Published:Updated:

திருமலை திருப்பதி - 13

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 13

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே

நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்

சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்

பாடாவருவேன் வினையாயின பாற்றே

- திருமங்கையாழ்வார்

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


திருமலையில் சுவாமி புரிந்த லீலாவிநோதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று பத்மாவதித் திருக்கல்யாணம்!

பெருமாளின் அவதாரங்கள் தோறும் திருக்கல்யாணங்கள் உண்டு. அவற்றில் எல்லாம் மகாலட்சுமித் தாயாரும் அவதரித்துப் பெருமாளைத் திருமணம் செய்துகொள்வார். திருமலையில் பெருமாள் நிவாஸராக அவதாரம் செய்தபோது அவரைத் திருமணம் செய்துகொள்ளக் காத்திருந்தாள் பத்மாவதித் தாயார்.

ராமாயணக் காலத்தில் பிறந்த வேதவதி, ராமனை மணந்துகொள்ள சீதாதேவியை வேண்டி வரம் பெற்று, அந்த வரத்தைப் பூர்த்தி செய்ய நிவாஸ அவதாரக் காலத்தில் நாராயணபுரத்தில் பத்மாவதியாய் அவதரித்தாள். இவளுக்கு சீதாதேவி அளித்த வாக்கைக் காக்கும் பொருட்டு, நிவாஸன் பத்மாவதியைத் தேடிவந்து திருமணம் செய்துகொண்டார். இதன் பின் இருக்கும் தெய்வத் திருவிளையாடல்கள் ஏராளம்!

ஒருமுறை மும்மூர்த்திகளில் சாந்த மூர்த்தியாக விளங்குபவர் யார் என்பதை அறிய பிருகு முனிவர் நடத்திய திருவிளையாடல் வினையாகிப் போனது. அதன் காரணமாக மகாலட்சுமித் தாயார் பெருமாளோடு ஊடல் கொண்டு கொல்லாபுரம் வந்து தனித்து இருக்கத் தொடங்கினார் என்கிறது புராணம்.

நிவாஸ அவதாரத்தின் நோக்கம் பத்மாவதித் திருமணம் மட்டுமல்ல, மகாலட்சுமித் தாயாரின் மகிமையை உலகுக்கு உணர்த்துவதும்தான். ஊடல் கொண்டு பிரிந்திருக்கும் தாயார் மீண்டும் நித்தமும் தன் மார்பில் நீங்காமல் உறைய வேண்டும் என்று பெருமாள் சித்தம் கொண்டார்.

திருப்பதி திருமலை
திருப்பதி திருமலை
SREENIVASAN G

`அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை' என்கிறது குறள். இந்த உலக வழக்கின்படி அருளும் பொருளும் இணைகோடுகளாகவே செயல்படுவன. அதேநேரம் அருள் பெற்றவர்கள் பொருள் இல்லாமலும்; பொருள் பெற்றவர்கள் அருள் இல்லாமலும் இருக்கும் நிலையும் உண்டு.

பொருள் அகந்தையைத் தரும்; அதனால் கிடைக்கும் உலக வாழ்வில் நம்மை அமிழ்த்தும். ஆனால், மகாலட்சுமித் தாயாரின் அருளால் கிடைக்கும் பொருளோ, நம்மை ஆதிநாராயணனின் அருளுக்குப் பாத்திரம் ஆக்குவது. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டார் பெருமாள்.

திருமணம் முடிந்து திருமலைக்கு பத்மாவதித் தாயாரோடு பெருமாள் எழுந்தருளினார். வராக சுவாமியை வணங்கி இருவரும் தம் திருமண வாழ்வைத் தொடங்கினர். தனது அவதார நோக்கம் நிறைவானதில் அன்னையும் மகிழ்ந்திருந்தாள். பெருமாளோ அடுத்த லீலையைப் புரிய ஆயத்தமானார்.

ஒரு நாள், பெருமாளின் திருமுகம் வாட்டத்தைக் காட்டியது. அகத்தில் என்ன இருக்கிறது என்பதை அப்பனின் முகத்திலேயே வாசித்துவிட்டாள் பத்மாவதி. என்றாலும் பெருமாள் வாய் மலர்ந்து அதைச் சொல்லட்டும் என்று அவரையே கேட்டாள். பெருமாளும் பொய்யுரைக்காது தன் உள்ளப் பதிவை விளக்க ஆரம்பித்தார்.

``தேவி, நிர்குணபிரம்மமாக இருந்த நான், மகாலட்சுமி சித் சொரூபிணியாக என்னோடு சேர்ந்த பின்பு ஆனந்த சொரூபமானேன். அவளோடு சேர்ந்து நான் அருள்பாலித்ததாலேயே இந்த உலகைக் காக்கும் தன்மையுடையவனானேன். சொல்லப்போனால் என் மகிமை யாவும் அவள் அருள்தான். அவள் என்னைப் பிரியும் வரை சகல சௌகர்யங்களோடும் இருந்தேன். அவளைப் பிரிந்தபின்பு நான் பட்ட பாடு எல்லையற்றது. எப்படி மனிதன் ஒருவன் லட்சுமிதேவியின் அருள் இல்லாமல் போனால் கடன் படுவானோ அப்படிக் கடனும் பட்டுவிட்டேன். இந்த நிலை என்னை வருத்துக்கிறது'' என்று தன் மனதில் உள்ளதைச் சொன்னார்.

தாயாரின் கல்யாணக் குணங்களைக் கேட்டு சிலிர்த்த பத்மாவதி, ``சுவாமி, தாங்கள் மகாலட்சுமியை தேவியைப் பிரிந்திருப்பது சரியல்ல. உடனே சென்று அவரை அழைத்து வாருங்கள். உங்கள் இருவரையும் நான் பூஜிப்பேன்'' என்றாள்.

``பத்மாவதி! இப்போதுதான் நமக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. நீ என்னோடு மகிழ்வாக ஏகாந்தமாக இருக்கிறாய். மகாலட்சுமி இங்கே வந்தால் என் மார்பில் எழுந்தருள்வாள். அதை நீ எப்படி ஏற்பாய்?'' என்று பெருமாள் கேட்டார். உடனே பத்மாவதி ``தேவரீர், அவ்வாறு அவர் உங்கள் மார்பில் எழுந்தருளினால் அது என் பாக்கியம். ராமாவதாரக் காலத்தில், நான் தங்களை மணக்க சம்மதம் தெரிவித்தவர் சீதாதேவி. அத்தகைய தேவி தங்களோடு இணைந்திருந்தால் இருவரையும் பூஜிக்கும் பாக்கியம் பெறுவேன்'' என்று சொல்ல வேங்கடவன் மகிழ்ந்தார். பத்மாவதியை வகுளமாதாவிடம் விட்டுவிட்டுத் திருமகளை அழைத்துவரப் புறப்பட்டார்.

கொல்லாபுரத்தில் இருந்த திருமகள் இவர்களின் உரையாடலைத் தன் ஞான திருஷ்டியினால் அறிந்தார். பெருமாள் வந்து `தன்னோடு வா' என்று அழைத்தால் அவர் வார்த்தையைத் தட்ட இயலாது. அதேவேளை, தான் பெருமாளோடு சென்றால் பத்மாவதிக்கு தர்மசங்கடம் என்பதை எண்ணிய மகாலட்சுமி கொல்லாபுரத்தில் இருந்து பாதாள லோகத்தில் இருக்கும் கபில முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றுவிட்டாள்.

பெருமாள் கொல்லாபுரத்தை அடைந்தபோது, அங்கு மகாலட்சுமி இல்லை என்பதை அறிந்து தவித்தார். இனி திருமலைக்குச் சென்றால், திருமகளோடுதான் செல்வது என்று சங்கல்பம் கொண்டார். அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் தவம் செய்தார் பெருமாள்.

தாயார் கொல்லாபுரத்தில் இல்லை என்றதும் பெருமாள் திருமலைக்குத் திரும்பியிருக்கலாம். அதனால் அவருக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் அவர் தாயாருக்காகத் தவம் இருக்க வேண்டியது ஏன்?

இன்று திருமலையில் செல்வம் கொழிக்கிறது. தேடி வரும் பக்தர்கள் அளவின்றிக் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். காரணம் அவர்களுக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கையைவிட மிக அதிகமான செல்வம் கிடைக்கிறது. இவற்றை அருள்பவள் அந்த வேங்கடலட்சுமி அல்லவா? அத்தகைய கருணாதேவியாகத் தாயார் திருமலையில் எழுந்தருள வேண்டும் என்பதுதான் பெருமாளின் லட்சியமாக இருந்தது. அதற்காகவே அவர் திருமகளை நோக்கித் தவம் செய்தார்.

அவரின் தவம் மூவுலகையும் உலுக்கியது. வாணி, பெருமாளின் கருணையால் நெகிழ்ந்தாள். தாயாரின் அருளைப் பெறும் சூட்சுமத்தை அசரீரியாகப் பெருமாளிடம் உரைத்தார்,

``சேஷாசலம் சென்று ஸ்வர்ணமுகி நதியில் ஆயிரம் தாமரைகள் கொண்ட மலரை பிரதிஷ்டை செய்து தாயாரை நோக்கித் தவம் செய்தால், மகாலட்சுமித் தாயார் அந்தத் தாமரையில் எழுந்தருள்வாள். அப்போது உங்கள் திருமார்பில் குடியேறுமாறு வேண்டிக் கொண்டால் அன்னை அந்த வரத்தை அருள்வாள்'' என்று சொன்னது அந்த அசரீரி.

பெருமாள் உடனே கருடனை நினைத்தார். கருடன் அங்கே தோன்ற அதில் ஏறி சேஷாசலம் அடைந்தார். வாயுதேவனை நினைக்க அவர் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையைக் கொணர்ந்தார். பெருமாள் அதை ஸ்வர்ணமுகிக் கரையில் வைத்து, அதன் முன்பாக அமர்ந்து தாயாரை நினைத்துக் கடும் தவம் புரியத் தொடங்கினார்.

கடுமையான அந்தத் தவத்தின் விளைவாக அவர் உருவே மாறியது. தன் சௌந்தர்ய ரூபம் இழந்தார். தாடியும் ஜடாமுடியுமாக ஒரு ரிஷியினைப் போல மாறினார். பெருமாளின் இந்தத் திருவிளையாடலை அறியாத இந்திரன் யாரோ ஒரு ரிஷி அகோரத் தவம் செய்கிறார் என்று நினைத்தான். அந்தத் தவத்தையும் கலைக்க விரும்பினான். வழக்கம் போல தேவலோகத்துக் கன்னிகளை அனுப்பி பெருமாளின் தவத்தைக் கலைக்க எண்ணினான்.

மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களையே கலங்கடித்த அந்த மாயவனிடமா இந்த வேடிக்கைகள் ஜெயிக்கும்?

- தரிசனம் தொடரும்.

*****

வாராஹி தேவி சரணம்!

வாராஹி தேவி
வாராஹி தேவி


நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. அது காரியமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், வாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்துகொள்வதெல்லாம் எம்மாத்திரம்?

ஆடி மாதத்தில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில், ஆஷாட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.