Published:Updated:

‘இந்த இடம் உமக்கே சொந்தம் இல்லை!’

அனந்தாழ்வானும் வேங்கடவனும் - திருப்பதி வேங்கடாசலபதி கோயில்

பிரீமியம் ஸ்டோரி

அனந்தாழ்வான் மீது கடும் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே?

‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று அர்ச்சகர் மூலம் இவர் சொல்லி அனுப்ப... அனந்தாழ்வானோ, ‘`ஸ்வாமிக்குப் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வர முடியாது!’’ என்று அர்ச்சகரிடம் சொல்லி விட்டார். இதனால் ஏற்பட்ட கோபம். விழி சிவக்கக் காத்திருந்தார் பகவான்.

ஆயிற்று... பூமாலை கட்டி முடித்த அனந்தாழ்வான், அதை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு வருவதை அறிந்த ஏழுமலையான், தனக்கு முன்பு இருந்த திரையால், கருவறை வாயிலை மூடினார். சற்றும் பதறாத அனந்தாழ்வான், திரையை விலக்கி உள்ளே நுழைய முற்பட்டார்.

‘`அங்கேயே நில்!’’ கடும் குரலில் உத்தரவிட்டார் பகவான். இதைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தார் அனந்தாழ்வான்.

‘`பிரம்மனும் ருத்ரனும்கூட என் உத்தரவை மீறியது

இல்லை. என்ன தைரியம் உனக்கு? உன் மாலையும் வேண்டாம்; சேவையும் வேண்டாம். இப்போதே கிளம்பு... உன்னை இந்த ஏழுமலையில் இருந்து நாடு கடத்துகிறேன்!’’ என்றார் திருமால்.

மெள்ள புன்னகைத்த அனந்தாழ்வான், ‘`என்னை அனுப்ப நீர் யார்?’’ என்றார். இதை, பாலாஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை!

‘`என்ன சொல்கிறாய்?’’- திகைப்புடன் கேட்டார்.

‘`ஸ்வாமி, தங்களைப் பற்றிய ஒரு பாடல் உண்டு...

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்!
ஸ்வாமி புஷ்கரிணிதீரே ரமயா ஸஹ போததே...


அதாவது, ‘சகல கல்யாண குணங்கள் படைத்த மகாவிஷ்ணு, வைகுண்டத்தை விட்டு அலமேலு மங்கையுடன் இந்த (திருப்பதி) புஷ்கரணி தீர்த்தத்துக்கு வந்திறங்கினார்’ என்கிறது இந்தப் பாடல். ஆக, இந்த இடம் உமக்கே சொந்தமில்லை. எனக்குச் சற்று முன் இங்கு வந்த உமக்கு, என்னை வெளியேற்ற என்ன அதிகாரம் உள்ளது? இன்னொரு விஷயம்... நீங்கள் அழைத்து நான் இங்கு வரவில்லை. என் ஆசார்யர் ஸ்ரீமத் ராமாநுஜர் கட்டளைப்படி இங்கு வந்தேன்.’’

‘`அதனால் என்ன?’’ - இடைமறித்தார் பெருமாள்.

‘`பூக்கள், மொட்டுகளாக இருக்கும்போதே பறித்து, அவை மலர்வதற்குள் மாலை தொடுத்து, உமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஆச்சார்யரது ஆணை. தாங்கள் அழைத்ததும் நான் வந்திருந்தால், மொட்டுகள் மலர்ந்திருக்கும். ஆச்சார்யரது ஆணையை மீறிய குற்றத்துக்கு நான் ஆளாகி இருப்பேன். எனக்கு அவரே முக்கியம். அவர் ஆணைப்படி தொடுத்த மாலை இது. அணிவதும் அணியாததும் உங்கள் இஷ்டம்’’ என்ற அனந்தாழ்வான் திரும்பி நடந்தார்.

அனந்தாழ்வானின் ஆசார்ய பக்தியில் நெகிழ்ந்த ஏழுமலையான் இரு கரம் நீட்டி அவரைத் தடுத்தார். ‘`அனந்தா! உனது குரு பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம். பிரம்மாவுக்கும் ருத்திரருக்கும் அளிக்காத புருஷார்த்தங்களை உனக்குத் தருகிறேன். வேறு என்ன வேண்டும்... கேள்!’’ என்றார். உடனே பகவானின் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய அனந்தாழ்வான், ‘`ஸ்வாமி... எனது இந்தச் சேவை ஆயுளுக்கும் தொடர அனுக்கிரகியுங்கள்’’ என வேண்டினார்.

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்அப்படியே அருள்பாலித்த ஏழுமலையான், அனந்தாழ்வாரின் சீடர்களுக்கும், அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சப் பேறு கிடைக்கும் என அருள்புரிந்தார். பிறகு, அனந்தாழ்வானுக்கு சீடர்கள் பெருகினர். ‘நம்மாழ்வாரே தன் தெய்வம்!’ என்று குரு பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்த மதுரகவியாழ்வாருக்கு ஒப்பானவர் அனந்தாழ்வார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இவரின் சீடர்களுக்கு `மதுரகவி தாசர்கள்' என்ற பெயரும் வந்தது.

சிறந்த நண்பன் யார்?

கௌதம புத்தர்
கௌதம புத்தர்

சிறந்த நண்பனாக எவரைத் தேர்ந்தெடுக்கலாம்?’ என்பதற்கு கௌதம புத்தர் கூறும் வழிமுறைகள்:


கொடுப்பதற்கு எவை கடினமானவையோ, அவற்றைக் கொடுப்பவன்.

 எவை செய்வதற்குக் கடினமானவையோ, அவற்றைச் செய்பவன்.

 எவை எவை தாங்கிக் கொள்ள முடியாதவையோ, அவற்றைத் தாங்கிக் கொள்பவன்.

 தனது ரகசியங்களை உங்களிடம் கூறி, உங்கள் ரகசியங்களைக் காப்பாற்றுபவன்.

 சிரமமான நேரத்திலும் நீங்கள் தாழ்ந்திருக்கும் போதும் உங்களைப் புறக்கணிக்காதவன்.

- மேற்குறிப்பிட்ட பண்பு கொண்டவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு.

சி.கீதா, சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு