Published:Updated:

திருச்சி கோயில்கள் - 21: கர்ப்பிணிகளைக் காக்கும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு!

ஈசன் வந்து அமர்ந்த இடத்தில் அம்பிகையும் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக மாறிவிட்டாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.

முற்காலச் சோழர்களின் தலைநகரமாக இருந்தது திருச்சி உறையூர். கோழி என்ற பெயரால் முன்பு வழங்கப்பட்ட உறையூர் தற்போது சுருங்கிப்போய் திருச்சி மாநகரின் சிறிய பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் சோழர்கள் தங்களைக் 'கோழி வேந்தன்' எனக் கூறிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொண்டனர் என்பதை அவர்களின் பல கல்வெட்டுகளின் வழியே அறியலாம். உறையூரில் அமைந்துள்ள சிறப்பான ஆலயங்கள் பலவற்றில் அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று எனலாம்.

குங்குமவல்லி
குங்குமவல்லி
DIXITH

புறநானூறும் சிலம்பும் போற்றிப்புகழும் சிறந்த ஊர் உறையூர். இது உறந்தை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சேவற் கோழி ஒன்று யானையை எதிர்த்து வென்ற இடம் இது என்பதால் இது கோழி என்ற பெயரையும் கொண்டது என சிலப்பதிகாரம் குறிப்பிடும். இங்கு அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பான கோயில் எனப்படுகின்றது. இக்கோயில் 1800 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்றும் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் பெருமைகளைச் சொல்கின்றன என்றும் கூறப்படுகின்றன.

தான்தோன்றி ஈசன்
தான்தோன்றி ஈசன்
DIXITH

முற்காலச் சோழர்களில் ஒருவனான சூரவாதித்த சோழனின் மனைவி காந்திமதி. நாகர் குல இளவரசியான இவளுக்கு திருச்சி தாயுமான சுவாமியின் மீது அதீத பக்தி. ஒருநாளும் அவரை தரிசிக்காமல் இவள் பொழுது சென்றதில்லை. இந்நிலையில் பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை நிலையை காந்திமதி எய்தினாள். நிறைமாத சூலியான காந்திமதி ஒருநாள் தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல் சுவாமியின் நந்தவனமான செவ்வந்தித் தோட்டத்தில் மயங்கி அமர்ந்தாள். தாயும் தந்தையுமான ஈசனைப் பார்க்க முடியாத நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்தாள்.

நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்
DIXITH

வணிகர் குலப் பெண் ரத்னாவதியின் பிரசவம் பார்க்க ஓடோடி வந்த தாயுமான தெய்வம், காந்திமதியை மட்டும் விட்டு விடுமா என்ன! அவள் அமர்ந்திருந்த செவ்வந்தித் தோட்டத்தில் பிரதட்சயமாகத் தோன்றியது. 'மகளே வருந்தாதே, உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். இனி எப்போதும் உன் துணை இருப்பேன். இன்று மட்டுமல்ல, உனக்கு காட்சி தந்த இடத்தில் லிங்க ரூபமாக தான்தோன்றி ஈசனாக எப்போதும் இருந்து உன்னைப் போன்ற சூல் கொண்ட தாய் வடிவங்களை எப்போதும் காத்து நிற்பேன்!' என உறுதி சொன்னது. ஈசன் வந்து அமர்ந்த இடத்தில் அம்பிகையும் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக மாறிவிட்டாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.

தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
DIXITH

கருவறையில் ஈசன் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறான். இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்திய அம்பிகை அழகுற காட்சி தருகிறாள். இங்கே நவகிரகங்கள் தங்கள் துணையுடன் காட்சி தருவது சிறப்பு. தெற்கு பிராகாரத்தில் எழுந்தருளி இருக்கும் தில்லை காளிக்குச் செய்யப்படும் பரிகார ஹோமம் இங்கு சிறப்பானது என்கிறார்கள். 27 வகை மூலிகைகளுடன் மிளகாய் சேர்த்து செய்யப்படும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகி நோய்கள் விலகும் என்கிறார்கள். சிவாலயத்தில் வழக்கமாக இருக்கும் எல்லா மூர்த்தங்களின் சந்நிதியும் இங்கு உள்ளன. காந்திமதி வழிபட்டு குங்குமவல்லி தேவிக்கு வளையல் சார்த்தி அதைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை வளையல் காப்புத் திருவிழா இங்கு நடைபெறுகிறது. இவ்விழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பர். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் மகப்பேறு வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவர். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை - ஜாதகக் கோளாறுகள் நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவர். வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் அம்பிகை வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும். திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம் எனப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்
சொர்ண ஆகர்ஷண பைரவர்
DIXITH

மேலும் இங்கு வந்து வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணம், குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் எங்கிருந்தும் பெண்கள் கூட்டம் இந்த கோயிலுக்கு அலை அலையென வருவது இங்கு சகஜம் என்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். குழந்தை வரம் வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஆலயம் ஒரு நிவர்த்தித் தலம் என்றே திருச்சிவாசிகள் கூறுகின்றனர்.

அமைவிடம் - திருச்சி உறையூர் சாலையில், உறையூரின் மத்தியில் ஆலயம் உள்ளது. திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு