Published:Updated:

ஆயுள் பெருக நடைபெற்றது ஆயுஷ் ஹோமம்; கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வைபவம்!

ஆயுஷ் ஹோமம்

ஆயுஷ் ஹோமம்: இந்த அன்னையின் ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு, சகல வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன; தீராத நோய்களும் தீர்கின்றன என்கிறார்கள்

ஆயுள் பெருக நடைபெற்றது ஆயுஷ் ஹோமம்; கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வைபவம்!

ஆயுஷ் ஹோமம்: இந்த அன்னையின் ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு, சகல வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன; தீராத நோய்களும் தீர்கின்றன என்கிறார்கள்

Published:Updated:
ஆயுஷ் ஹோமம்
ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும் ஹோமம் ஆயுஷ் ஹோமம் எனப்படும். இது நீண்ட ஆயுள் பலத்தையும் பிணியில்லா பெருவாழ்வையும் வரமாகப் பெற்றுத் தரும் வழிபாடு. பொதுவாக நீண்ட காலம் வாழ வேண்டி ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும் இந்த ஆயுஷ் ஹோமத்தை செய்ய வேண்டும் என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுஷ் ஹோமம்
ஆயுஷ் ஹோமம்

ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் மரண பயம் நீங்கும். நீண்ட ஆயுளும், நீங்காத ஆரோக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். பலன் மிக்க இந்த ஹோமத்தால் சிரஞ்சீவித்தன்மை கொண்ட மகாபுருஷர்கள் நம்மை வாழ்த்தி நீண்ட ஆயுள் வரம் அருளுவார்கள் எனப்படுகிறது. வம்பு, வழக்குகள், அவமானம் போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.

எண்ணியவற்றை எளிதாக நிறைவேற்றித் தரும் பெண் சித்தரான அம்மணி அம்மாவின் சந்நிதியில் ஆயுள் விருத்தி அருளும் தேவதையை வேண்டி ஆயுஷ் ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தீபத் திருநாளில் திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது பெரும் புண்ணியம். அத்துடன், நீண்ட ஆயுள் பலத்தையும் பிணியில்லா பெருவாழ்வையும் வரமாகப் பெற்றுத் தரும் ஆயுஷ் ஹோமமும் கார்த்திகை மகாதீபத்துக்கு மறுநாள் பௌர்ணமி நாளில் ( டிசம்பர்-7) காலை 9 தொடங்கி மதியம் 12 வரை நடத்தப்பட்டது.

அம்மணி அம்மையார்
அம்மணி அம்மையார்

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்மணி அம்மையார் சிறுவயது முதலே ஈசனின் மீது பக்தி கொண்டவர். பெற்றோர் அம்மணி அம்மாளை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, அவரோ அதை மறுத்து கோமுட்டிக் குளத்தில் குதித்துவிட்டார். இறைவனின் கருணையால் அம்மணி அம்மாள் 3-ம் நாள் குளத்தில் இருந்து எழுந்துவந்தார். அன்று முதல், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பெட்டியான அந்த காலத்திலேயே காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்த மகா யோகினி இவர். அண்ணாமலையாரின் கட்டளைப்படி பல அற்புதங்களோடு அவரால் எழுப்பப்பட்ட வடக்குக் கோபுரம் அம்மணி அம்மன் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

அம்மணி அம்மாள்
அம்மணி அம்மாள்

திருவண்ணாமலையிலேயே ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே ஒரு தைப்பூச நன்னாளில் ஜீவன் முக்தி அடைந்தார் அம்மணி அம்மாள். அம்மணி அம்மாள் சித்தர் பீடம் இன்று பொலிவுடன் காட்சி தருகிறது. திருவண்ணாமலையில் ஜோதி தெரியும் மலைக்கு அடியே காட்சி தருகிறது திருக்கோயில்.

இந்த அன்னையின் ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு, சகல வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன; தீராத நோய்களும் தீர்கின்றன என்கிறார்கள். ஸ்ரீஅம்மணி அம்மன் அருளால் மரணத்தை வென்றவர்கள் அநேகம் பேர். இவரை வணங்கினால் திருமணப்பேறு, குழந்தைப் பேறு, காரிய ஸித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஆயுஷ் ஹோமம்
ஆயுஷ் ஹோமம்

மகிமைகள் கொண்ட அம்மணி அம்மாள் சந்நிதியில் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மறுநாள் டிசம்பர் 7 புதன் அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை வாசகர்கள் நலனுக்காக ஆயுஷ் ஹோமம் நடத்தப்பட்டது. பிறகு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. கோயில் நிர்வாகி திரு.ரமேஷ் அவர்களும் அவரது குடும்பத்தாரும் இந்த இனிய வைபவத்தை சிறப்புற நடத்திக் கொடுத்தனர். சிவனருள் செல்வர். சிவநேசன் எனும் திருத்தொண்டர் இந்த ஆயுஷ் ஹோம வைபவத்தை அழகுத் தமிழில் நடத்திக் கொடுத்தார். வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.