அன்பார்ந்த வாசகர்களே...
உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...
ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.
இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் குழந்தைப் பேற்றுக்காக சிறப்பு வழிபாடு உண்டு என்று அறிந்தேன். அது என்ன வழிபாடு? அதேபோல், அக்கோயிலில் வழங்கப் படும் தைலத்தை கர்ப்பிணிகள் தங்களின் வயிற்றில் தடவிக்கொண்டால் சுகப்பிரசவம் நிகழும் என்றும் அறிந்தேன்.
கோயிலுக்கு நேரில் சென்றால்தான் அந்தத் தைலத்தைப் பெற முடியுமா? வெளியூரில் வசிப்பவர்கள் தைலப் பிரசாதம் பெறும் வழிமுறை என்ன? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்.
- ஜி.மீனாட்சி, உடன்குடி
சமீபத்தில் வாட்ஸப் பகிர்வு ஒன்று கண்ணில் பட்டது. `சைவ சமய நெறி தரும் வழிகாட்டல்' என்ற தலைப்பில், வழிபாட்டுக்கான மலர்களை எப்போது பறிக்கவேண்டும், சுவாமிக்க எப்படி சமர்ப்பிக்க வேண்டும், எந்தெந்த காலத்துக்கு எந்தெந்த மலர்கள் உவப்பானவை போன்ற தகவல்களை அந்தப் பகிர்வில் கண்டேன்.
இது எந்த நூல், யார் அருளியது? இந்த நூல் பற்றி அறிந்தவர்கள் விவரமாகப் பகிர்ந்துகொண்டால், எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- கே.அருணா, மதுரை
என் நட்சத்திரம் விசாகம். ஆன்மிகப் பெரியவர் ஒருவர், எனது நட்சத்திரத்துக்கு உரிய விளா மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட ஆலயத்தைத் தரிசிப்பது விசேஷம் என்றும், அந்த மரக் கன்றுகளை ஆலய நந்தவனத்தில் வளர்க்க ஏற்பாடு செய்வதும் விசேஷ பலன்களைத் தரும் என்று கூறினார்.
விளா மரம் தல விருட்சமாக உள்ள திருத்தலம் எது? அந்த ஊருக்கு எப்படிச் செல்வது போன்ற விவரங்களை அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
- மு.விசுவநாதன், காரைக்குடி
காஞ்சியிலேயே `திருக்கச்சி நெறிக் காரைக்காடு' எனும் தேவாரத் திருத்தலம் உண்டு என்று அறிந்தேன். சூரியன் மற்றும் புதன் கிரக பாதிப்புகள் நீங்கிட அருள்பெற வேண்டிய தலம் இது என்று அறிந்தேன். காஞ்சியிலிருந்து இந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும்?
- சி.வேதநாயகம், தேனி

உதவிக்கரம் நீட்டியவர்கள்...
சக்தி விகடன் சென்ற இதழில், `முருகன் குறித்த தகவல் தொகுப்புகள் இருந்தால் பகிருங்களேன்' என்று திருநெல்வேலி வாசகர் ராமநாதன் கேட்டிருந்தார். அதேபோல், தூத்துக்குடி வாசகி கீதா, `சந்தோஷி மாதா வழிபாட்டின் போது படிக்கவேண்டிய திருக்கதை மற்றும் வழிபாடு தொடர்பான புத்தகம் எங்கு கிடைக்கும்?' என்று கேட்டிருந்தார்.
இவர்களுக்குக் கீழ்க்காணும் விவரங்களை காஞ்சி புரம் வாசகி எஸ்.சத்யபாமா அளித்துள்ளார்.
* நான்கு தலையுடன் முருகப்பெருமான் அருளும் ஆலயம் சின்னாளப்பட்டி எனும் ஊரில் உள்ளது. இவ்வூர் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 7 மைல் தூரத்தில் உள்ளது.
இந்த விவரத்தோடு முருகப்பெருமான் குறித்த அபூர்வ தகவல்கள் அடங்கிய தொகுப்பையும் அனுப்பி வைத்துள்ளார். அத்தொகுப்பு வாசகர் ராமநாதனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
* ஸ்ரீசந்தோஷிமாதா வரலாறும் துதிப்பாடல்களும் பூஜா முறைகளும்' என்ற புத்தகம் `சகுந்தலை நிலையம், 18 (171) - பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-1' என்ற முகவரியில் கிடைக்கும்.
சக்தி விகடன் 9.2.2021 தேதியிட்ட இதழில் `கல்லால மரம் எந்தத் தலத்தின் விருட்சமாகத் திகழ்கிறது' என்று செட்டிக்குளம் வாசகர் கோ.லட்சுமணபெருமாள் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை காஞ்சி எஸ்.சத்யபாமா பகிர்ந்துள்ளார்.
* கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலுக்கு வடக்கே சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீமுஷ்ணம். இவ்வூரிலிருந்து கிழக்கில் சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள கூடலையாற்றூர் சிவாலயத்தில் கல்லலாம் தல மரமாகத் திகழ்கிறது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.
இங்குள்ள சுவாமியின் பெயர் அருள்மிகு நெறிக்காட்டு நாதர். அம்பிகையின் திருப்பெயர் அருள்மிகு பராசந்திர ஞானசக்தி. இக்கோயிலின் தீர்த்தம் சங்கம தீர்த்தம்.
கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:
`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்ன-600 002
Email: sakthi@vikatan.com