Published:Updated:

திருச்சி கோயில்கள் - 27: ஆலயத் திருப்பணி செய்தவரின் மகளுக்கு கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீசன்!

திருப்பெருமுடி பரமேசுவரர் கோயில்
News
திருப்பெருமுடி பரமேசுவரர் கோயில்

இங்குள்ள ஈசன் சுயம்பு மூர்த்தமாக தலை சாய்ந்த நிலையில் அருளுகிறார். அகத்தியர் சற்றே தொலைவில் அமர்ந்து வேண்டிக் கொள்ள, அவர் வேண்டுதலை செவி சாய்க்க இந்த மகாதேவர், திருமேனி சாய்ந்தார் என செவி வழி கதைகள் சொல்கின்றன.

திருச்சியின் பழைமைக்குச் சான்றாக விளங்கும் கோயில்களில் பெருங்குடி அகத்தீஸ்வரமுடையார் கோயிலும் ஒன்று என்கிறது வரலாறு. அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வணங்கிய ஈசன் இவர். அகத்தீஸ்வர பெருங்குடி, திருப்பெருமுடி பரமேசுவரர் கோயில், பெருமுடி பரமேஸ்வரம் என்றெல்லாம் வழங்கப்பட்ட இந்த ஊரில் அற்புதத் திருமேனியராக ஈசன் எழுந்தருளி உள்ளார். கண்ணொளிப் பெருமான், வளர்நாதர், அகஸ்தீஸ்வரர், திருப்பெருமுடி பரமேஸ்வரர், பெருமுடி அகத்தீசுவரமுடையார், பெருங்குடி மகாதேவர் என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். தற்போது இந்த ஊர் பெருங்குடி என்றே சொல்லப்படுகிறது.
பெருமுடி அகத்தீசுவரமுடையார்
பெருமுடி அகத்தீசுவரமுடையார்

இங்கு வந்து வணங்கிய அன்பர்களுக்கு எத்தனையோ திருவிளையாடல்கள் புரிந்து எண்ணற்ற நன்மைகளை அருளியவர் இந்த ஈசன். அதில் முக்கியமானது கூத்தன் என்ற தனது அடியாரின் வேண்டுதலுக்கு மனமிரங்கி அவர் மகளுக்கு கண்ணொளியை மீண்டும் வழங்கியது என்கிறார்கள் ஊர் மக்கள். அதுமுதல் கண்ணொளி வழங்கும் பரிகார கோயிலாக இது விளங்கி வருகிறது. கண்ணில் புரை விழுந்தவர்கள், கண் பார்வை குறைந்தவர்கள், கண் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியவர்கள் பலரும் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். அது என்ன கூத்தன் மகளின் திருக்கதை என்று கேட்க, அவ்வூர் மக்கள் விவரித்தனர்.

அது தமிழகம் குழப்பமான ஆட்சிகளில் இருந்து வந்த காலம். அப்போது இந்த பகுதியில் வாழ்ந்து வந்தவர் கூத்தன். இவருடைய திருமகள் நல்ல மங்கை. இருவருமே ஈசனின் அடியார்களாக வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் விஷ மலர் ஒன்று கண்ணில் பட நல்ல மங்கையின் பார்வை பறிபோனது. அழுது துடித்த கூத்தனார் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் மகளின் கண் பார்வை திரும்பவில்லை. இந்நிலையில் பெருங்குடி அகத்தீஸ்வரமுடையார் கருணையைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்தார். அது கி.பி.1268-ம் ஆண்டு ஹொய்சள மன்னன் ராமநாதனின் ஆட்சியில் இக்கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பணியில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய கூத்தன், தன்னிடம் இருந்த 3 கழஞ்சு பொன்னை வழங்கினார். 'ஐயனே நான் பொன் கொடுத்ததால் கேட்கவில்லை, என் மகளின் பார்வையைத் திரும்பக் கொடு!" என்று வேண்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இறைவனும் மனம் கனிந்து அந்த பெண்ணுக்கு மீண்டும் பார்வையை அளித்தார். இதனால் இங்குள்ள ஈசனுக்கு பொன் பட்டம் செய்து வழிபட்டார் கூத்தன். இதை இங்குள்ள ஆலயச் சுவற்றிலும் கல்வெட்டாக பதித்து வைத்துள்ளார். மேலும் இந்த கோயில் மிகப் பழமையானது என்பதை நிரூபிக்க இங்கு சுந்தரச் சோழனின் கல்வெட்டுகளும் உள்ளன. இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு இங்கு இருப்பதால் இந்த ஆலயம் சுமார் 960-ம் ஆண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். மேலும் சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 'வீரபாண்டிய தலைக்கொண்ட கோப்பரகேசரி' என்று ஆதித்த கரிகாலனைக் குறிக்கிறது. இந்த ஆலயத்தின் அழகியச் சிற்பங்களும் அமைப்பும் சோழர்களின் காலத்தையே நினைவுறுத்துகின்றன என்பதும் வரலாறு சொல்லும் தகவல்.

சிவகாமி சுந்தரி
சிவகாமி சுந்தரி

இங்குள்ள ஈசன் சுயம்பு மூர்த்தமாக தலை சாய்ந்த நிலையில் அருளுகிறார். அகத்தியர் சற்றே தொலைவில் அமர்ந்து வேண்டிக் கொள்ள, அவர் வேண்டுதலை செவி சாய்க்க இந்த மகாதேவர், திருமேனி சாய்ந்தார் என செவி வழி கதைகள் சொல்கின்றன. ஈசனின் கருவறைத் திருவாயிலில் துவாரபாலர்களில் வலது புறத்தில் இருக்கும் பாலகர் கையில் நரசிம்ம திருமுகம் காணப்படுகிறது. இது வெகு அபூர்வமான திருக்கோலம் என்கிறார்கள். இங்குள்ள அம்பிகை அழகே வடிவானவள். சிவகாமி சுந்தரி என்ற திருநாமத்தில் தனிச் சந்நிதியில் அருளுகிறாள். அகிலாண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் இவளுக்கு உண்டு. இவளை வாங்கினால் நீங்காத மங்கல வாழ்வு கிட்டும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்குள்ள மகாகணபதி, விஸ்வரூப சுப்பிரமணியர், வெங்கடேச பெருமாள், லட்சுமி நாராயணர், காமதேனு, அகத்தியர், வீர ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் சிற்பங்கள் வெகு அழகானவை; வேறு எங்கும் காண இயலாத தனிச் சிறப்பு கொண்டவை எனலாம். இந்த ஆலயத்தில் உள்ள சிறிய சிறிய சிற்பங்களும் தனித்துவம் கொண்டவை.

வழக்கமான எல்லா விழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பரிகாரம் என்ற வகையில் இங்கு அநேக பூஜைகள் நடைபெறுகின்றன என்றே சொல்லலாம். குறிப்பாக ஈசனுக்கு விளக்கேற்றி கண்ணொளி வேண்டி செய்யும் பூஜையும் அம்பிகைக்கு வஸ்திரம் சாத்தி மாங்கல்ய பலம் வேண்டும் பூஜையும் விசேஷம் என்கிறார்கள். களத்திர தோஷம், எதிரிகள் அச்சம், பல்வேறு சாபங்களுக்கும் இங்கு நிவர்த்தி வேண்டி பூஜைகள் செய்கிறார்கள். இங்குள்ள ஆஞ்சநேயர், சனீஸ்வரருக்கே அதிகம் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல் வேறெங்கும் காணமுடியாத தட்சிணாமூர்த்தி, விநாயகர் திருமேனிகளுக்கும் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.

திருப்பெருமுடி பரமேசுவரர் கோயில்
திருப்பெருமுடி பரமேசுவரர் கோயில்

திருச்சி செல்பவர்கள் கட்டாயம் காண வேண்டிய ஆலயங்களில் இதுவும் முக்கியமானது எனலாம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து பல சரித்திரத் தகவல்களைச் சுமந்து நிற்கும் இந்த ஆலயம் திருச்சியின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்று என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படிச் செல்வது?

திருச்சி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயலூர் செல்லும் சாலையில் 9 கி.மீ தொலைவிலுள்ளது சோமரசன் பேட்டை, அங்கிருந்து வலது புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது பெருங்குடி கிராமம். இந்த ஆலயத்தின் திருநடை காலை 8:30 முதல் 11.30 மணி வரையும் மாலை 5 முதல் 7:30 மணி வரையும் திறந்து இருக்கும்.