உலகத்து உயிர்கள் எல்லாம் வணங்க வேண்டியது அந்த பரமாத்மாவான கிருஷ்ணனையே. ஆனால், அந்தப் பரமாத்மாவே `தான் ஆறு பேரை வணங்குவேன்' என்கிறார். யார் அந்த ஆறு பேர்?

`தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், ஆயிரம் பிறைகளை தரிசனம் செய்தவர்கள், தவறாது மாதாமாதம் உபவாசம் இருப்பவர்கள், கற்பு நெறி தவறாத பெண்கள். இவர்கள் ஆறுபேரை நான் வணங்குவேன்' என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். இதில் முதலாவதாக நிற்பவர், நித்யான்ன தாதா எனப்படும் தினமும் அன்னதானம் செய்பவர். கடவுளே வணங்கும் கௌரவத்தை மனிதர்களுக்கு அளிக்கும் சிறப்பு அன்னதானத்துக்கு உண்டு.
'உணவே உயிர்களின் ஆதாரம்' என்று விளக்க அம்பிகை மேற்கொண்ட அவதாரமே அன்னபூரணி. ஒரு கையில் அன்னப் பாத்திரமும் மறு கையில் கரண்டியும் கொண்டு அன்னமிடக் காத்திருப்பவள். அம்பிகை உலகத்துக்கே அம்மையாகி உணவூட்டும் தன்மையோடு காட்சிகொடுப்பதன் தாத்பர்யம் உணவு உயிர்களின் தேவையாய் இருக்கிறது என்பதுதான்.

அதிதிக்கு உணவிட்டு பின் உண்பது நம் மரபு. 'அதிதி' என்றால் 'விருந்தினர்' என்று பொருள். விருந்தினர் என்றால் இங்கு உறவினர் என்று பொருளில்லை. திதி குறிப்பிடாமல் எந்தத் திதியிலும் எக்காலத்திலும் வீடு தேடிவந்து உணவு கேட்பவர் அதிதி. தெய்வம் மனித வடிவம் என்பது சான்றோர் வாக்கு. எனவே நம் இல்லத்துக்கு உணவுக்காக வரும் அதிதி தெய்வத்துக்கு சமம். அதனால்தான் 'அதிதி தேவோபவா' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
இளையான்குடி மாறநாயனார் அன்னதானத்தையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்படிப்பட்டவரை சோதிக்க இறைவன் ஒரு மழை நாளில் அன்னம் வேண்டி அடியவராக அவர் வீடு தேடிவந்தார். வீட்டில் இருந்த விதை நெல்லை அன்றுதான் விதைத்திருந்தார். அடியவரின் பசி தீர்க்க மழையோடு மழையாக ஓடிச்சென்று விதைத்த நெல்லைத் திரட்டி எடுத்துவந்து உணவு செய்வித்தார். நாயன்மாரின் அடியவர்க்கு உணவளிக்கும் சிரத்தையை எண்ணி இறைவன் அவருக்குக் கருணைமழை பொழிந்தான்.

தினமும் விருந்தினருக்கு உணவிட்டு உபசரித்து அவர்களைப் போற்றி வருபவனை வானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம் வணங்கி அவர்களின் விருந்தினராக உபசரிப்பார்கள் என்கிறான் நம் முப்பாட்டன் திருவள்ளுவர். உணவை அனைவருக்கும் பங்கிட்டு உண்ண வேண்டியதன் அவசியத்தை விளக்கும், 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்னும் குறளை 'கொல்லாமை' என்னும் அதிகாரத்தின் கீழ் வைத்தார். அடுத்த உயிருக்கு உணவைப் பகிராமல் உண்பதென்பது கொல்லுதலுக்கு இணையானது என்பதுவே அவன் சீற்றத்துக்குக் காரணம்.
பசிப்பிணியின் கொடுமையை எடுத்துக் கூறி அன்னதானத்தின் அவசியத்தை விளக்கப் பேசும் நூல் மணிமேகலை.
கடும்பசிக்கு ஆளான மக்களுக்கு உணவளித்து அதைப் போக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே இந்த உலகில் தூய்மையான வாழ்க்கை என்கிறது மணிமேகலை. காயசண்டிகையின் பெரும்பசி தீர்க்க உதவிய மணிமேகலையின் அட்சயபாத்திரம் பசியில்லாத பிரபஞ்சம் பற்றிய மாபெரும் சிந்தனை. அதனால்தான் மணிமேகலை 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்று பிறர்க்கு உணவளிப்பதை உயர்த்திப் பேசுகிறது.

தமிழ்நாட்டில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்திய மகான்களுள் வள்ளலார் முக்கியமானவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லி வாழ்ந்தவர். பசிப் பிணி என்னும் அரக்கனுக்கு மனிதர்கள் மடிவதைக் கண்டுபொறுக்காத மகான், 'பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) என்று நாடெங்கும் சென்று உபதேசித்தார். அன்னதானத்தைப் பிரதானப்படுத்தி வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் எரிந்து பசிப்பிணி தீர்த்துக்கொண்டிருக்கிறது.
வள்ளலார் வழிவந்த தமிழ்க் கவிஞன் பாரதியோ, 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அறச்சீற்றம் கொண்டு பாடினான். ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்று திருமூலர் சொல்லுவதும் வறியவர்க்கு உதவுவதைத்தான்.

கர்ணன் அனைத்து தானங்களையும் செய்தான், ஆனால் அன்னதானம் செய்யவில்லை. அதனால் சொர்க்கத்தில் பசியால் வாடினான் என்று புராணத்திலொரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. 32 அறங்களில் தலையாய அறமாகக் கருதப் படுவது அன்னதானமே.
அன்னதானம், தானம் என்பதிலிருந்து ஒருபடி உயர்ந்து தவமாகவே ஆன்றோரால் கருதப்படுகிறது. எனவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் என்னும் அருந்தவம் செய்து மண்ணில் மானுடம் வாழ வழிசெய்வோம்.

சாப்பிடுபவர்களும் தவறாமல் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்ததும், 'அன்னதாதா சுகி பவா' என்று சொல்லவேண்டும் என்பார்கள் பெரியோர்கள். இதன்பொருள் 'நமக்கு அன்னமிட்டவர்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' என்பதாகும். வீட்டிலும் சரி வெளியிலும் சரி நமக்கு அன்னமிடும் அன்னபூரணிகள் அனைவரையும் வாழ்த்துவோம்.