Published:Updated:

திருச்சி கோயில்கள்: வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்!

உறையூர் வெக்காளியம்மன்
உறையூர் வெக்காளியம்மன்

கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோயிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க்கடவுளாகவும் விளங்கியவள் வெக்காளி எனும் கொற்றவை. இவள் வெற்றியை அருளும் வீரதேவியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நீதியரசியாக, குறைகளைத் தீர்க்கும் குலதேவியாக. தீமைகளை அழிக்கும் ஸ்ரீதுர்கையாக சுருங்கச் சொல்லின் பக்தர்களின் தாயாக விளங்குபவள் வெக்காளி.

உறையூர், வாகபுரி, கோழி, உறந்தை, வேதபுரம், வாரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றெல்லாம் வழங்கப்படும் உறையூர் இன்று திருச்சி மாநகரின் அங்கமாக உள்ளது. முன்பு முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கியது என்று வரலாறு சொல்கிறது. உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக இந்த வெக்காளி வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.

வெக்காளி
வெக்காளி

சாரமாமுனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வரும் காலத்தில், அந்த மலர்களை அரசனுக்காக எடுத்து சென்றுவிட்டான் பிராந்தகன் எனும் வணிகன். முனிவர் மன்னனான வன்பராந்தகனிடம் முறையிட அவன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமான சாரமாமுனிவர் தாயுமான சுவாமியிடம் முறையிட்டார். ஈசன் கோபமாகி மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார். இதனால் வீடிழந்த மக்கள், சோழர்களின் காவல் தேவியான கொற்றவையை சரண் அடைய, அவள் இந்த ஊர் மக்களின் காவலுக்காக இங்கே வெட்ட வெளியில் எழுந்தருளி மக்களைக் காத்தாளாம். அன்று அவள் அமர்ந்த இடத்திலேயே இன்னும் அருள்பாலித்துக் கொண்டு மேலே விமானமோ விதானமோ இல்லாமல் இருந்து வருகிறாள் என்கிறது கோயில் புராணம்.

கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோயிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது. இதனால் தேவி வீர ஆசனத்தில் தீ சுவாலையுடன் நாகமும் கொண்ட கிரீடமும் சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள். உடுக்கை, பாசம், சூலம் ஏந்தி அசுரனை மிதித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

வெக்காளியம்மன்
வெக்காளியம்மன்

உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள். அதனால் ஏழை எளிய மக்களின் கூட்டமே இந்த ஆலயத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். குறைகளைத் தீர்த்துக் கொள்ளவோ, ஏதேனும் வேண்டியோ இங்கு வரும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி விண்ணப்பித்து வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி, பிறகு அதை அங்குள்ள சூலத்தில் கட்டி வைப்பார்கள். அப்படி கட்டிய நாளில் இருந்து 40 நாள்களுக்குள் அன்னை அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பெரும்பாலும் நடைபெறுகிறது என்பதும் உண்மை.

திருச்சி கோயில்கள்: ஸ்ரீரங்கத்து கோயிலின் விடை தெரியாத ஏழு அதிசயங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு ஸ்ரீவல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி - தெய்வானை சமேத மயூர கந்தன், காத்தவராயன், புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன், ஸ்ரீதுர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என பல சந்நிதிகள் உள்ளன. வெக்காளி அம்மனுக்கு ஆண்டுதோறும் அநேக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பௌர்ணமியில் நடைபெறும் அபிஷேக வைபவம் அற்புதமான தரிசனம் எனலாம். அதுபோக, சித்திரை திருவிழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், ஆனி கடைசி வெள்ளியில் காய்கனிகள் அலங்கார வழிபாடு, .ஆடி வெள்ளியில் சிறப்புவைபவங்கள். ஆவணியில் சண்டிஹோமம், புரட்டாசியில் நவராத்திரி வழிபாடு, கார்த்திகையில் தீப விழா, தை பொங்கல் வழிபாடு, மாசி கடைசி ஞாயிறில் லட்சார்ச்சனை, பங்குனி முதல் வெள்ளியில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா என இந்த ஆலயத்தில் கொண்டாட்டத்துக்கு குறைவே இல்லை எனலாம். ஆனாலும் இங்கு ஆடியின் ஒவ்வொரு நாளுமே இங்கு சிறப்பு என்றே சொல்லலாம்.

சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா

பெருமைகள் பல கொண்ட, அம்பிகைக்கே உரித்தான இந்த ஆடியில் வாய்ப்பு இருப்பவர்கள் உறையூர் சென்று வெக்காளியின் அருள்பெற்று மகிழலாம். வெக்காளியின் திருக்கோயிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது என்பார்கள். தோஷங்கள் விலகும் தலம், பாவங்கள் தோலையும் தலம். புண்ணியங்கள் சேரும் தலம் வெக்காளியின் திருத்தலம். அன்னையின் திருவருளால் நாடும் வீடும் சகலமும் நலம் பெற்று வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

அமைவிடம்

திருச்சி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உறையூர் உள்ளது.ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. அதிகாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு