
திருமலை திருப்பதி
இந்த உலகத்தில் நிரந்தரமான தர்மங்கள் இறைபக்தியும் சக உயிர்கள் மீது வைக்கும் அன்பு மட்டுமே. மற்ற அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை. அவற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லவே மகான்கள் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களை அவ்வளவு எளிதாக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அப்படித்தான் வெங்கமாம்பா வாழ்விலும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன.

வெங்கமாம்பாவை பக்த பிரகலாதனின் அவதாரமாகக் கண்டுகொண்ட புவனகிரி சுவாமிகள், அவரை வணங்கி அங்கிருந்து சென்றார். ஆனாலும் உள்ளூரில் இருந்த சில பித்தர்கள் அவரின் கூற்றை ஏற்க மறுத்தனர். `வெங்கமாம்பாவின் தலையை மழித்தே தீருவோம்' என்று சவரத் தொழிலாளி ஒருவரை யும் அழைத்து வந்தனர்.
வெங்கமாம்பா சிரித்துக்கொண்டு ஒரு பாறையில் சென்று அமர்ந்தார். சவரத் தொழிலாளி கத்தியோடு அவரை நெருங் கினான். வெங்கமாம்பா நிமிர்ந்து பார்த்தார். அடுத்தகணம் சவரத் தொழிலாளி அலறி விழுந்தான். அவன் கண்களுக்கு வெங்கமாம்பா ஆங்கார சாமுண்டியாகத் தெரிந்தார்.
`சாமுண்டி தேவி என்னை மன்னித்துவிடு தாயே' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அவளைச் சுற்றி வந்தான். ஊர்க்காரர்கள், `இவனுக்கு என்ன பைத்தியமா' என்று நினைத்துக்கொண்டு, ``ஏய்... சொன்னதைச் செய்'' என்று மிரட்டினர்.
அவனோ, "தாயின் காலடியைக் காணக் கூடத் தகுதியில்லாத இந்த மானுட ஜன்மம், இன்று பெரும் தரிசனம் கண்டு புண்ணியம் அடைந்தது. உங்களுக்கு தைரியமிருந்தால் முன்னேறுங்கள். அப்படிச் செய்தால் அவளின் கோபாக்னியில் நீங்கள் சாம்பலா வீர்கள்'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து விலகிப் போனான்.
வெங்கமாம்பா எழுந்துகொண்டார். அவளின் பெற்றோர் வந்து அவளை அணைத் துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல அழைத்தனர். ஆனால் வெங்கமாம்பா மறுத்தார்.
``தாய் தந்தையே... இதுவரை என்னைப் பாதுகாத்து வளர்த்ததற்கு நன்றி. நான் திருமலை வேங்கடவனைச் சேரவேண்டியவள். இவ்வளவு காலம் அவனுக்குச் சொந்தமான என்னைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் இருந்தது. இப்போது அது நீங்கியது. இனி நான் அவரை அடையவேண்டும்.
சதுர்யுகங்களிலும் நிலைத்து நின்று புண்ணிய ஸ்தலமாக விளங்கும் வேங்கட மலையில் நான் தவம் செய்து, இந்த மானிடப் பிறப்பினால் உண்டான மாயையைக் களைய விரும்புகிறேன். அதுவே நான் பரிசுத்தமாகி அந்த பகவானை அடையும் வழி. அதற்கு என்னை ஆசீர்வதித்து வழியனுப்புங்கள்'' என்றாள் வெங்கமாம்பா.

எந்தப் பெற்றோர் தன் மகள் வனம் சென்று தவம் இயற்றுவதை விரும்புவார்கள். அவர்கள் எவ்வளவோ தடுத்தும் வெங்கமாம்பா ஏற்கவில்லை.
வேங்கட நாமத்தைச் சொல்லிக்கொண்டே திருமலை நோக்கி நடந்தார். ஊரில் இருந்த நல்ல உள்ளங்கள் இந்தக் காட்சியைக் கண்டு சிலிர்த்து அவர் பின்னால் நடந்தனர். ஊர் எல்லை வரை பின் தொடர்ந்தனர். கோவிந்த நாமம் ஓங்கி ஒலித்தது. ஊர் எல்லையில் அனைவரையும் நிறுத்தி, ``இனி என்னைத் தனியாக விடுங்கள்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தாள். அந்த வார்த்தையை மீற முடியாமல், பெற்றோரும் மற்றோரும் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று.
வெங்கமாம்பா திருமலைக்குச் சென்றார். அங்கே தும்புரு முனிவர் தவம் செய்த குகை யைக் கண்டு அங்கேயே தவம் செய்யத் துணிந்தார். பல மாதங்கள் அவர் அந்த குகை யில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.
மாதங்கள் பல கடந்தன. வெங்கமாம்பாவின் பிரிவு அவரின் பெற்றோரை மிகவும் வாட்டியது. தேடித் திரிந்தனர். எங்கும் அவரைக் காண இயலாமல், `நிச்சயம் கொடிய விலங்குகள் வாழும் மலைக்காடுகளில் ஒரு பெண் பிழைத் திருக்க வாய்ப்பே இல்லை' என்று முடிவு செய்து அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்யத் தயாரானார்கள்.
அப்போது அவர்களைத் தேடிவந்த மாடு மேய்க்கும் இளைஞன், ``உயிரோடு வாழும் ஒருவருக்கு ஏன் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும்? நான் வெங்கமாம்பாவைக் கண்டேன். அவர் நலமுடன் தவம் செய்து வருகிறார்'' என்று சொல்ல, அதைக் கேட்ட பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. உடனே திருமலைக்குப் புறப்பட்டு தும்புரு குகையை அடைந்தனர்.
பல காலமாக யோக நிஷ்டையில் இருந்த வெங்கமாம்பா, பெற்றோரின் வருகையை உணர்ந்து கண்விழித்தார். இந்த உலகில், தான் வாழ வந்த அவதார நோக்கத்தை விளக்கினார். இனி கவலை கொள்ளாது ஊருக்குச் செல்லுமாறு வழிகாட்டினார். வெங்கமாம்பாவின் தெளிவான பேச்சும் தேஜஸும் அவர் களை ஆற்றுப்படுத்தியது. அதன்பின் திருமலையிலேயே தன் வாசத்தைத் தொடங் கினார் வெங்கமாம்பா.
வெங்கமாம்பா திருமலையில் ஒரு துளசி வனம் அமைத்தார். தினமும் திருத்துழாய் மாலை தொடுத்து அந்த வேங்கடவனுக்கு சாத்த வேண்டும் என்பது அவர் ஆசை. ஆண்டாள் மாலை தொடுத்து அவன் மண மகள் ஆனாள். தான் திருத்துழாய் சூட்டி அவன் மார்பில் சேரவேண்டும் என்று விரும்பினார்.
திருமலைக் கோயிலில் தலைமை அர்ச்சகருக்கு வெங்கமாம்பா மீது கோபம் இருந்தது. சாஸ்திர விரோதமாக ஒரு கைம்பெண் தலைமுடியோடும் மங்கலச் சின்னங்களோடும் வாழ்வது ஏற்புடையதல்ல என்று நினைத்தார். அப்படிப்பட்டவர் வெங்கமாம்பா தொடுத்துக் கொடுக்கும் மாலையை வாங்கித் திருமலையானுக்குச் சூட்டிவிடுவாரா என்ன?
அவரும் அவரைச் சார்ந்தோரும் வெங்கமாம்பா கொண்டுவந்த மாலையை ஏற்க மறுத்ததோடு, அவரை அங்கிருந்து செல்லுமாறு விரட்டினர். அவர்கள் வீசி எறிந்த மாலையை எடுத்துக்கொண்டு தன் குடிலுக்கு வந்தார் வெங்கமாம்பா. ஆசை யோடு தான் தொடுத்த மாலையையே பார்த் தார். அது வேங்கடவனுக்குப் பிரியமில்லாமல் போனது ஏன் என்று வருந்தினார்.
அப்போது வேங்கடவன் அங்கே தோன்றி னார். அந்த மாலையை எடுத்துத் தன் தடந் தோள்களில் சாத்திக்கொண்டார். இதைக் கண்ட வெங்கமாம்பா கண்ணீர் பெருக்கினார்.
``வெங்கமாம்பா! உன் துளசி மாலையே எனக்குப் பிரியம். இதில் சந்தேகம் வேண்டாம்'' எனக்கூறி ஆசி வழங்கி மறைந்தார்.
வெங்கமாம்பாவுக்கு இருந்த மாயை நீங்கியது. வேங்கடவனின் பரிபூரண தரிசனம் அவருக்கான வழியைக் காட்டிக்கொடுத்தது. வெங்கமாம்பா அங்கிருந்து காட்டுக்குள் நடந்தாள். மலை வாழ் மக்களோடு சேர்ந்துகொண்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு நரசிம்ம அவதாரக் கதைகளைச் சொல்லி உபதேசிப்பார்.
தினமும் திருத்துழாய் மாலை தொடுப்பார். இரவில் திருமலைக் கோயில் நடை சாத்திய தும், தன் ஸித்தியால் ஒரு நொடியில் அங்கே போவார். வேங்கடவனுக்கு அதைச் சாத்தி அழகு பார்ப்பார். பிறகு, அடுத்த நொடியில் மலைக்கிராமத்துக்கு வந்துவிடுவார்.
தினமும் நடை திறக்கும்போது பெருமாளுக் குத் துளசி மாலை சாத்தப்பட்டிருப்பதைக் கண்டு அர்ச்சகர்கள் வியந்தனர். `இதைச் செய்வது யார்' என்று குழம்பினர். ஒருநாள் ரகசியமாக ஒளிந்திருந்து பார்த்தபோது வெங்கமாம்பா ஓர் தேவதையைப் போல அங்கு தோன்றி மாலை சாத்திவிட்டு அடுத்த கணம் மறைந்துபோவதைக் கண்டனர்.
தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து வெங்கமாம்பாவை நாடிச் சென்று மன்னிப்புக் கேட்டனர். வெங்கமாம்பா அதை ஏற்று திருமலையில் கோயில் அருகிலேயே குடி புகுந்தார். தினமும் பெருமாளைக் குறித்துப் பாடல்கள் இயற்றி, நான்கு மாடவீதிகளிலும் பஜனை செய்து வாழ்ந்தார்.
ஒருநாள் ரதசப்தமி பிரம்மோற்சவத்தின்போது வெங்கமாம்பாவின் வீட்டு வாசலில் பெருமாளின் ரதம் நகராமல் நின்றுவிட்டது. வெங்கமாம்பா ஆரத்தி எடுத்தால் மட்டுமே நகரும் என்று அசரீரி கேட்க, உடனே பக்தர்கள் வேண்டிக்கொள்ள, வெங்கமாம்பா ஆரத்தி எடுத்தார். அதன் பிறகே ரதம் நகர்ந்தது. இவ்வாறு ஏராளமான அற்புதங்களையும் அதிசயங்களையும் தான் வாழும் காலத்தில் நிகழ்த்தினார் வெங்கமாம்பா.
வெங்கமாம்பா தன் வாழ்வில், விஷ்ணு பாரிஜாதம், செஞ்சு நாடகம், ருக்மிணி நாடகம், முக்தி காந்த விலாசம், யக்ஷ கானம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் பல லட்சம் கிருதிகளையும் இயற்றினார்.
87 வயது வரை வாழ்ந்த வெங்கமாம்பாவின் பாடல்களைப் பாடித்தான் வேங்கடவனுக்கு தினமும் இரவில் ஆரத்தி எடுக்கிறார்கள். அதற்கு, `வெங்கமாம்பா ஆரத்தி' என்றே பெயர். இந்த உலக வாழ்வு போதும் என்று நினைத்த வெங்கமாம்பா, வேங்கடவனை வேண்டிக்கொண்டு 1817-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பெருமாளின் திருவடிகளில் சரண்புகுந்தார். இன்றும் அவரோடு அங்கு சூட்சும ரூபமாக இருந்து, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

வெங்கமாம்பாவை, `மாத்ரு' என்று பெருமையோடு அழைக்கிறார்கள் பக்தர்கள். அதற்குக் காரணம் அவர் பக்தர்களுக்குப் பரிவோடு செய்த சேவைதான். வெங்கமாம்பா நரசிம்ம ஜயந்தியை ஒட்டி திருமலைக்கு வரும் பல ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தார். அவரின் தன்னலம் அற்ற தொண்டினைக் கண்ட பல பக்தர்கள் தம்மால் இயன்ற நன்கொடைகளை வழங்கித் திருமலையில் அன்னதானம் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
வெங்கமாம்பா தன் கடைசி மூச்சு இருக் கும் வரையில் அதைத் தொடர்ந்தார். அதனால்தான் அவரின் நினைவாக இன்றும் திருமலையில் இருக்கும் அன்னதானக்கூடத்துக்கு மாத்ரு தரிகொண்ட வெங்கமாம்பா உணவுக்கூடம் என்றே பெயர் ஆனது!
- தரிசனம் தொடரும்.