Published:Updated:

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா... அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

தன் வாழ்நாளில் 96 கோடி ராமநாமஜபம் செய்தவர் ஶ்ரீ தியாகராஜர். இவர் வால்மிகியின் அவதாரம் என்றும் சொல்கிறார்கள்.

18 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அந்த மகான். அவரும் அவர் சீடர்களும் திருப்பதி சென்று ஏழுமலையான தரிசனம் செய்துவிட்டுக் காஞ்சிபுரம் வரும் வழியில் புத்தூர் என்னும் கிராமத்தை அடைந்தனர். அந்த ஊர் அன்று சோகம் பூண்டிருந்தது. அந்த ஊரில் வாழ்ந்த சேஷய்யா என்கிற அந்தணர் கிணற்றில் தவறி விழுந்து உயிர் துறந்துவிட்டார். அவரின் இளம் மனைவி கணவனின் உடலைத் தன் மடியில் கிடத்தியபடி அழுத காட்சி கல்லையும் கரையவைப்பதாக இருந்தது. அந்தக் காட்சியைக் கண்ட மகான் மனம் வருந்தினார். தன் சீடர்களை அங்கே உடனடியாகத் தான் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடச்சொன்னார். 'நாஜீவதாரா' என்னும் கீர்த்தனையைத் தன் சீடர்களைப் பாடச்சொல்லித் தானும் பாடினார். என்ன விந்தை... அந்த அந்தணர் உயிர்பெற்று எழுந்தார். அவர் மனைவி அந்த மகானின் கால்களில் விழுந்து தொழுதாள். அந்த மகான் வேறுயாருமல்ல சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகப்பிரம்மம்.

தியாகப்பிரம்மம் என்று அழைக்கப்படும் தியாகராஜரின் ஆராதனை தினம் ஒவ்வோர் ஆண்டும் தை மாதத் தேய்பிறை பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அந்த ஆராதனை நாளை (2.2.21) அன்று கொண்டாடப்படும். இந்த வேளையில் தியாக சுவாமிகள் சுவாரஸ்யமான தகவல்களை இங்கு தியானிப்போம்.
தியாகராஜ சுவாமிகள்
தியாகராஜ சுவாமிகள்

1. திருவாரூரில் 1767-ம் ஆண்டு பிறந்தார் தியாகராஜர். இவர் தந்தையார் பெயர் ராமபிரம்மம். சமஸ்கிருத புலவர். ராம பக்தர். சிறுவயதிலேயே தியாகராஜருக்குத் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளைப் பயிற்றுவித்தார்.

2. ஸொண்டி வெங்கடரமணய்யா என்னும் இசை ஆசிரியரிடம் கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டார். தியாகராஜரின் திறமையைப் பார்த்த வெங்கடரமணய்யா தனக்குத் தெரிந்த சகல ஞானத்தையும் தியாகராஜருக்குக் கற்பித்தார். தியாகராஜர் தானே கீர்த்தனை எழுதிப் பாடவும் ஆரம்பித்தார். இவரது முதல் கீர்த்தனை 'நமோ நமோ ராகவாய' என்பதாகும்.

3. தினமும் காலை, அனுஷ்டானங்கள் முடிந்ததும் உஞ்சவிருத்திக்காகக் கையில் ஒரு செம்புடன் வெளியே கிளம்புவார். வீடுதோறும், வாசலில் நின்று ராமநாமங்களை ஜபிப்பார். சிறிது நேரத்திலேயே செம்பு நிரம்பி விடும். 'இது போதும்' என்கிற மனதுடன் இல்லம் திரும்புவார் தியாகராஜர். உஞ்சவிருத்தியில் சேகரித்த அரிசியை அன்னமாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபிறகு, வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். அப்போது, எவரேனும் வந்தால் அவர்களுக்கும் உணவளிப்பார்.

4. ஒரு நாள் காலை நேரத்தில் துறவி ஒருவர் தியாகராஜரின் இல்லம் தேடி வந்தார். 'உங்களின் சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்' என்றார். உடனே சில கீர்த்தனங்களைப் பாடினார் தியாகராஜர். இதைக் கேட்டு இன்புற்ற துறவியிடம், ''உணவருந்தி விட்டுச் செல்லலாமே?'' என்றார் தியாகராஜர். ''சரி... காவிரிக்குச் சென்று நீராடி விட்டு வருகிறேன். பிறகு சாப்பிடுவோம். முதலில், இதை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று சுவடிகள் சிலவற்றைக் கொடுத்துச் சென்றார். போனவர் திரும்பவே இல்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தார் தியாகராஜர்; துறவியைக் காணோம்! அன்று இரவு அவரது கனவில் தோன்றிய துறவி, ''தியாகராஜா... உமது வீட்டுக்கு வந்து உன் கானத்தைக் கேட்டு மகிழ்ந்தது நாரதராகிய நானே! உன்னிடம் தந்த சுவடிகளில் 'ஸ்வரார்ணவம்' மற்றும் 'நாரதீயம்' எனும் நூல்கள் இருக்கின்றன. சங்கீதம் சம்பந்தமான இலக்கணங்களைச் சொல்லும் இந்த நூல்கள் உனக்கு உதவும்'' என்று ஆசியருளி மறைந்தார். தியாகராஜர் அந்தச் சுவடிகளைப் பிரித்துப் பார்த்தபோது நாரதர் குறிப்பிட்ட நூல்கள் இருந்தன.

தியாகராஜ சுவாமிகள்
தியாகராஜ சுவாமிகள்

5. தியாகராஜர் ஶ்ரீரங்கம் சென்றிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்ததாம். குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கநாதர் கம்பீரமாக உலா வந்தார். அவரை தரிசிக்க விரும்பிய தியாகராஜர், தான் தங்கியிருந்த வீட்டு வாசலில் நின்று வணங்கிக் கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஸ்வாமியின் குதிரை வாகனம் அடுத்த தெருவுக்குள் திரும்பி விட்டது. ஸ்ரீரங்கநாதரின் முழுக் கோலத்தையும் தரிசிக்க முடியவில்லையே என்று வருந்தினார் தியாகராஜர். இதையடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம். அடுத்த தெருவுக்குள் நுழைந்த ஸ்ரீரங்கனின் வாகனம் அதற்கு மேல் ஓர் அடிகூட நகரவில்லை. எவ்வளவு முயன்றும் வாசகம் ஒரு துளிகூட நகரவில்லை. அப்போது, அங்கு இருந்த பட்டாச்சார்யர் ஒருவர் மேல் 'அருள்' வந்தது. ''என் பரம பக்தனான தியாகராஜன் என்னை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் நிற்கிறான். அவனை அழைத்து வந்து, என்னை தரிசிக்கச் செய்யுங்கள்; எல்லாம் நலமாகும்!'' என்றார். ஆலய நிர்வாகிகள் அவ்வாறே செய்ய தியாகராஜர் ரங்கனை பூரணமாக தரிசித்து மகிழ்ந்து கீர்த்தனை பாடி வழிபட்டார் தியாகராஜர். பின்பு இலகுவாக வாகனம் அங்கிருந்து நகர்ந்தது என்கிறார்கள்.

6. தியாகராஜ சுவாமிகள் நன்றாகப் பாடுவதோடு வீணையும் வாசிப்பார். கின்னரீ என்ற தந்தி வாத்தியம் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார். அவர் 2,400 பாடல்களை இயற்றியுள்ளார். 24 ஆயிரம் பாடல்களை இயற்றியதாகவும் ஒரு கருத்து உண்டு. பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. இந்திய இசை வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான சீடர்கள் தியாகராஜருக்கு உண்டு. தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சீடர்களுக்கு கர்னாடக இசையுடன் கணிதம், ஜோதிட சாஸ்திரமும் கற்றுக்கொடுத்தார் தியாகராஜ சுவாமிகள்.

8. இவரது இசைத் திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ராம பக்தியில் திளைத்திருந்த இவரோ மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

தியாகராஜ ஸ்வாமிகள்
தியாகராஜ ஸ்வாமிகள்

9. தியாகராஜ சுவாமிகளைக் குறித்து ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளனன. இதில் 1935-ல் ராமசாமி பாகவதர் எழுதிய ‘ஸ்ரீ தியாக ப்ரம்மோபநிஷத்’ என்ற முக்கியமானது.

10. தியாகராஜ சுவாமிகள் தனது 80-வது வயதில் (1847) ஸித்தியடைந்தார். இவர் மரணம் அடைவதற்கு சில நாள்கள் முன்னதாகவே ஶ்ரீராமசந்திரமூர்த்தி அவர் முன் தோன்றினாராம். ஐந்து நாள்களில் நீ முக்தி அடைவாய் என்று கூறி மறைந்தாராம். ஶ்ரீராமர் குறிப்பிட்ட அதே நாளில் தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்தார். அவர் சீடர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து கீர்த்தனம் இசைத்துக்கொண்டிருக்க ராம நாமம் ஜபித்தபடி ஸித்தியடைந்தார் தியாகராஜ சுவாமிகள். அவரது நினைவைப் போற்றும் வகையில், திருவையாறில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சமாதியில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இசை அஞ்சலி செலுத்துவர். நாளை சுவாமிகளின் ஆராதனை நாளில் நாமும் அவரின் கீர்த்தனைகளைப் பாடியும் கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். இசையில் நல்ல நிலை அடைய விரும்புபவர்கள் இந்த நாளில் வணங்கி வேண்டிக்கொண்டால் சத்குருவின் கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் இசைக் கலைஞர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு