Published:Updated:

திருமலை திருப்பதி - 11

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்

குபேரனிடம் ஶ்ரீநிவாசன் கல்யாணச் செலவுகளுக்காகக் கடன் கேட்டார். தான் வாங்கும் கடனுக்குப் பத்திரம் எழுதித் தந்து, கலியுகம் முடியும்வரை பக்தர்கள் செலுத்தும் காணிக்கையிலிருந்து வட்டி செலுத்துவதாகவும் கலியுக முடிவில் அசலைச் செலுத்திவிடுவதாகவும் பெருமாள் சொல்ல, குபேரன் ஆடிப்போனான்.

திருமலை திருப்பதி - 11

குபேரனிடம் ஶ்ரீநிவாசன் கல்யாணச் செலவுகளுக்காகக் கடன் கேட்டார். தான் வாங்கும் கடனுக்குப் பத்திரம் எழுதித் தந்து, கலியுகம் முடியும்வரை பக்தர்கள் செலுத்தும் காணிக்கையிலிருந்து வட்டி செலுத்துவதாகவும் கலியுக முடிவில் அசலைச் செலுத்திவிடுவதாகவும் பெருமாள் சொல்ல, குபேரன் ஆடிப்போனான்.

Published:Updated:
திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு 2014-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கடிதம் வந்தது. அதில், நான்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

ஶ்ரீபாலாஜி எதற்காக குபேரனிடம் கடன்பட்டார்?, பக்தர்கள் தரும் பணத்திலிருந்து இதுவரை எவ்வளவு ரூபாய் கடன் அடைக்கப்பட்டுள்ளது?, அசல் எவ்வளவு வட்டி எவ்வளவு?, இன்னும் எவ்வளவு தொகை குபேரனுக்கு ஶ்ரீநிவாசன் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது? இவைதான் அந்த நான்கு கேள்விகள்!


இதை என்னவென்று சொல்வது? நம் புராண-இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை நேரடியாகப் பொருள் கொண்டு குதர்க்கமாகக் கேள்வி கேட்கும் பலர், இதுபோல உலகில் இருக்கிறர்கள். புராணத்தின்படி ஶ்ரீபத்மாவதி கல்யாணத்துக்குத் தேவையான பணத்தை ஶ்ரீநிவாசன் வராக சுவாமியிடம் கேட்டார். வராக சுவாமி `தேவர்கள் இத்திருமணத்தைச் சிறப்பாக நடத்திவைப்பார்கள்' என்று ஆசி வழங்கினார்.

தேவர்களுக்குத் திருமணச் செய்தி சொல்லப்பட அவர்கள் கூடிவந்தார்கள். சிவ பெருமானும் பிரம்மனும் தங்கள் துணைவி யோடும் அடியார்களோடும் திருமலையில் குழுமினார்கள். தேவேந்திரனும் குபேரனும் பிற தேவர்களும் திருமலைக்கு வந்தனர்.

குபேரனிடம் ஶ்ரீநிவாசன் கல்யாணச் செலவுகளுக்காகக் கடன் கேட்டார். தான் வாங்கும் கடனுக்குக் கடன் பத்திரம் எழுதித் தந்து, கலி யுகம் முடியும்வரையிலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையிலிருந்து வட்டி செலுத்துவதாகவும் கலியுக முடிவில் அசலைச் செலுத்திவிடுவதாகவும் பெருமாள் சொல்ல, குபேரன் ஆடிப்போனான்.

ஶ்ரீநிவாசன் - பத்மாவதி திருக்கல்யாணம்
ஶ்ரீநிவாசன் - பத்மாவதி திருக்கல்யாணம்



செல்வத்தின் அதிபதி ஶ்ரீநிவாசர் ஆகிய ஶ்ரீமந் நாராயணன். அவர் கண் அசைத்தால் அவரின் தேவி செல்வ மழை பொழிவாள். அப்படியிருக்க தன்னிடம் இப்படிக் கேட்க லாமா என்று சொல்லி வணங்கி, `கடன் பத்திரம் எதுவும் தேவையில்லை. வேண்டும் செல்வத்தைத் தருகிறேன்' என்றான் குபேரன்.

ஶ்ரீநிவாசனோ அதை மறுத்து சிவபெருமா னும், பிரம்மனும், அரசமரமும் சாட்சியாக இருக்க ஒரு பத்திரம் எழுதி குபேரனிடம் கொடுத்தார். பின்பு கல்யாணச் செலவுக்காக 14 லட்சம் வராகனைக் கடனாகப் பெற்றார் என்கிறது புராணம்.

`ஶ்ரீநிவாசன் யார்' என்று ஆகாசராஜனுக்கு சுகப் பிரம்மம் மூலம் தெரியும். அப்படியிருக்க, ஶ்ரீநிவாசப் பெருமாள் பிரசன்னமானாலே கொண்டாட அவனும் ரிஷிகளும் பாகவதர் களும் தயாராக இருப்பார்கள். எனவே, பெருஞ் செல்வத்தைக் கடனாகப் பெற்றுச் செலவழித்து, தன் கௌரவத்தைக் காட்ட வேண்டிய அவசியம் பெருமாளுக்கு இல்லை அல்லவா? மட்டுமன்றி குபேரனிடம் இருக்கும் செல்வம் அவன் பிதுர் ராஜ்ஜிய சொத்து அல்ல; அது சிவபெருமான் அவனுக்கு அருளியது. அப்படியிருக்க, இங்கே நிகழ்ந்த பரிவர்த்தனை ஒரு திருவிளையாடலின் நிமித் தமே என்பதை அனைவரும் அறிவார்கள்.

`கலி யுகம் முடியும்வரை திருமலையில் நிலைகொண்டு பக்தர்களுக்கு அருள்வேன்' என்று பெருமாள் வாக்குக் கொடுக்கிறார். அதற்கு இணையாக எத்தனை பொருளை பக்தர்கள் கொடுத்துவிட முடியும். யுகம் யுகமாகக் கொட்டிக்கொடுத்தாலும் அவன் அருளுக்கு இணையான பொருளைக் கொடுத்துவிட முடியுமா?

நடப்பது அனைத்தும் அவரின் திருவுளப் படியே அல்லவா? அப்படியிருக்க, பெருமாள் இன்னும் எவ்வளவு கடன் அடைக்க வேண் டும் என்று கேட்பது வேடிக்கை அல்லவா?

இந்தப் புவனம் கொண்டாடிய வைபவம், பத்மாவதி - ஶ்ரீநிவாசர் திருக்கல்யாணம். அதைக் காணும் வாய்ப்புப் பெற்ற தேவர்களும் முனிவர்களும் உற்சாகத்தில் இருந்தனர்.

வைபவங்கள் ஒவ்வொன்றாகக் களைகட்டத் தொடங்கின. விஸ்வகர்மா நாராயணபுரத்தில் சுவர்ண மண்டபம் ஒன்றை அமைத்து, அதில் மாணிக்கச் சரங்களைக் கட்டி அலங்காரம் செய்தார். கொண்டாட்டம் கரைபுரண்டது.

ஆனால், ஶ்ரீநிவாசனோ மிகவும் வாடிய முகத்தினராய் இருந்தார். திருமணத்துக்குப் புறப்படும் முன்பாக மணமகனுக்கு மங்கல ஸ்நானம் செய்வது வழக்கம். ஶ்ரீநிவாசனை அப்யங்கன ஸ்நானம் எனப்படும் எண்ணெய்க் குளியலுக்கு வருமாறு பிரம்மதேவர் அழைத்தார். ஆனால் ஶ்ரீநிவாசன் வர மறுத்தார்.

காரணம் கேட்டபோது, ``லட்சுமிதேவி என் அருகில் இல்லாமல் அப்யங்கன ஸ்நானம் செய்வதற்கு என் மனம் ஒப்பவில்லை'' என்றார். உடனே சூரியதேவர் கொல்லா புரத்தில் இருக்கும் லட்சுமிதேவியைச் சந்தித்து ஶ்ரீநிவாசப் பெருமாளின் வருத்தத்தைச் சொல்லித் தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். லட்சுமிதேவியும் மனம் உருகி திருமலைக்கு உடனே ஆகாச மார்க்கமாக வந்தடைந்தார்.

ஶ்ரீநிவாசனின் முகம் பிரகாசம் அடைந்தது. தேவியை வரவேற்றார். நடந்த அனைத்தையும் அவளுக்கு எடுத்துரைத்தார். ``உன் சம்மதம் இருந்தால் மட்டுமே இந்தத் திருமணம் நடக்கும்'' என்றார். சகலமும் உணர்ந்த மகாலட்சுமி தன் சம்மதத்தைத் தெரிவித்தார். மங்கல ஸ்நானம் சிறப்புற நடைபெற்றது.

திருமலை வேங்கலாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்
திருமலை வேங்கலாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்

மறுநாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, தாயாரோடு ஶ்ரீநிவாசப் பெருமாள் சேஷா சலத்தில் இருந்து இறங்கிக் கபிலத் தீர்த்தம் வழியாக நாராயணபுரத்தை வந்தடைந்தார். அன்றே நாராயணபுரம் விழாக்கோலம் பூண்டது. மறுநாள் ஶ்ரீநிவாசப் பெருமாள் ஐராவதத்தின் மீது ஏறிச் சென்றார்.

அப்போது ஆகாசராஜனின் அரண்மனைக்கு முன்பாக பாகவதர்களும் ரிஷிகளும் குழுமியிருந்தனர். ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஐராவதத்தில் இருந்து இறங்கி சிங்கம் போல் நடந்து வந்தாராம்.

அரண்மனை வாசலில் அரசியும் பிற சுமங்கலிகளும் கூடி வந்து அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பெருமாள் தேவியுடன் அந்தப்புரம் சென்று அங்கே இருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

வசிஷ்ட மகரிஷி திருமணத்துக்கான வேள்விகளைச் செய்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே குழுமியிருந்தனர். ஆகாசராஜன் பத்மாவதியை ஶ்ரீநிவாசப் பெருமாளுக்குக் கன்னிகா தானம் செய்துகொடுத்தார்.

அதன்பிறகு மாங்கல்ய தாரணம் நடைபெற, சகல ஜீவ ராசிகளுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கியது. அதைக் கண்ணாரக் கண்ட தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மெய்சிலிர்த்தனர்.

யசோதையின் மறுபிறவியான வகுளாதேவி, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்துத் தன் ஏக்கம் தீர்த்தார். வேதவதியின் மறுபிறவியான பத்மாவதித் தாயார் தன் அவதார நோக்கம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்தார். வந்திருந்தவர்களுக்கு நாராயணபுரத்திலிருந்து ஶ்ரீசைலம் வரையிலும் பந்தி போட்டு விருந்து பரிமாறினார்கள் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ஜனங்கள் குவிந்தனர்.

ஆகாசராஜன் மணமக்களுக்கு வழங்க வேண்டிய வஸ்திரம் முதலான மரியாதைகளைச் செய்ய, ஶ்ரீநிவாசப் பெருமாள் பத்மாவதியோடு திருமலைக்குப் புறப்படத் தயாரானார். அதைக் கண்டு ஆகாசராஜனின் மனம் வாடியது.

- தொடரும்...

அனுமன் என்ற பெயர் ஏன் தெரியுமா?

அனுமன் சூரியனை விழுங்கச் செல்லுதல்
அனுமன் சூரியனை விழுங்கச் செல்லுதல்

ஆஞ்சநேயன் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள், வானத்தில் ஒளி வீசிய சூரியனைப் பார்த்தான். அது, சாப்பிடக் கூடிய ஏதோ ஒரு பழம் என்று நினைத்து, அதை எடுப்பதற்காக ஆகாயத்தில் தாவினான். அதனால் கோபமுற்ற இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் ஆஞ்ச நேயனைத் தாடையில் அடித்தான். மூர்ச்சையாகி பூமியில் வீழ்ந்தான் ஆஞ்சநேயன். அவனைத் தன் கையில் ஏந்தி, குகை ஒன்றுக்குள் புகுந்தார் வாயு.

வாயு இல்லாமல் உலகம் அல்லல் பட்டது. தேவர்கள் அனைவரும் வந்து அனுமனை மூர்ச்சை தெளிவித்து பல வரங்களை வழங்கினார்கள். சூரியன் தனது ஒளியில் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு வழங்கினார். நிறைவில் இந்திரன், ‘‘இவனுக்கு ‘அனு’வில் (தாடையில்) அடிபட்டதால் இவன் இனி ‘அனுமன்’ என்று அழைக்கப்படுவான்!’’ என்று அருளினான்.

- கி.ராஜு, வள்ளியூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism