் சிறப்பு எப்பேர்ப்பட்டது என்று சொல்லிச் சிலிர்த்தனர். அந்த வேங்கட வனின் கருணையை எண்ணி மகிழ்ந்தனர்.

திருவேங்கடவனின் இந்தத் திருவிளையாடல் திருப்பதி உள்ளவரை அனந்தாழ்வாரின் புகழை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்து விட்டது.

- தரிசனம் தொடரும்...