Published:Updated:

`காவிரியில் நீராடும் கங்காதேவி!’- மயிலாடுதுறையில் களைகட்டும் கடைமுகத் தீர்த்தவாரி திருவிழா

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடும் கடைமுகத் தீர்த்தவாரி நாளை (நவ.16) நடைபெறவுள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது

தீர்த்தவாரி
தீர்த்தவாரி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள துலாக்கட்ட காவிரி புனித நீராடும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. பலரும் புனித நீராடி பாவங்களைக் கழுவியதால் கருமையடைந்து, பொலிவிழந்த கங்காதேவி, சிவபெருமான் அருளியபடி ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வந்து நீராடி மீண்டும் பொலிவு பெற்றதாக ஐதிகம்.

தீர்த்தவாரி
தீர்த்தவாரி

எனவே, இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் துலா மஹோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் துலாக்கட்ட காவிரியில் மக்கள் புனித நீராடுவார்கள்.

ஐப்பசி மாத கடைசி நாளான 30-ம் தேதி சனிக்கிழமை (16.11.2019) கடைமுகத் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். அப்போது ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமி திருக்கோயில், ஸ்ரீஐயாறப்பர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் ஆகிய தலங்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு, மேள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து துலாக்கட்ட காவிரியின் இரண்டு கரைகளிலும் காட்சி தருவர். மதியம் 1.30 மணிக்கு திருவாதிரை நட்சத்திரம், கும்ப லக்னத்தில் காவிரியில் கடைமுகத் தீர்த்தவாரி அளிப்பர். புனித நீராடி சுவாமிகளை ஓரிடத்தில் தரிசித்து அருளாசி பெற நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கூடுவர். தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் கலந்துகொண்டு அருளாசி வழங்குவர்.

தீர்த்தவாரி
தீர்த்தவாரி

நகரில் நோய்த்தொற்று பரவாமலிருக்க நகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகளையும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துவருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அனைவரும் புனித நீராடும் வகையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள வசதியாக மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திருக்கிறது. மயிலாடுதுறைக்குப் பெருமை சேர்க்கும் இத்திருவிழா களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.