Published:Updated:

தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு வீரர்களை அனுப்பிய சோழமாதேவி ஊர்! அதிசயக் கல்வெட்டுகள் அடங்கிய ஊர்!

சோழமாதேவி

வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு வீரர்களை அனுப்பிய சோழமாதேவி ஊர்! அதிசயக் கல்வெட்டுகள் அடங்கிய ஊர்!

வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

Published:Updated:
சோழமாதேவி

ராஜராஜ சோழனின் மனைவியரில் ஒருத்தி சோழமாதேவி என்பவர். இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆடவல்லான், ரிஷபவாகனர் போன்ற செப்புத்திருமேனிகளை செய்தளித்துள்ளார். இவர் பெயரால் உருவான ஊரே சோழமாதேவி. இவ்வூர் ‘காவிரியின் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டுப் பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம்’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இது தஞ்சாவூர்-திருச்சி சாலையில் திருவெறும்பூரிலிருந்து தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் 3 கிமீ தொலைவில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயம் பல சரித்திரப் புகழ் கொண்டது.

சோழர் உலா
சோழர் உலா

உய்யகொண்டான் ஆற்று நீரை பாசனத்திற்கும் மற்ற நீராதாரங்களுக்கும் பயன்படுத்த உய்யகொண்டான் ஏரி வாரியத்தையும் ராஜராஜ சோழன் அமைத்தான். அந்த ஏரி வாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊரின் சபையோரால் நிர்வகிக்கப் பெற்றது என்ற தகவலை கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு இன்றும் இந்த சோழமாதேவி திருக்கயிலாயமுடையார் ஆலயத்தில் உள்ளது சிறப்பானதாகும். இங்குள்ள ஈசன் ஸ்ரீகயிலாயமுடையார், ஸ்ரீகைலாச பரமேசுவரர் என்றழைக்கப்படுகின்றார். கருவறையில் இறைவன் கயிலாய முடையார், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். அம்பிகை அர்த்த மண்டபத்தில் நான்கு கரங்கள் கொண்டு, நின்ற நிலையில் அருளுகிறாள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் இருக்க, இன்முகத்துடன் காணப்படுகிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோழமாதேவி
சோழமாதேவி

கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என ஆலயம் விஸ்தாரமாகக் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் காணப்படும் மாலை கட்டும் மேடை போன்ற அமைப்புகள் ஒரு காலத்தில் இந்த ஆலயம் சிறப்பாக அமைந்திருத்தந்தைச் சொல்லும். கருவறை வெளிச்சுற்றில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் அதிஷ்டானப் பகுதியில் முப்பட்டைக் குமுத அலங்காரத்திற்கு மேல் சிறு பலகைச் சிற்பங்கள் உள்ளன. நடன மகளிர், இசைக்கருவி வாசிக்கும் கலைஞர், காளிங்க நர்த்தனர், கஜசங்காரமூரத்தி, ரிஷபம், ஆடல்வல்லான், திரிபுராந்தகர், கஜலட்சுமி, சரசுவதி, அன்னம், அய்யனார், சிங்கம், யாளி, லிங்கோத்பவர் போன்ற சிற்பங்கள் சிறுவடிவங்களில் உள்ளன.

உபபீடம், அதிஷ்டானம், பித்தி போன்ற அமைப்போடு ஸ்ரீவிமானம் காட்சி தருகின்றது. இங்குள்ள பிட்சாடனர் யாசகம் கேட்கும் திருக்கோலம் கொண்டு, கபாலம் ஏந்தி புன்னகை தவழ காட்சி தருகிறார். இவருக்கு எதிர் திசையில் ரிஷி பத்தினி ஒருவர் அகப்பை ஏந்தி அன்னம் பாலிக்க நிற்கிறார். அவளது காலடியின் கீழ் பானைகள் வரிசையாக உள்ளன. இது தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கர்வத்தை அடக்கும் புராண நிகழ்ச்சியைக் கூறுவதாக அமைந்துள்ளது.

சோழமாதேவி கல்வெட்டு
சோழமாதேவி கல்வெட்டு

ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரம். 993-ல் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு இவ்வூரிலிருந்தும் நால்வர் சென்றுள்ளனர். இங்குள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் 'பகவத் பாதீயம்' எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் இயற்றிய உரையை தினமும் இங்கு சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்றும் அவரின் பணிக்காக நிலம் கொடைகள் வழங்கப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செய்தியை கேள்விப்பட்டு காஞ்சி மட சங்கராச்சாரியர் இத்தல இறைவனை தரிசித்து சென்றுள்ளார்.

கோயில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ எனப்பட்டனர். இங்குள்ள சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு வழியே அறியலாம். பஞ்ச மகா சப்தம் என்பது 5 வகையான இசையைக் குறிக்கும். தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் எழும் நாதம் 'பஞ்ச மகா சப்தம்’ என்பர். ஆதிச்சன் பாழி, சோழமாதேவி பேருவச்சன், பல்லவராயன், திருவரங்கதேவன், கடம்பனான கந்தர்வ பேருவச்சன் என்பார் இசை வாசிக்கும் உவச்சர்களில் முக்கியமானவர்கள் என கல்வெட்டு கூறுகிறது.

கரடிகை, மத்தளம், சங்கு, எக்காளம் என மொத்தம் 9 இசைக் கருவிகள் நாள்தோறும் இங்கு வாசிக்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இங்கு ராஜராஜசோழன் பெயரால் அம்பலம் ஒன்று இருந்ததாகவும் அங்கு கூடியே ஊர் குறித்த முடிவுகளும், கோயில் நிர்வாகம் குறித்த முடிவுகளும் எடுத்தனர் என்றும் இங்குள்ள கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.

கல்வெட்டு
கல்வெட்டு

முதலாம் ராஜராஜசோழனின் காலத்தில் வீரசோழ இளங்கோ வரையர் தேவி பராந்தகன் ஆதித்தபிடாரி என்பவன் சோழமாதேவி சிவாலயத்திற்கு பொற்கொடை அளித்தார். அதில் இங்குள்ள ஆலயத்தில் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றன. அதேபோல் எறன்கூத்தன் என்பவன் ஆலயத்தில் ஒரு நந்தவனம் அமைத்தான் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. ராஜராஜன் தண்ணீர் பந்தல் அமைக்க நிலம் நிவந்தமாக அளிக்கப்பட்டதும் அறிய முடிகிறது.
இப்படி சிற்ப அழகுகள், கலைகள், விழாக்கள், விருதுகள், கொடைகள், நிர்வாகம், நீர் மேலாண்மை என பல வரலாற்றுத் தகவல்களை தன்னுள் தாங்கிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் சோழமாதேவி கோயிலை நாமும் தரிசிக்க வேண்டாமா? வரலாற்றின் பெரும்பிரவாகத்தில் கொஞ்சம் அள்ளிப்பருக வேண்டாமா?

ஸ்ரீகயிலாயமுடையார்
ஸ்ரீகயிலாயமுடையார்


வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism