Published:Updated:

திருமலை திருப்பதி - 17

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

அனந்தாழ்வார் தோட்டத்தில் தாயார் இருக்கிறார். அனந்தாழ்வாரிடம் அலர்மேல் மங்கையைத் தன் மகளாக பாவித்து அழைத்துவந்து எனக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லுங்கள்

திருமலை திருப்பதி - 17

அனந்தாழ்வார் தோட்டத்தில் தாயார் இருக்கிறார். அனந்தாழ்வாரிடம் அலர்மேல் மங்கையைத் தன் மகளாக பாவித்து அழைத்துவந்து எனக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லுங்கள்

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்

கண்ணன் செங்கனி, வாய்க் கருமாணிக்கம்,

தெள் நிறை சுனை நீர்த், திருவேங்கடத்து,

எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே.

- திருவாய்மொழி

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


ஆசார்ய பக்திக்கு இணையானது மூவுலகி லும் எதுவும் இல்லை. ஆசார்யனின் கண்களில் கண்ணீர் வரக் கண்டதும், உடனே எழுந்து நான் திருமலைக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டவர் அனந்தாழ்வார்.

நந்தவனம் அமைப்பதும் மாலை தொடுப்ப தும் வேங்கடவனுக்குச் செய்யும் கைங்கர்யம் தான் என்றாலும் அதன் ஜீவனாக இருப்பது ஆசார்ய பக்தி. கைங்கர்யம் செய்யப் பணித் தவர் ஆசார்யன். ஆக, பெருமாளே அழைத் தாலும் அந்தக் கைங்கர்யத்தைப் பாதியில் விட்டுச் செல்வது எப்படி சரியாகும் என்று தன்னை அழைக்க வந்தவர்களிடம் பதில் சொல்லி அனுப்பினார்.

மாலை தொடுத்து எடுத்துக்கொண்டார் அனந்தாழ்வார். வழக்கத்தைவிட மாலை மிக அழகாக வந்திருந்தது. பெருமாள் சந்நிதிக்குச் சென்றார். செல்லும்போதே அவருக்குள்ளே சிறு நாணம். பெருமாள் உரிமையாக அழைத்து அனுப்பியும் மறுத்துப் பேசிவிட்டார் அவர். ஆனாலும் அழைத்தது பெருமாள் இல்லையா... சாதாரண மனிதர்களே மறுப்புச் சொல் சொன்னால் கோபித்துக்கொள்வார்களே... இவரோ சகல லோக நாயகனாயிற்றே... அவரை அப்படிப் பேசியிருக்கலாமா என்ற வெட்கம் ஏற்பட, தலைகுனிந்த வண்ணமே உள்ளே சென்று மாலையை வைத்துவிட்டு அப்படியே திரும்பி வருகிறார்.

பொதுவாக பெருமாளுக்கு அலங்காரக் கைங்கர்யம் செய்பவர்கள் மாலை சாத்தி அலங்காரம் ஆனதும் நான்கு புறமும் நின்று அழகு பார்ப்பார்கள். அந்த அலங்காரத்தில் பெருமாளின் திருமுகம் எப்படித் தேஜஸுடன் திகழ்கிறது என்று பார்ப்பார்கள். அதில் திருப்தி ஏற்பட்ட பிறகுதான் சேவார்த்திகளை தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.

அப்படித்தான் அனந்தாழ்வாரும். பெருமா ளுக்கு மாலை சாத்தி அவர் அழகைக் கண்டு இன்புற்றுத் திருப்தி அடைந்தபின், பெரு மாளுக்குச் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்து தீர்த்தம் சடாரி பெற்றுக்கொண்டு புறப்படுவார். ஆனால் இன்றோ பெருமாள் என்ன நினைக்கிறாரோ என்கிற நினைப் பிலேயே தலையைக் குனிந்தபடி உடனே புறப்பட்டுவிட்டார்.

ஆனால் பெருமாளுக்கோ இவர் இப்படிப் பார்க்காமல் செல்கிறாரே என்கிற எண்ணம். `அனந்தாழ்வான்' என்று பெயர் சொல்லி அழைத்தார். தாய்ப்பசு அழைத்ததும் திரும்பிப் பார்க்கும் கன்றைப்போல அனந்தாழ்வார் பெருமாளை நோக்கித் திரும்பினார். பார்த்தால் அதிர்ச்சி. பெருமாளின் தாடையில் ரத்தம் கசிகிறது. அனந்தாழ்வான் துடித்துப் போனார்.

``பெருமாளே! இது என்ன சோதனை... எப்படி இந்தக் காயம் ஏற்பட்டது?'' என்று கேட்க, பெருமாளோ புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையில் அனந்தாழ்வாருக்கு சகலமும் நினைவுக்கு வந்துவிட்டது.

வேடுவச்சிறுவனாய் வந்து தன்னோடு விளையாடியது பெருமாள் என்னும் உண்மை புரிய உள்ளம் நடுங்கிப்போனார். அவர் கண்களிலிருந்து நீர் பெருகியது. திருமலையில் சிறு பூ ஒன்று விழுந்ததையே தாங்காமல் தவித்துப்போன ஆசார்யன், பெருமாளின் திவ்ய மங்கள விக்ரகத்திலிருந்து ரத்தம் சிந்தியது என்பதை அறிந்தால் எப்படித் துடித்துப்போவார் என்று நினைக்கவும் அவரின் துக்கம் பெருகியது. வேறு வழியின்றி பெருமாளின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு, ``சுவாமி! இதற்கு என்ன மருந்து?'' என்று கேட்டார் அனந்தாழ்வார்.

வேங்கடவன்
வேங்கடவன்


இந்த உலகின் பிணிகளை எல்லாம் தீர்க்க வல்லவர் அந்தப் பெருமாள். மருந்துக்கெல்லாம் மருந்தான அந்த வேங்கடேஸ்வரனுக்கு இன்னொரு மருந்து இருக்குமா என்ன?

பெருமாள் வாய் மலர்ந்தருளினார். ``என் பிரியம் என் பாகவதர்கள். அவர்களின் பாத ரேணுதான் எனக்கு எப்போதும் மருந்து'' என்று சொன்னார்.

அப்படியே செய்ய, பெருமாள் திருமுகத்திலிருந்து வடியும் ரத்தம் நின்றுபோனது. பச்சைக் கற்பூரத்தைக் காயம்பட்ட இடத்தில் சாத்துமாறு பெருமாள் கூற, அதை சாத்தியதும் ரத்தம் வடிவது நின்றுபோனது என்றும் கூறுவார்கள். இன்றும் அந்த ஸ்ரீபாத ரேணு சகல நோய்களையும் நீக்கும் அருமருந்து என்று நம்புகிறார்கள்.

அனந்தாழ்வாருக்கு மனம் சாந்தமானது. மீண்டும் தன் கைங்கர்யத்தைச் செய்யப் புறப்பட்டார். பெருமாளுக்கு சகல காலமும் புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக ஒரு மாபெரும் தோட்டம் அமைத்தார் அனந்தாழ்வார். தோட்டத்தில் சகலவிதமான மலர்ச் செடிகளும் இருந்தன. அதைக் கொண்டு அழகு அழகாக மாலைதொடுத்து பெருமாளுக்கு சாத்தி அழகு பார்த்தார் அனந்தாழ்வார். அனந்தாழ்வாரின் ஆசார்ய பக்தியும் கைங்கர்யத்தில் இருக்கும் ஈடுபாட் டையும் கண்ட பெருமாள் அவருக்கு மேலும் அருள் செய்யத் திருவுளம் கொண்டார். அடுத்த லீலையைத் தொடங்கினார்.

அனந்தாழ்வார் ஒரு நாள் காலை எழுந்து தோட்டத்துக்குச் சென்றபோது அங்கே மலர்கள் எல்லாம் பறித்துப் போடப்பட்டிருக்க, யாரோ விளையாடி இருப்பதைப் போல இருக்கவே அவருக்குக் கோபம் வந்தது.

பெருமாளுக்கு உரிய மலர்களை இப்படி வீண் செய்தது யார் என்று பதறினார். மறுநாள் காலையிலும் இதே காட்சியைக் காண நேரவே மிகுந்த கோபம் கொண்டார். அன்று இரவு யார் இந்த வேலையைச் செய்வது என்று கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி நந்தவனத்திலேயே தங்கினார்.

நள்ளிரவில் ஒரு தம்பதி தோட்டத்துக்கு வந்தனர். இருவரும் தோட்டத்தில் மலர்களைப் பறித்து ஒருவர்மேல் ஒருவர் எறிந்து விளையாடினர். வந்திருப்பது தாயாரும் பெருமாளுமே என்பதை அறியாமல், அனந்தாழ்வார் அவர்களைப் பிடிக்க ஓடினார். அப்போது ஆண்மகனானவன் வேகமாக ஓடி மறைய பெண்பிள்ளை அனந்தாழ்வாரிடம் சிக்கிக்கொண்டாள்.

திருப்பதி
திருப்பதி


``பெண்ணே நீ யார்... உன் கணவன் பெயர் என்ன?'' என்று கேட்க அதற்கு அந்தப் பெண், ``ஐயா, தாங்கள் கற்றறிந்த பண்டிதரைப் போல இருக்கிறீர்கள்... ஒரு பெண் தன் கணவனின் பெயரைச் சொல்லலாமா... மேலும் ஒரு பெண் பிள்ளையான என்னைப் பிடித்து வைப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? என்னை உங்கள் பெண்ணாக பாவித்து விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சினாள்.

ஆனால் அனந்தாழ்வாரோ, ``அது எப்படி முடியும்... நீங்கள் பெருமாளுக்குரிய தோட்டத்தை நாசம் செய்திருக்கிறீர்கள். அதற்கான தண்டனையை உன் கணவன் பெற வேண்டும். அவன் உன் மீது நிச்சயம் அன்பு கொண்டவனாக இருப்பான். எப்படியும் திரும்பி வருவான். அவன் வரும் வரை நீ இங்கிருந்து செல்ல முடியாது'' என்று சொல்லி, தாயாரைக் கட்டிப்போட்டார்.

விடிந்தது. அர்ச்சகர்கள் பெருமாளுக்கு சுப்ரபாத சேவை செய்ய வந்தபோது தாயார் இல்லாமல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.

பெருமாள் அவர்களை ஆசுவாசப் படுத்தி நடந்தவற்றை எடுத்துச் சொல்லி, ``அனந்தாழ்வார் தோட்டத்தில் தாயார் இருக்கிறார். அனந்தாழ்வாரிடம் அலர்மேல் மங்கையைத் தன் மகளாக பாவித்து அழைத்துவந்து எனக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லுங்கள்'' என்று அருள்பாலித்தார்.

அர்ச்சகர்கள் ஓடிச்சென்று நடந்த வற்றை அனந்தாழ்வாரிடம் சொல்ல அவர் பதறிப்போனார்.

அவரைத் தேற்றிய தாயார், ``தாம் விரும்பியபடி உமக்கு மகளானோம். எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. முறைப்படி என்னை அந்த வேங்கடவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்'' என்று அருளினார்.

அனந்தாழ்வார் இதெல்லாம் ஆசார்யனின் அனுகிரகமே என்று மகிழ்ந்தார். மேள தாளங்களுடன் தாயாரை சந்நிதிக்கு அழைத் துச் சென்று திருமணம் முடித்துவைத்து வேங்கடவனின் மாமனார் ஆனார்.

ஆசார்யனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனந்தாழ்வார் செய்த கைங்கர்யம் அவருக்கு அளித்திருக்கும் பாக்கியம் எப்பேற்பட்டது என்று பாருங்கள். இத்தோடு அவருக்குக் கிடைத்த பாக்கியம் முடிந்து விடவில்லை. அடுத்து பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல் மிகப்பெரியது.

அனந்தாழ்வாரின் திருப்பெயரைத் திருப்பதி உள்ள அளவுக்கும் நிலைத்திருக்கும் படிச் செய்துவிட்டது அந்தத் திருவிளையாடல்!

- தரிசனம் தொடரும்.

`இருப்பது போதும்!'

அரசனுக்கும், கல்லாத ஏழைப் பாமரனுக்கும், 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்கின்றன ஞானநூல்கள். ஆக பேராசை கொள்வதிலும், அந்த ஆசையை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொள்வதும் தவறு என்று பெரியோர்கள் சுட்டிக்காட்டுவார்கள்.

ஜைகீஷவ்யன் என்ற முனிவர் ஒருவர். ஆசையற்ற இவரை சோதிக்க விரும்பினார் ஆண்டவன். பார்வதிதேவியுடன் முனிவரின் முன் தோன்றினார். அப்போது, தன் உடம்பை மூடும் கந்தைத் துணியை, ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தார் முனிவர். அவரிடம், ''நீ விரும்புவதை வழங்கவே வந்திருக்கிறோம். வேண்டியதை தயங்காமல் கேள், தருகிறோம்!'' என்றார் ஈசன்.

உடனே முனிவர், ''இறைவா, இந்தப் பிறவிக்கு வேண்டியது அனைத்தும் உங்கள் அருளால் எனக்கு ஏற்கெனவே கிடைத்து விட்டது. புதிதாக எதுவும் வேண்டாம். இருப்பதிலேயே திருப்தியுடன் இருக்கிறேன்!'' என்று கை கூப்பி வணங்கினார்.

நாமும் இருப்பதில் திருப்தி கொள்ள பழகுவோம்!

-சி.ராஜி, சேலம்