Published:Updated:

தாம்பூலம் தந்தாள் அகிலாண்ட நாயகி!

அகிலாண்டேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
அகிலாண்டேஸ்வரி

ஆதிசங்கரரும் அகிலாண்டேஸ்வரியும்!

தாம்பூலம் தந்தாள் அகிலாண்ட நாயகி!

ஆதிசங்கரரும் அகிலாண்டேஸ்வரியும்!

Published:Updated:
அகிலாண்டேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
அகிலாண்டேஸ்வரி

பூவுலகில் சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டுமென ஆசைப்பட்டாள் அம்பிகை. எழில் கொஞ்சும் பொன்னித் திருக்கரையை அடைந்தாள். நாவலங்காடு நானாவித நறுமணங்களோடும் திகழ்ந்தது. பொன்னி நதியின் நீரெடுத்துச் சிவலிங்கமாக்கி வழிபடத் தொடங்கினாள் அம்பிகை.

அகிலாண்டேஸ்வரி
அகிலாண்டேஸ்வரி

அங்ஙனம் ஜகன்மாதாவான அகிலாண்டேஸ்வரி நீரால் உருவாக்கிய நீர்த்திரள்நாதரே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர். இவர் அப்பு லிங்கேஸ்வரர். அம்பிகை வழிபட்ட ஐதீகம் இப்போதும் தொடர்கிறது.

உச்சிக்கால வழிபாட்டு நேரத்தில் அர்ச்சகர், அகிலாண்டநாயகி திருச்சந்நிதியிலிருந்து புறப்படுவார். அம்பிகை போல உடை புனைந்திருப்பார். கிரீடமும் உருத்திராட்ச மாலையும் மலரும் நீரும் கைகளில் ஏந்தி வருவார். மூன்றாம் பிராகாரத்தை முழுதாக வலம் வந்து, சுவாமி சந்நிதிக்குச் செல்வார். தன்னை அம்பிகையாக பாவித்து இறைவனுக்குப் பூஜை செய்வார். அம்பிகையே வந்து ஐயனை வழிபடுவது போன்ற அந்த அற்புதம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

திருவானைக்காவல் கோயிலின் இந்தச் சிறப்பம்சம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இதேபோல் இன்னும் நாம் அறிய வேண்டிய - ஆனைக்கா அன்னையின் அற்புதங்கள் உண்டு. வரும் நவராத்திரி புண்ணிய காலத்தில் மனதில் அசைபோட்டு அன்னையைத் தியானிக்கும் வகையில் சில கதைகளைப் படித்து மகிழ்வோமா!

ஆதிசங்கரரும் அகிலாண்டேஸ்வரியும்!

அகிலாண்டேஸ்வரி நாயகியின் சந்நிதி. தனித் திருக்கோயிலாகவே இருக்கிறது. சுவாமி மேற்கு நோக்கியவர் அல்லவா; இங்கே, அம்பிகை கிழக்கு நோக்கியவள்.

அம்பிகை திருக்கோயிலுக்குக் கோபுரமும் இரண்டு பிராகாரங்களும் உள்ளன. நேரடியாக அம்பிகை கோயிலுக்குள் வருவதற்கு வழி உண்டு. அம்மன் கருவறைக்குள் செல்வதற்கு முன், எதிரில் நான்கு திருக்கரங்களுடன் கூடிய பிரசன்ன விநாயகர் காட்சி தருகிறார்.

ஆதிசங்கரர் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை புரிந்த காலத்தில், அம்பிகை உக்கிரமானவளாக இருந்தாளாம். அம்பிகையின் உக்கிரம் தணிவித்து சாந்த ஸ்வரூபியாக ஆக்க விழைந்த சங்கர பகவத் பாதர், அம்பிகையின் திருமகனாரின் திருவுருவத்தை எதிரில் ஸ்தாபித்துக் கோபத்தைக் குறைத்ததாக ஐதீகம். இப்போதும்கூட, அம்பிகையை தரிசித்து விண்ணப்பிப்பதற்கு முன்னர், விநாயகரிடம் சொல்லிவிட்டுச் சென்றால், விநாயகர் நடத்திக் கொடுத்து விடுவார் என்பது ஐதீகம்.

அம்பிகையின் உக்கிரத் தன்மையால், ஆலயத்தினுள் செல்லாமல் வெளியிலிருந்தே வழிபாடு நடத்தினார்களாம் பக்தர்கள். இதைக் கண்டு மனம் நொந்த சங்கரர், அம்பிகையின் உக்கிரத்தை மேற் கொண்டும் தணிக்க உபயம் தேடினார். அம்பிகையின் செல்லப் பிள்ளையாயிற்றே. அவருக்குக் கிடைக்காத வழியா!

அகிலாண்டேஸ்வரி
அகிலாண்டேஸ்வரி

அம்பாள்  சக்ர ராஜ ஸிம்ஹாசலேஸ்வரி ஆயிற்றே!  சக்கரங்கள் இரண்டைத் தயாரித்தார் சங்கரர். அம்பாளிடம் அவற்றைக் கொடுத்து உக்கிரமெல்லாம் இறக்க விண்ணப்பித்தார்.  சக்கரங்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவோ நீர்த்தலம். எங்கே பிரதிஷ்டை செய்வது? தண்ணீரில் பிரதிஷ்டை செய்ய முடியுமா? பார்த்தார். அம்பாளின் காதுகளில் தாடங்கங் களாக அந்த  சக்கரங்களை அணிவித்து விட்டார். இப்போதும் ஒவ்வொரு காதிலும் சிவசக்கரமும்  சக்கரமும் அணிந்து தாடங்க மகிமை மிக்கவளாக  சக்ர ஸ்வரூபிணி காட்சி தரும் விந்தைத் திருத்தலம் இது!

மைந்தர்கள் வணங்கும் மங்கை நல்லாள்!

அம்பாளின் திவ்வியத் திருக்கோலம் வெகு அழகு. வார்த்தைகள் வர்ணிக்க முடியா உயர் அழகு! நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேற்கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள்.

கவசம் அணிவித்து அலங்காரம் செய்யும்போது வலது மேற்கரத்தில் கிளியும் இடது மேற்கரத்தில் தாமரையும் அணிவித்து அழகு பார்க்கும் வழக்கமும் உண்டு. கீழ்க்கரங்கள் இரண்டும், அபய-வர முத்திரை காட்டி அருள்கின்றன. அகிலாண்டநாயகியின் மந்தகாசப் புன்னகையோ உணர்வையெல்லாம் உருக்கி வசீகரிக் கும்.

எண்ணிறந்த தாயர் வயிற்றிருந்து பிறந்(து)

இடும் துயரமனைத்தும் நீங்க

மண்ணிறந்து புனலிறந்து வயங்கிய செந்

தீயிறந்து வளியினோடு

விண்ணிறந்து பெருங்கருணைத் தாயாகித்

தனது அகட்டின் விரவ வைத்துக்

கண்ணிறந்த கவின் காட்டும் அகிலாண்ட

நாயகியைக் கருத்துள் வைப்போம் என்று திருவானைக்கா புராணத்தில், கச்சியப்ப முனிவர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரியைப் போற்றிப் புகழ்கிறார்.

அம்பிகையின் முன்னர் முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளார். ஒரு பக்கம் விநாயகரும் இன்னொரு பக்கம் முருகனும் எதிரில் எழுந்தருளி வணங்கக் கூடியவளாக இருக்கும் அம்பிகையை வழிபட்டு உய்வு அடைந்தவர்கள் பலர்.

‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்று த்விஜாவந்தி ராகத்தில் பாடுகிற முத்துசாமி தீட்சிதர், ‘லம்போதர (விநாயகர்) குருகுக (முருகர்) பூஜிதே’ என்று மைந்தர்கள் வணங்கும் மங்கை நல்லாளைச் சரணத்தில் பாடுகிறார்.

அம்பிகை வழிபட்ட ஐதீகம்
அம்பிகை வழிபட்ட ஐதீகம்


அன்னையில் துகிலில் பற்றிய தீ!

அகிலாண்டேஸ்வரியின் அருளால்தான் தாயுமானவ சுவாமிகள் உயர்வுற்றார். ஒரு முறை இவர் திருச்சி மன்னரின் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றைத் தன்னினைவு இன்றிக் கசக்கிப் போட, அரசிக்கான அவமரியாதை என்று மற்றவெரல்லாம் அவதூறு பேச... அதே நேரம் திருவானைக்காவில், அகிலாண்டேஸ்வரியின் திருத்துகிலில் நெருப்புப் பொறி பற்றியதும், வேகமாக உள் நுழைந்த தாயுமானவர் நெருப்பை அணைத்ததும், இதனை அர்ச்சகர்கள் பார்த்ததும், அவர்கள் கூடிவந்து நடந்தது கூறியதும், பின்னர் வெளிப்பட்டு வியப்பை ஏற்படுத்தின.

கச்சியப்ப முனிவரும், கமலை ஞானப்பிரகாசரும் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் இந்த அம்பிகையைப் பாடிப் பரவினார்கள்.

மாணவியாக அருளும் அம்பாள்!

அகிலாண்டேஸ்வரி தாய், கன்னியாகவே இருப்பதாக ஓர் ஐதீகமும் உண்டு.

பூவுலகில் வந்து நாவலங்காட்டில், தவம் செய்து சிவலிங்கத்தைப் பூசித்த அம்பிகை, தன்னெதிரில் அருள் பாலித்த ஐயனிடம், வேதாந்த சித்தாந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டினாள். பரமனாரும் பொருள் விளக்கினார். ஞானம் முடிவற்றது என்றும் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியதென்றும் இறையனார் உபதேசித்தார்.சிவபிரான் குருவாக இருக்க, அம்பிகை மாணவியாக இருந்து அருள் நிறைவித்த அற்புதத் திருத்தலம். பொதுவாக பக்தர்களுக்கு உபாத்தியாயராக அம்பிகை இருப்பதாக ஐதீகம். ஹைமவதி என்னும் திருநாமத்துடன் உமா தோன்றி, இந்திராதி தேவர்களுக்கு அறிவு வழங்கியதாக உபநிஷதங்கள் கூறும். ஆயின், அந்த அம்பிகையே ஞானக் குழந்தையாகி சிக்ஷ பெறும் சிறப்புத் தலம் திருவானைக்கா! ஆக, கல்வி முழுவதும் முடியாத நிலையில், திருமணம் வேண்டா மென்று, அம்பிகை கன்னிக் கோலம் பூண்டு விட்டதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தக் கோயிலில், திருக்கல்யாணத் திருவிழா கிடையாது!

வரதனுக்கு வரம் கிடைத்தது!

ஞானவாணியாக நிற்கும் அகிலாண்டநாயகி, தன்னை வணங்கு பவர்களை ஞானவான்களாக்க வல்லவள். அவ்வாறு கவிஞரானார் வரதன்.

யார் இந்த வரதன்? திருவானைக்கா திருக்கோயிலில் பணி செய்து வந்தார். மெத்தப் படித்தவர் அல்லர். அதே கோயிலில் கணிகையாக இருந்த பெண்ணை மணந்தார். இருவரும் தினமும் ஆலயப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

அன்றொரு நாள். சுவாமி சந்நிதியில் அர்த்தஜாமம் வரை நடனமாட வேண்டிய முறை வரதனின் மனைவிக்கு வந்தது. இரவில், தான் திரும்பிவர நேரமாகும் என்பதால், கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொன்னாள் அவள். தன் பணி முடித்து சற்றே விரைவாக வந்துவிட்ட வரதன், தூணில் சாய்ந்து கண்ணயர்ந்து விட்டார். பூஜை நிறைவடைந்து அந்தப் பெண் வந்தாள். அழைத்துப் பார்த்தாள், அரவமே கேட்கவில்லை. கணவன் வீடு சென்று விட்டார் போலும் என்று எண்ணியவள், உடனே வீட்டை அடைந்தாள்.

இங்கோ, மண்டபத்தில் இரவு நேரத்தில் இருட்டில் உறங்கிக் கொண்டிருந்த வரதன், ஏதோ ஒலி கேட்டுக் கண் விழித்தார். ஒரு பெண் நடக்கும் ஒலி; கால் தண்டைகளும் பாடகங்களும் சிலம்பின.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அழகு பூஷிதையான அந்தச் சிறுமி அருகில் வந்தாள். அதே மண்டபத்தில் இரவு-பகல் பாராமல் அம்பிகையை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தார் பண்டிதர் ஒருவர். ஞானம் பெறுவதற்காக ஞானவாணியை வேண்டினார். அவருக்கு அருள வேண்டி அம்பிகை வந்தாள். ஆனால், சிறுமி வடிவத்தில், எவ்வித ஞான வெளிப்பாடும் இல்லாமல் வந்தாள்.

பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே, பண்டிதரின் வாயைத் திறக்கச் சொன்னாள். வந்திருப்பவள் அம்பாள் என்பதை உணராத பண்டிதர், தாம்பூலம் உமிழ வாய் திறப்பதா என்று ஏசி அனுப்பி விட்டார்.

திரும்பிச் செல்ல யத்தனித்த அம்பாள், தூணில் சாய்ந்து உறங்கிய வரதனிடம் வந்தாள். கண் விழித்து நோக்கிய வரதனை வாய் திறக்கச் சொன்னாள். அம்பாளின் வாய்த் தாம்பூலம் ஏற்ற வரதன், அப்போது முதல் கார்மேகமாகப் பொழியும் காளமேகப் புலவரானார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராக விளங்கிய காளமேகப் புலவர், அகிலாண்டேஸ்வரியையும் ஜம்புநாதரையும் பலவாறு போற்றிப் பாடினார். அகிலாண்டேஸ்வரியையே சரஸ்வதியாகவும் பாவித்து சரஸ்வதிமாலை எனும் நூலையும் பாடினார்!

- அகிலாசிவம்