
உதவலாம் வாருங்கள்
தாரு வகையில் - மரத்தால் ஆன விக்கிரகங்களால் புகழ்பெற்ற தலங்கள் பல உண்டு. அந்த வகையில், முருகன் தலங்களில் மரத்தால் ஆன மூல விக்கிரகத்துடன் திகழும் திருக்கோயில்கள் குறித்த தகவல்கள் தேவை. இதுபற்றி அறிந்த அன்பர்கள் விவரம் பகிருங்களேன்.
- ஜி.கார்த்தி, விருதுநகர்
தர்ப்பையை வழிபாடுகளில், சடங்குகளில் பயன்படுத்தும் நெறிமுறைகள் குறித்து வழிகாட்டும் புத்தகங்கள் தமிழில் ஏதேனும் உள்ளதா. உண்டு எனில், கிடைக்கு இடம் - முகவரியைப் பகிருங்களேன்.
- கி.அரவிந்தன், சென்னை-55
சங்கரன்கோவில் போன்று சங்கரநாராயணர் தனிச் சந்நிதி கொண்டிருக்கும் வேறு திருத்தலங்கள் தமிழகத் தில் உண்டா. இதுபோன்று வேறு மாநிலங்களில் நிகழும் சங்கரநாராயணர் வழிபாடு குறித்த விவரங்களும் தேவை. விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
- சி.பாண்டியன், திண்டிவனம்
சிறு வயதில் என் பாட்டனாருடன் கோயிலுக்குச் செல்வேன். அங்கே வலம் வரும்போது அவர் குறிப்பிட்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவார். `பிரதட்சிண மந்திரம்’ எனக் கூறி எனக்கும் சொல்லிக்கொடுத்தார். ஆனால் இப்போது மறந்துவிட்டது. ஆலயங்களில் வலம் வரும்போது அதைச் சொல்லி வழிபட்டால் நல்லது என்பார் பாட்டனார். இந்த மந்திரம் எவரிடமே னும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
- கே.கிருஷ்ணன், திருநெல்வேலி
சித்தபுருஷர் பிரம்ம முனியின் சரிதம் விரிவாக எந்த நூலில் உள்ளது; எங்கு கிடைக்கும். பிரம்மமுனி எந்தத் தலத்தில் சித்தி அடைந்தார் என்ற விவரமும் தேவை. தகவல் அறிந்தவர்கள் விவரம் பகிருங்களேன்.
- கே.செந்தில், சென்னை-4
திருமால் தன் கண்ணையே மலராக்கிச் சமர்ப்பித்து வழிபாடு செய்த சிவத்தலம் திருவீழிமிழலை என்பார்கள். இந்தத் திருக்கதை வேறொரு தலத்துக்கும் உண்டு என்கிறார்களே... அது எந்தத் தலம், எங்கு உள்ளது?
- தி.ராதிகா, கிருஷ்ணாபுரம்`
உதவிக்கரம் நீட்டியோர்
கேரளாவில் ஏதோ ஒரு ஆலயத்தில் `வலிய எண்ணெய்’ எனும் தைலப் பிரசாதம் கொடுப்பார்களாம். மூலிகை கலந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய், சருமம் மற்றும் வாத நோய்களுக்கு அருமருந்தாம். இந்தக் கோயில் எது, எங்குள்ளது?’ என்று விவரம் கேட்டிருந்தார் திருநெல்வேலி வாசகி சி.ஜானகி. அவருக்குக் கீழ்க்காணும் தகவலைப் பகிர்ந்துள்ளார், நாகர்கோவில் வாசகர் வி.குமார்:

கேரளாவில் ஆலப்புழா உள்ள ஊர் தகழி. ஆலப்புழா- திருவனந்த புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் அம்பலப் புழா. இங்கிருந்து வடக்கே சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் தகழியை அடையலாம். தகழியில் உள்ள தர்மசாஸ்தா கோயில் பிரசித்திபெற்றது. முன்னொரு காலத்தில் இங்கு வசித்த உதயார்க்க மகரிஷி என்பவர், அருகிலுள்ள பம்பை நதியில் குளிக்கும்போது கிடைத்த சாஸ்தா விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து இங்குள்ள ஆலயத்தை எழுப்பினாராம். இந்த சாஸ்தாவுக்கு அரிசி மாவுதான் படைக்கப் படுகிறது. வேறெங்கும் காண்பதற்கரிய விஷயமாக இந்தக் கோயிலில் வலிய எண்ணெய் பிரசாதம் வழங்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய், நெய், கோமியம் ஆகியவற்றுடன் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மூலிகைகள் கலந்து இந்த வலிய எண்ணெய் தயாரிக்கப்படுகிறதாம். இது சருமம், வாத நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.
முற்காலத்தில் `அனக்கேழத்து வலியச்சன்’ என்பவர் இந்தக் கோயிலில் பணிபுரிந்து வந்தார். அவரின் கனவில் தோன்றிய சாஸ்தா, `என்னை நாடி வரும் பக்தர்களின் நோய் தீர்க்க எண்ணெய் தயாரித்து வழங்கு’ என்று கட்டளையிட்டாராம். எப்படித் தயாரிப்பது என்ற குறிப்பையும் சாஸ்தாவே வழங்கினாராம். ஆகவே பாற்கடல் அமிர்தத்துக்கு நிகராக இந்தத் தைலத்தைப் போற்றுகிறார்கள்.
இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவோர் கடுமையான பத்தியத்துடன் விரதமும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உரிய பலன் கிடைக்கும் என்கிறார்கள். விரத நியமங்கள் குறித்து கோயிலில் விளக்கம் கேட்டுப் பெறலாம்.