Published:Updated:

போட்டோகார்டுகளின் வழியே தமிழர்களின் வரலாற்றைக் கற்பிக்கும் ஆற்றுப்படை குழுவினர்!

ஆற்றுப்படை குழு

புராதானமான தொன்மைச் செல்வங்களை இன்று அடையாளம் கண்டு அதை பராமரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறைவு என்றே சொல்லலாம்

போட்டோகார்டுகளின் வழியே தமிழர்களின் வரலாற்றைக் கற்பிக்கும் ஆற்றுப்படை குழுவினர்!

புராதானமான தொன்மைச் செல்வங்களை இன்று அடையாளம் கண்டு அதை பராமரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறைவு என்றே சொல்லலாம்

Published:Updated:
ஆற்றுப்படை குழு

திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள், தொல்லியல் சின்னங்கள் குறித்து சமூக வலைதளங்களின் வழியாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஆற்றுப்படைக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பிடுகு முத்தரையர் நடுகல்
பெரும்பிடுகு முத்தரையர் நடுகல்

தொல்லியல் சிறப்பும் பாரம்பர்யப் பண்பாடும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட தமிழ் மண்ணில் எங்கெங்கு காணினும் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுப் புதையல்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. அவை கோயில்கள், அரண்மனைகள், குகைக் கோயில்கள், குகை ஓவியங்கள், சமணக் கோயில்கள், பாரம்பர்யக் கட்டிடங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், நாணயங்கள், செப்புத் தகடுகள், ஓலைச்சுவடிகள் எனப் பல வடிவங்களில் நம்மைச் சுற்றிலும் காணப் படுகின்றன.

இந்தப் புராதானமான தொன்மைச் செல்வங்களை இன்று அடையாளம் கண்டு அதை பராமரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறைவு என்றே சொல்லலாம். நம் பாரம்பர்யச் சின்னங்களை அடையாளம் காணும் முயற்சியில் வே,பார்த்திபன், பா.பிரபாகரன், அ.டேவிட்ராஜ், சுரேஷ், அ.நடராஜன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் தற்போது தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியிலுள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப் பள்ளியில் 1999-ம் ஆண்டு தொடங்கிய இந்த 'ஆற்றுப்படை ' என்ற அமைப்பு, தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூகவலைதளத்தில் இச்சின்னங்கள் குறித்த பதிவுகளை இட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாற்று போட்டோகார்டு
வரலாற்று போட்டோகார்டு

வரலாற்றுப் பதிவுகளை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் போட்டோ கார்டு வடிவில் பதிவிட்டு வருகின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கோயில்கள் எப்படி இருந்தன, இப்போது எப்படி உள்ளன என இரு கால புகைப்படங்களையும் இணைத்து ஒப்பிட்டும், தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்புகள் எவை, தற்போது அவை எந்தெந்த நாடுகளாக உள்ளன என்றும் போட்டோ கார்டுகளை உருவாக்குகின்றன. அந்த போட்டோகார்டில் சொல்லப்படும் செய்தி குறித்த விரிவான தகவல்கள் தேவைப்படுவோர் அப்பதிவிலுள்ள க்யூஆர் கோடு வழியாகச் சென்று படித்து அறிந்துகொள்ள வழி வகையும் செய்து உள்ளார்கள். இதற்கு இங்கு மட்டுமில்லாமல், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்கிறார்கள் இந்தக் குழுவினர்.

வரலாற்றில் முக்கியமான நாள்களைத் தெரியப்படுத்தும் விதமாக இவர்கள் வெளியிடும் போட்டோகார்டுகள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. வரலாற்று நிகழ்வுகள், தொல்லியல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆற்றுப்படைக் குழுவினர் அவ்வப்போது மரபுநடைப் பயணங்கள் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு பயணத்திற்கும் ஒவ்வொரு காரணம் அதாவது 'தீம்' வைத்துப் பயணப்படுகின்றனர். உதாரணமாய் நடுகற்களை மையமாய் வைத்து 'செங்கம் நடுகற்கள்', கோயில் கட்டடக்கலையை மையமாகக் கொண்டு 'புதுக்கோட்டை கற்றளிகள்', சமணர்கள் தொன்மை குறித்து 'சமணப் பயணம்' போன்ற ஏராளமான சுற்றுலாக்களை நடத்தியுள்ளனர். இதில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து கலந்தும் கொண்டிருக்கிறார்கள்.

போட்டோகார்டுகளின் வழியே தமிழர்களின் வரலாற்றைக் கற்பிக்கும் ஆற்றுப்படை குழுவினர்!

தற்போது நம் மண்ணின் சாமிகளான நாட்டார் தெய்வங்களை அறிந்து கொள்ளும் பயணம் ஒன்றை மதுரை மாநகரில் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை நகரம் இன்று வானளாவிய உயர்ந்த கட்டடங்கள் நிறைந்த, நாகரிகம் வளர்ந்த ஒரு மாநகராய் காணப்பட்டாலும், உள்ளூர அதன் குருதியோட்டமாக ஓடுவது கிராமியப் பண்பாடு தான். இந்த மண் மணம் சார்ந்த பண்பாட்டினால் தான் மதுரையின் வாழ்வியல் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தானாக வந்து சேர்கிறது. பழைமையும், புதுமையும் ஒருங்கேபெற்ற நகராய் விளங்குவதே மதுரையின் தனிச்சிறப்பு. மதுரையின் நகர அமைப்பு வேறு எந்த நகருக்கும் இல்லை. மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் இலக்கியச் சிறப்பும் மொழிச் சிறப்பும் கிடையாது. தாய்மொழிக்காகவும் இலக்கிய வளர்ச்சிக்காகவும் மதுரை மாதிரி எங்கும் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததில்லை.

'இந்த தேசத்தினில் 3000 வருடங்களுக்கு மேலாய் நகரமாய் இயங்குவது அநேகமாய் மதுரை நகரம் மட்டுமே என்கிறது வரலாறு. அம்மதுரையை மையமாய் கொண்டு அதன் பண்பாட்டு சிறப்புகளை ஓரளவாவது அறிந்து கொள்வதே இந்த பயணத்தின் நோக்கம்' என்கின்றனர் ஆற்றுப்படை குழுவினர்.

நடுகல்
நடுகல்

'வரலாற்றை அறிந்து கொள்ளும் இனம், தனது பெருமைகளை இழந்து விடுவதில்லை. வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் உதவுவதற்காகவே இந்த ஆற்றுப்படை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது' என்கிறார்கள் இந்த அமைப்பின் இளைஞர்கள் குழுவினர். இவர்கள் இந்தியா முழுக்கப் பயணித்து தமிழர்களின் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களையும் பெருமைகளையும் கண்டறிந்து வருகிறார்கள். மகிழ்ச்சியான பயணங்களின் வழியே மட்டுமே எளிதாக வரலாற்றை அறிந்து கொள்ள முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

'வகுப்பறைகளில் மட்டுமல்ல, எங்களின் பயணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றை அறிந்து கொண்டு வருகிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயார்!' என்று அழைப்பு விடுக்கிறார்கள் இவர்கள். இவர்கள் சில அபூர்வ கல்வெட்டுகளும் நடு கற்களும் கண்டறிந்து இருக்கிறார்கள். வரலாறு படைக்க வேண்டுமானால் வரலாறும் அறிந்திருக்க வேண்டும். இவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism