Published:Updated:

திருமலை திருப்பதி - 7

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 7

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

'துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு

உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்

அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.'


திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

- திருமங்கையாழ்வார். தொண்டை மண்டலத்தில் இருக்கும் திவ்யதேசங்களில் திருஅல்லிக்கேணி என்னும் பிருந்தாரண்ய க்ஷேத்திரத்துக்குத் தனிப்பெருமை உண்டு. அதற்குக் காரணம் அங்கே திருவேங்கடவன், வேங்கட கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதுதான். அங்கே பார்த்தசாரதி பெருமாள் உற்சவராக இருப்பதால் அது `பார்த்தசாரதி கோயில்' என்று புகழப்பட்டாலும் அங்கே அருளும் மூலவர் சாட்ஷாத் திருப்பதிப் பெருமாளே!

முன்னொரு காலத்தில் ஸூமதி என்னும் அரசன் ஒருவன் திருமலைக்குப் போய் அங்கே சுவாமி புஷ்கரிணியில் நீராடி வேங்கடவனை தரிசனம் செய்து சில காலம் அங்கேயே தங்கி சில கைங்கர்யங்களும் செய்து வந்தான். அவ்வாறு ஒரு நாள் அவன் தரிசனம் முடித்துப் பின்பு சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பம் செய்தான்.

``நிவாசா நீர் பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாய் அல்லவா, அந்தக் கோலத்தில் எனக்குத் திருக்காட்சி அருள வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார்.

பெருமாளும் திருவுளம் கனிந்து அவன் முன்னே தோன்றி, ``மயிலை பிருந்தாவனத்தில் கைரவீணி புஷ்கரிணிக் கரையில் தவம் செய்தால் அங்கே திருக்காட்சி அருள்வேன்'' என்று சொல்ல அதற்கேற்ப ஸூமதி திருவல்லிக்கேணிக்கு வந்து தவம் செய்ய வேங்கடவன் திருக்காட்சி அருளினார் என்கிறது தலபுராணம்.

வேங்கடவனே வேங்கட கிருஷ்ணனாக எழுந்தருளி சேவை சாதிக்கும் தலமாக திருவல்லிக்கேணி மாறியது. ஸூமதி என்னும் இந்த ராஜனே தொண்டைமான் சக்கரவர்த்தி என்பாரும் உண்டு.

திருப்பதி வேங்கடவன் தொண்டைமான் சக்கரவர்த்தியோடு சிநேகிதன் போலப் பழகியவர். அவனோடு நேருக்கு நேராகப் பேசுபவர். அவன் யுத்தம் செய்யச் சென்றபோது தொண்டைமான் சக்கரவர்த்திக்கு சாரதியாகவும் திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனுடன் நட்பு பூண்டான். எப்படி அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததுபோல தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஏழு நாழிகைகளில் ஏழு ரகசியங்களை உபதேசம் செய்தார் என்கின்றன புராணங்கள்.

இதைத்தான் திருமங்கையாழ்வார் பாடும்போது, உன்னைத் தவிர வேறு அறியாத மகாபக்தனான தொண்டைமான் சக்ரவர்த்திக்கு நீ மந்திரோபதேசம் செய்து அருளியது போல, எனக்கும் மெய்யுணர்வையுண்டாக்கி அருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறார். தொண்டைமான் சக்கரவர்த்தி திருமலையில் இருந்து பெருமாளுக்கு சேவை செய்துகொண்டு ராஜ்ஜிய பரிபாலனமும் செய்துவந்தான்.

அப்போது ஒரு நாள் சந்திரபுரி என்னும் ஊரிலிருந்து கிருஷ்ண சர்மா என்னும் அந்தணர் தன் மனைவியோடும் குழந்தையோடும் தொண்டைமான் சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு வந்தார். மன்னர் அந்த அந்தணரை வரவேற்று அவருக்கு உபசரித்தான்.

பிறகு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, அந்த அந்தணர், 'தான் காசி செல்ல விரும்புவதாகவும், இளம் மனைவியையும் குழந்தையையும் அந்தக் கடுமையான யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மன்னனே தனக்கு உதவ வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். மன்னனும் அவர் காசி சென்று வரும் வரைக்கும் அவரின் மனைவியையும் குழந்தையையும் பாதுகாப்பதாக உறுதி அளித்து யாத்திரை சென்று வர வழிகாட்டினார்.

இளம் பெண்ணையும் குழந்தையையும் மன்னன் ஒரு வீட்டில் தங்க வைத்து வாழ்ந்து வருமாறு சொல்லி விடைபெற்றான். அதன்பிறகு அலுவல்களில் மூழ்கிப்போய் அவர்களை மறந்துபோனான். ஓராண்டு ஆயிற்று. அந்த அந்தணர் காசியிலிருந்து திரும்பி வந்தான். அவரைக் கண்டதும்தான் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அவன் மனைவி, குழந்தை பற்றிய நினைவு வந்தது. அதற்காக உள்ளூர வருந்தினான். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாது அவரை வரவேற்று செய்ய வேண்டிய உபசாரங்களை செய்தான். பிறகு அவர்களை அழைத்து வரச் சென்றான். அவனுக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அந்தப் பெண்ணும் அவள் குழந்தையும் அங்கே அஸ்தியாக இருந்தனர். இதைக் கண்டதும் மன்னன் மனம் துடிதுடித்தது. 'பாதுகாப்பதாய்த் தான் தந்த வாக்கு இப்படிப் பொய்த்துவிட்டதே' என்று வருந்தினான். ஏழுமலையானைச் சரணடைந்து கதறினான். பெருமாள் அவனை ஆறுதல் படுத்தினார். "உன் வாக்கு பொய்த்துப் போகாதபடிக்குக் காப்பேன்" என்று சொல்லி இருவரின் அஸ்தியையும் கொண்டுவந்து தீர்த்தம் ஒன்றில் இடுமாறு ஆணையிட்டார்.

மன்னன் ஓடிவந்து நடந்தவற்றை அந்த அந்தணரிடம் சொல்லி இருவருமாக அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்தத்துக்குச் சென்று அதில் அஸ்தியை இட்டனர். என்ன ஆச்சர்யம், அந்தப் பெண்ணும் குழந்தையும் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி எழுபவர்கள் போல முன்னைவிட தேஜஸோடு எழுந்தனர். இதைக் கண்ட அந்தணரும் மற்றவர்களும் சிலிர்த்தனர். அஸ்தியை உயிர்பெற வைத்த அந்தத் தீர்த்தத்துக்கு 'அஸ்திகுண்ட தீர்த்தம்' அல்லது 'அஸ்தி தீர்த்தம்' என்றே பெயரானது. தீர்த்தமாட உகந்த காலம் என்று சொல்லப்படுகிறது.

இப்படித் திருமலையில் மகிமை நிறைந்த தீர்த்தங்களுக்குக் குறைவே இல்லை எனலாம். அதுபற்றி விரிவாகக் காணலாம்.

- தரிசிப்போம்...

திருப்பம் தருமா திருப்பதி?

readers experience
readers experience


“திருப்பதி செல்லும் எல்லோருக்கும் திருப்பம் நேராது. சிலருக்கு பலன்கள் எதிர்மறையாகவும் இருக்கலாம்!” என்று ஒருவர் எப்போதோ என்னிடம் சொன்னார். அதை நானும் நம்பியிருந்தேன். அதனால் திருப்பதி செல்வதையும் தவிர்த்தே வந்தேன்.

கொரோனா அலை தொடங்கிய 2020 பிப்ரவரி மாதம், தொழிலில் கடும் நெருக்கடியான சூழல். கிட்டத்தட்ட ஒன்றும் இல்லாத சூழ்நிலை. அப்போது, மாதந்தோறும் திருப்பதி சென்று வரும் எங்களின் குடும்ப நண்பர் நவநீதகிருஷ்ணன், திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்றுவரும்படி வற்புறுத்தினார். 'இருக்கும் பிரச்னையில் எங்காவது போய் வரலாம்' என்ற எண்ணத்தில், வேறெந்த சிந்தனையுமின்றி குடும்பத்தினருடன் கோயிலுக்குக் கிளம்பினேன். திருப்பதி வேங்கடவன் நல்ல வாழ்க்கை அருளட்டும் என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டேன்.

என்ன ஆச்சர்யம்... மலை மேல், பார்க்கிங்கில் காரை நிறுத்திய அந்த நொடியில் ஒரு போன் அழைப்பு. எனக்கு என்ன பிரச்னை இருந்ததோ, அதற்கு யார் உதவ முடியும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அந்த நபர் என்னை அழைத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அவரிடம் என் நிலையைச் சொன்னால் மட்டும் போதும். ஆனாலும், இதற்கு முன்பு நான் பலமுறை அவரிடம் பேச முயன்றும் இயலவில்லை. ஆனால் திருமலையில் கால் வைத்த போது அவரின் அழைப்பு வந்தது. எல்லாம் வேங்கடவனின் விளையாடல் என்று நினைத்துக்கொண்டு அப்போதே போனில் பேசினேன். நான் நினைத்ததுபோலவே என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. முக்கியமாக, என் மனபாரம் அங்கேயே இறங்கியது. திருப்பதி சென்று வா திருப்பம் வரும் என்று சொன்ன நண்பர் நவநீதகிருஷ்ணனை நினைத்துக்கொண்டேன். பெருமாள் நண்பர் மூலம் திருப்பதிக்கு அழைத்து வந்து என் மனக்கருத்தை மாற்றியதோடு நல்ல வாழ்வையும் எனக்குக் கொடுத்தார். எனவே திருப்பதி சென்றால் திருப்பம் வரும். அதுவும் நல்ல திருப்பமாக இருக்கும் என்பது என் அனுபவம் சொல்லும் பாடம்.

- மு. ஆதவன், கூடலூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism