Published:Updated:

திருச்சி கோயில்கள் - 22: விரும்பிய வேலை வாய்ப்பை அளிக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கர் திருக்கோயில்!

2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் வன்னி மரம் தலமரமாக உள்ளது. ஆதியில் யானைகளின் தொந்தரவு அதிகம் இருந்த இந்த காட்டுப்பகுதியில் இந்த அழகிய நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு இருக்கிறார்கள்.

ஹிம்ஸம் எனும் கொடுமையைக் களைந்த மகாசக்தி ஸிம்ஹம். எங்கெல்லாம் கொடுமை நடக்கிறதோ அங்கெல்லாம் ஸிம்ஹம் தோன்றி ஹிம்சையை அழித்து நல்லதைக் காப்பாற்றும் என்பது புராணம் கூறும் தகவல். மீன், கூர்மம், வராகம் போன்றவை விலங்கு வடிவெடுத்த திருமாலின் திருவடிவங்கள். இவை தீமையை அழிக்கவென்றேத் தோன்றியவை. ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் தீமையை அகற்றியதோடு, மனிதர்கள் தம்மைப் போலவே ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று வலியுறுத்திய திருவடிவங்கள். ஆனால் நரசிம்மர் மனிதமும் விலங்கும் சேர்ந்த திருவடிவம். அதாவது தீமையை அழிக்கும் பராக்கிரமமும் பக்தனைக் காக்கும் கருணையும் கொண்ட அழகிய வடிவம். அதனால் நரசிம்மரை வணங்கும் சகலருக்கும் பயம் என்பதே இருக்காது.

காட்டழகிய சிங்கர்
காட்டழகிய சிங்கர்
DIXITH

தீமைகளில் இருந்து காத்துக்கொள்ளவும், எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து விலகிக்கொள்ளவும் நரசிம்மர் வழிபாடே உகந்தது என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மர் திருத்தலங்கள் பலவும் தென்னகம் எங்கும் இருந்தாலும் திருச்சி மாநகரில் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கர் அற்புதமானவர். ரங்கநாதர் இங்கு வந்து தங்கியபோதே சிங்கரும் இங்கே வந்து தங்கினார் என்று வரலாறு கூறுகிறது. திருவரங்க ரயில் நிலையத்தில் இருந்து 1 கி. மீ. தொலைவிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும் இந்த ஸ்ரீகாட்டழகிய சிங்கர் திருக்கோயில் உள்ளது. கருவறையில் மேற்கு நோக்கி, சுமார் 8 உயரத்தில் பிரமாண்ட வடிவில் தனது இடது மடியில் மகாலக்ஷ்மி தாயாரை அமர்த்தியபடி அமர்ந்துள்ளார். இடது கரம் தாயாரை அணைத்திருக்க, வலது திருக்கரத்தில் அபய முத்திரையைக் காட்டுகிறார் பெருமான். மேலிரு கரங்களும் சங்கு சக்கரத்தை ஏந்தியபடி உள்ளன. வெள்ளியில் அமைந்த பற்களின் அமைப்பு நரசிம்மரின் கருணையை வெளிக்காட்டியபடியே உள்ளன.

காட்டழகிய சிங்கர் கோயில்
காட்டழகிய சிங்கர் கோயில்
DIXITH

2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் வன்னி மரம் தலமரமாக உள்ளது. ஆதியில் யானைகளின் தொந்தரவு அதிகம் இருந்த இந்த காட்டுப்பகுதியில் இந்த அழகிய நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு இருக்கிறார்கள். நாள்கள் செல்ல செல்ல, யானைகளின் தொந்தரவு விலகியதும் காட்டைத் திருத்தி ஆலயம் எழுப்பி இருக்கிறார்கள். காட்டில் அமர்ந்த பிரான் காட்டழகிய சிங்கர் என்றானார். ஸ்ரீராமாநுஜரின் சீடரான பிள்ளை லோகாச்சார்யர் இந்த கோயில் சிங்கர் மீது வியந்து ஸ்ரீவசநவ பூஷணம் போன்ற 18 கிரந்தங்களை இயற்றியுள்ளார் என்பது சிறப்பு. 1297-ம் ஆண்டு, ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

வன்னி மரம்
வன்னி மரம்
DIXITH

உயர்ந்த விமானத்தோடு கூடிய கருவறை, அழகிய முகமண்டபம், மகா மண்டபம், கருடன் சந்நிதி, இன்னும் பல சந்நிதிகளும் உத்தம நம்பி வம்சத்தில் உதித்த சக்ர ராயராலும், நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆலய வரலாறு கூறுகிறது. இங்கு மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் மிகச் சிறப்பானவை. இதில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், அனந்த நரசிம்மர் போன்ற பல வடிவங்களில் அழகிய சிங்கர் வரையப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் இங்கு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டால் விரும்பிய வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகங்கள், தொழில்-வியாபார அபிவிருத்தி போன்றவற்றை பெருமாள் அருள்வதாகக் கூறுகிறார்கள் பிரதோஷ நாளில் நரசிம்மருக்கு இங்கு செய்யப்படும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்றும் வாழ்க்கையில் எந்தவித அச்சம் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கள் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள்.

காட்டழகிய சிங்கர்
காட்டழகிய சிங்கர்
DIXITH

மேலும் தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குடும்பத்தில் அமைதி இன்றி சண்டை சச்சரவுகளால் துன்பப்படுவோர், தோஷம்-பாவம்-சாபம் போன்றவற்றால் கலங்குபவர்கள் யாரும் இங்கு வந்து அழகிய காட்டு சிங்கரையும் தாயாரையும் வணங்கி பானக நைவேத்தியமோ, வெண்ணெய் கலந்த தயிர் சாத நைவேத்தியமோ சமர்ப்பித்து மனதார வேண்டிக் கொண்டால் பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள் திருச்சிவாசிகள். மேலும் இங்கு வந்து வஸ்திரமும் துளசியும் சாத்தி வழிபட்டால் மங்காத புகழையும் நீங்காத ஐஸ்வரியத்தையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. திருமகளை மடியில் தாங்கிய இவரை வணங்கினால் திருமண வரமும் எளிதில் கிட்டும் என்கிறார்கள்.

சுவாதி நட்சத்திர நாள்கள், பங்குனி யுகாதி, வைகாசி நரசிம்ம ஜயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், விஜயதசமி வன்னி மர அம்பு எய்யும் விழா போன்ற விழாக்கள் இங்கு விசேஷம் என்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான காட்டழகிய சிங்கர் ஆலயம் மிக மிக அற்புதமான பரிகார கோயிலாக ரங்கநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைத்துள்ளது. ஸ்ரீரங்கம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது. 'ஆபத்தில் யார் ஓடிவந்து உதவி செய்கிறார்களோ, அவர்களே அழகானவர். அந்த வகையில் அழகில் நிகரற்ற அழகிய சிங்கரை, அற்புத நரசிம்மரை இந்த ஆலயத்தில் தரிசித்து சகல தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்று நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் தெரிவிக்கிறார்கள் திருச்சி மாநகர மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு