Published:Updated:

100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பெட்டி சாமித் திருவிழா: நான்கு தலைமுறை கடந்தும் நடந்த அதிசயங்கள்!

பெட்டி சாமித் திருவிழா

சுடுகாட்டில் 12 மணிக்கு மின்னல் போல் ஒரு ஒளி வந்து செல்ல, படையலை தெய்வம் ஏற்றுக் கொண்டதாகக் கூறி அந்த மருளாளியை அழைத்து மீண்டும் வீட்டுக்குத் (கோயிலுக்கு) திரும்புவர்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பெட்டி சாமித் திருவிழா: நான்கு தலைமுறை கடந்தும் நடந்த அதிசயங்கள்!

சுடுகாட்டில் 12 மணிக்கு மின்னல் போல் ஒரு ஒளி வந்து செல்ல, படையலை தெய்வம் ஏற்றுக் கொண்டதாகக் கூறி அந்த மருளாளியை அழைத்து மீண்டும் வீட்டுக்குத் (கோயிலுக்கு) திரும்புவர்.

Published:Updated:
பெட்டி சாமித் திருவிழா
திருச்சி மாநகரின் மையப்பகுதியான பாலக்கரை பகுதியில் உள்ளது நடுநெய்க்கார எடத்தெரு. இப்பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களில் `தேக்க பங்காளிகள்' என்ற பிரிவினர் உள்ளனர். இவர்கள் பெட்டி சாமி என்ற வீட்டுத் தெய்வத்தை வணங்கி வருகின்றனர். இந்தப் பெட்டி சாமிக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பிக்க, அந்த சாமியே உத்தரவு தந்தால்தான் விழா எடுக்க முடியும் என்கிறார்கள் இந்த மக்கள்.

பல காலமாக நடந்துவந்த இந்தத் திருவிழா, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போனது. என்ன காரணம் என்பது தற்போது உள்ள எவருக்கும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் விழாவிற்கான உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆண்டுதோறும் பெட்டி சாமியிடம் மன்றாடியும் குறி கேட்டும் உத்தரவு கிடைக்கவே இல்லை என்கிறார்கள். இப்படிப் பல காலம் காத்திருந்த இம்மக்களுக்கு இந்த ஆண்டு பெட்டி சாமியின் அருளால் விழா நடத்த உத்தரவு வந்துள்ளது.

பெட்டி சாமி
பெட்டி சாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேக்கப் பங்காளிகளில் உள்ள ஒருவரின் கனவில் வந்து, ”நான் பட்டினியாக இருக்கிறேன். கிழிந்த புடவையை கட்டியிருக்கிறேன்... கொலுசு, தாலி படைச்சு விழா எடுங்க” எனச் சொல்லியிருக்கிறது பெட்டி சாமி. இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்த மக்கள் வெளியூரில் வசிக்கும் ஆன்மிக பெரியவர் ஒருவரிடம் தங்களது சாமி பெயர், அது கூறிய விவரம் எதுவும் சொல்லாமல் உத்தரவு கேட்டார்கள். அவர் அருள் வந்து அவர்கள் வணங்கும் சாமி பெயரை சரியாகக் கூறினால் மட்டுமே அதை உத்தரவாக ஏற்றுக் கொண்டு விழா எடுப்பர் என்பது ஆண்டாண்டு காலமாக உள்ள வழக்கம். இந்த ஆண்டு குறி சொல்பவர் சரியாக சாமி பெயர், அது சொன்ன விவரங்களைச் சொன்னதுடன், சாமி தற்போது இருக்கும் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் (அதாவது தேக்க பங்காளிகளில் ஒருவர் வீட்டில்) மாற்றி வைத்து வணங்குமாறு உத்தரவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்து தற்போது நடக்கும் இந்த விழா குறித்து தேக்கப் பங்காளிகளில் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "என் மாமியாருக்கு 82 வயது. அவரே இந்தப் பெட்டி சாமிக்கு விழா எடுத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். இப்போதுதான் நாங்களே முதன்முறையாகப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கிறது எனப் பார்க்கிறோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து சகுந்தலா என்பவர் நம்மிடம் கூறுகையில், "சின்னாச்சி அம்மன், செவ்வந்தி பூ அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் வெண்கலச் சிலைகளாகவும், பெருமாள், தாயார், மற்றும் காவல் தெய்வங்களான தேக்குமலை அய்யனார், மதுரை வீரன், இருளப்பன் ஆகியோர் மரச் சிலைகளாகவும் கொண்டு ஒரு சிறிய பெட்டியில் வைத்து வணங்குகிறார்கள். இதுதான் பெட்டி சாமி" என்று கூறினார்.

பெட்டி சாமி விழா
பெட்டி சாமி விழா

நான்கு தலைமுறைகள் கடந்து நடக்கும் இந்த விழா விமரிசையாகவும் வெகு சிரத்தையோடும் நடைபெற்றது. இந்த மாதம் ஜூலை 28-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் இந்த விழா நடைபெற்றது. முதல்நாள் பெட்டி சாமியுடன் கரகம் எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றுக்கு எடுத்துச் சென்று, பெட்டி சாமிக்குப் பால், தேன் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து, காவிரி ஆற்று நீரில் கரகம் எடுத்துக் கொண்டு வீதிஉலா முடித்து கோயிலுக்குள் (வீட்டிற்குள்) வைக்கின்றனர்.

இரண்டாம் நாள் காலை 'ஊர் விருந்து' என்ற பெயரில் உணவு சமைத்து அக்கோயில் எல்லைக்குள் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். அன்று மாலையில் வீட்டுப் பெண்கள் மாவிளக்கு பூஜை செய்து பெட்டி சாமியை வணங்குகின்றனர். மூன்றாம் நாள் இரவு கோயில் வாசலில் குட்டி குடித் திருவிழா நடைபெறும். அதாவது மருளாளி எனும் சாமியாடி ஒருவர், ஆட்டு ரத்தத்தை சாதத்துடன் கலந்து ஆண்களுக்கு மட்டும் உண்ணத் தருவார். இதற்கு “எறிசோறு“ என்று பெயர். பின்னர் அந்த ஆட்டையும், ரத்தத்தையும் எடுத்துக் கொண்டு இரவு 12 மணிக்கு சுடுகாடு செல்கின்றனர். அப்போது அந்த மருளாளியைக் கயிறு கொண்டு கட்டி கூட்டிச் செல்வர். அவரோ அருள் வந்து நடக்கும் போது, மற்றவர்களால் பிடித்துக் செல்ல முடியாத அளவிற்கு வலுவுடன் அனைவரையும் இழுத்துக் கொண்டு நடந்து செல்வார்.

பெட்டி சாமி
பெட்டி சாமி

சுடுகாட்டில் 12 மணிக்கு மின்னல் போல் ஒரு ஒளி வந்து செல்ல, படையலை தெய்வம் ஏற்றுக் கொண்டதாகக் கூறி அந்த மருளாளியை அழைத்து மீண்டும் வீட்டுக்கு (கோயிலுக்கு) திரும்புவர். நான்காவது நாள் கிடா வெட்டி விருந்து வைத்து பின்னர் கரகத்துடன் காவிரி ஆறு சென்று விடையாற்றி, திருவிழாவை நிறைவு செய்கின்றனர். இந்த விழா குறிப்பிட்ட இன மக்களுக்கு மட்டுமின்றி அந்த வட்டார மக்கள் அனைவருக்கும் பொதுவான விழாவாகவே நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பெட்டி சாமியின் அருளைப் பெறுபவர்கள் எந்தவித அச்சமும் இன்றி வளமான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

- கோ.ரா.தமிழ் அழகி, திருச்சி

மாணவப் பத்திரிகையாளர்.