Published:Updated:

திருமலை திருப்பதி - 4

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

குரங்கு ஒன்று விளையாடும் அழகைப் பாடுகிறார் பேயாழ்வார். கையில் களாம்பழத்தோடு ஒரு தீர்த்தத் தடாகத்தில் நிற்கிறது ஒரு குரங்கு.

திருமலை திருப்பதி - 4

குரங்கு ஒன்று விளையாடும் அழகைப் பாடுகிறார் பேயாழ்வார். கையில் களாம்பழத்தோடு ஒரு தீர்த்தத் தடாகத்தில் நிற்கிறது ஒரு குரங்கு.

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

பார்த்த கடுவன் சுனைநீர் நிழல்கண்டு,

பேர்த்துஓர் கடுவன்எனப் பேர்ந்து - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே மேல்நாள்

விளங்கனிக்குக் கன்றுஎறிந்தான் வெற்பு.


- பேயாழ்வார்

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


திருப்பதி மலை வளத்தைப் பாடுகிறபோது, நிறைய இடங்களில் குரங்குகளையே பாடுகிறார்கள் ஆழ்வார்கள். `மந்திபாய் வடவேங்கட மாமலை' என்பதுதான் திருப்பாணாழ்வார் வாக்கு. ஓரிடத்தில் குரங்குகள் பெருகித் தாவி விளையாடுகின்றன என்றால், அந்த இடம் மிகவும் செழித்துக் காணப்படுகிறது என்று பொருள். அப்படித்தான் திருமலையின் செழுமை யைப் பாடும்போதும் குரங்குகள் ஆழ்வார்களின் பாசுரங்களில் இடம் பிடிக்கின்றன.

குரங்கு ஒன்று விளையாடும் அழகைப் பாடுகிறார் பேயாழ்வார். கையில் களாம்பழத்தோடு ஒரு தீர்த்தத் தடாகத்தில் நிற்கிறது ஒரு குரங்கு. தடாகத்தில் அந்தக் குரங்கின் பிம்பம் தெரிகிறது. குரங்கு, அதைத் தன் பிம்பம் என்று உணராமல் மற்றொரு குரங்கு அங்கே இருக்கிறது என்று நினைத்துத் தன் கையில் இருந்த பழத்தால் அந்தக் குரங்கை அடித்ததாம்.

உடனே அந்தப் பழம் தண்ணீரில் விழுந்து மூழ்கியது. சில நேரம் கலங்கியிருந்த பிம்பம் மீண்டும் கூட, தன் கைப்பழம் போனதை உணர்ந்துகொண்ட குரங்கு, தண்ணீருக்குள் இருக்கும் குரங்குதான் பழத்தை வைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டதாம். ஆகவே கையை நீட்டி, `எனக்குக் களாம்பழம் தா' என்று வேண்டியது எனச் சித்திரிக்கிறார் ஆழ்வார்.

மட்டுமன்றி, `கன்று உருவில் வந்த வத்ஸாசுரனை விளாமரத்தில் மோதி கொன்று விளாங்கனி எடுத்து உண்ட கண்ணன் ஸ்ரீநிவாசனாக அருளும் வேங்கட மாமலை' என்று பாடுகிறார் பேயாழ்வார்.

இப்படிக் குரங்கும் திருமலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து போற்றப்படக் காரணம், ஏழுமலைகளில் ஒரு மலை அஞ்சனாத்ரியாகத் திகழ்வதுதான். முன்னொரு காலத்தில் கேசரி என்றொரு வானர ராஜன் இருந்தார். அவருக்கு அஞ்சனாதேவி ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்போது ரிஷிகள் எல்லோரும் திருமலையின் மகிமையைச் சொல்லி அங்கே சென்று தவம் செய்யுமாறு சொல்ல அஞ்சனா ஏழுமலையில் இரு மலையில் வந்து இருந்து தவம் செய்கிறாள். அவளுக்கு வாயுபகவான் அனுக்கிரகம் செய்ய அவளுக்கு வாயு பகவானின் ஆசியால் புத்திர சந்தானம் உண்டானது.

அந்த மலையிலேயே பத்துமாதங்களும் தங்கியிருந்தாள் அஞ்சனை. அங்கேயே அந்தக் குழந்தை பிறந்தது. அஞ்சனைக்குப் பிறந்ததாலே அவர் ஆஞ்சநேயர் என்றானார். அவர் அவதாரம் என்பதால் பிறந்த உடனேயே பிரம்மச்சாரி ரூபத்திலே தலையில் சிகை, யக்ஞோபவீதம், மான்தோல் ஆகியவை தரித்து தரிசனம் கொடுத்தாராம். பொதுவாகவே சுவாமி தரிசனம் பெற்றதும் நைவேத்தியம் பண்ணுவதுதான் முறை. ஆஞ்சநேயர் தன் தரிசனத்துக்குப் பிறகு நிவேதனம் வேண்டி, தாயாரிடத்திலே தனக்குப் பசிக்கிறது என்று சொன்னார். அஞ்சனா பழங்களைத் தேடி ஓடினாள்.

ஆஞ்சநேயரோ ஆஸ்ரமத்திலிருந்து வெளியே வந்தார். மேலே அப்போதுதான் சூரியபகவான் ஒரு பழம்போல் ஜொலித்துக் கொண்டிருக்க அதைப் பழம் என நினைத்து பறிக்கப் பாய்ந்தார். வாயு புத்திரன் அல்லவா நினைத்த மாத்திரத்தில் பறக்க முடிந்தது. தேவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். யார் இந்தப் பிள்ளை சூரியனை நோக்கிப் பாய்கிறதே என்று தடுக்க முயன்றனர்.

ஹனுமன்
ஹனுமன்


முடியவில்லை. கடைசியில் இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் குழந்தையைத் தாக்கினார். குழந்தை அடிபட்டுக் கீழே விழுந்தது. அப்போது அதன் தாடை நீண்டது. அதனால் `ஹனுமன்' என்று அழைக்கப்பட்டார். ‘ஹனு’ என்றால் ‘தாடை'; ‘மன்’ என்றால் ‘பெரியது’ என்று பொருள்.

தன் குழந்தை அடிபட்டுக் கிடப்ப தைக் கண்ட வாயு பகவான் கோபம் கொண்டார். பிரபஞ்சத்தில் காற்றை ஸ்தம்பிக்கச் செய்தார். அனைத்து ஜீவராசிகளும் தவித்துப்போனார்கள். தேவர்கள் வாயுபகவானை சமாதானம் செய்தனர். அனுமனுக்கு ஒவ்வொரு தேவதையும் ஒரு பராக் கிரமம் வழங்கிட, நிறைவில் சர்வ பலசாலியாக அவரைக் கண் விழிக்கச் செய்தனர் என்கிறது புராணம். இவை எல்லாம் நிகழ்ந்து திருமலை யில் அஞ்சனாத்ரியில்தான்.

ராமாயணம் இந்த தேசத்தை இணைக்கும் காவியம். அதில் பிரதானமானவர் அனுமன். அப்படிப்பட்ட அனுமன் பிறந்த தலம் அஞ்சனாத்ரிதான் என்று சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரகடனம் செய்துள்ளது. அதற்குப் புராணங்களில் காணப்படும் பல்வேறு தகவல்கள் ஆதாரங்களாகக் கூறப்பட்டன. இவை எல்லாம் நமக்குச் சொல்லுபவை ஒன்றுதான். திருமலை திருப்பதி சதுர்யுகங்களாக நிலைத்து நிற்கிறது. அவ்வாறு நிலைத்து நிற்பதன் காரணம் உலக நன்மை என்பதைத் தவிர வேறு இல்லை.

அங்கே கலியுகத்தில் எல்லோரும் தேடிவந்து சரணடைய ஏதுவாக மந் நாராயணன் நிவாசனாகக் கோயில்கொண்டார்!

நாராயணன் எனும் அந்தணர் இருந்தார் அவர் இறைவனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும் என்று விரும்பித் தவம் செய்தார். அப்போது பிரம்மா அவருக்குக் காட்சிகொடுத்து, `எங்கு அவன் சாந்நித்தியம் நிறைந்திருக்கிறதோ, அங்கு சென்று தவம் செய். அவனே தோன்றி வழிகாட்டு வான்' என்று கூறி, ஏழுமலைக்குச் செல்லும்படி வழிகாட்டினார்.

நாராயணனும் ஏழுமலைக்கு வந்து அங்கே ஒரு மலையில் தவம் செய்தார். பெருமாள் மகிழ்ந்து அவருக்குக் காட்சி கொடுத்து, தன்னை வழிபட வேண்டிய முறைமைகளையும் உபதேசித்தார். அப்படிப் பெருமாளால் உபதேசிக்கப்பட்ட வழிபாட்டு முறைக்கு `வைகானசம்' என்று பெயர். திருப்பதி, திருமாலிருஞ்சோலை ஆகியவை வைகானச முறைப்படி இறைவன் வழிபடப்படும் திருத்தலங்கள். இப்படி, இறைவன் இந்த மண்ணுலகில் தனக்கான ஆகமங்களை உரைக்கக் காரணமாயிருந்த நாராயணர் தவம் செய்த மலை என்பதால் அந்த மலைக்கு நாராயணாத்ரி என்று பெயர் உண்டானது.

இப்படி திருமலையின் ஒவ்வொரு மலைக்கும் பல்வேறு சிறப்புகள் இருக்க, அவற்றின் மையமாய் நின்று அருள்பாலிக்கிறான் வேங்கடவன். அந்த வேங்கடவனை வழிபட, நம் முன்னோர்கள் பல்வேறு நியதிகளை வகுத்திருக்கிறார்கள். திருமலைக்குச் செல்லும் முன் செய்ய வேண்டி யவை எவை? தரிசிக்க வேண்டிய தலங்கள் யாவை? திருமலையிலும் அதைச் சுற்றியிருக்கும் திருத்தலங்கள் என்னென்ன என்பன குறித்து வரும் பகுதிகளில் அறிந்துகொள்வோம்.

- தரிசனம் தொடரும்...

பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்

`நினைத்ததை நடத்தி வைப்பான் வேங்கடவன்'

- பாடகர் வேல்முருகன்-

ஒவ்வொரு முறையும் திருப்பதிக்குச் சென்று வழிபட்டு வரும்போது எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். அதில் சிலிர்த்துப் போகும் சம்பவம் ஒன்று உண்டு, அது...

என் மகள் கைக்குழந்தையாக இருந்தபோது திருப்பதிக்குப் போனோம். தனியாக வந்தால் பிரச்னையில்லை... குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டே `பெருமாளே நீ விட்ட வழி' என்று நினைத்துக்கொண்டேன்.

அங்கே க்யூ காம்ப்ளக்ஸ் வாசலுக்குச் சென்றபோது அங்கிருந்த ஒரு நிர்வாகி, `சார், நீங்கள் குழந்தையோடு கஷ்டப்பட வேண்டாம், வாருங்கள்' என்று அழைத்துச்சென்று இரண்டே நிமிடத்தில் சாமி முன்பாக நிறுத்திவிட்டார்.

நம்பமுடிகிறதா... யார் அந்த அதிகாரி... அவருக்கு என்னை எப்படித் தெரியும்... எதுவும் எனக்குத் தெரியாது. பிறகு நான் பாடகர் என்பதை யாரோ சொல்ல என்னை சில நிமிடங்கள் நிற்க அனுமதித்தனர். வாழ்வில் ஈடில்லாத தருணங்கள் அவை. மனதாரப் பிராத்தனை செய்து வெளியே வந்தேன். அப்போது மனதில் ஒரு விஷயம் தோன்றியது. பெருமாளிடம் எதையாவது வேண்டிக்கொண்டால் அதை நிறைவேற்றாமல் இருக்கவேமாட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism