
சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
அன்பார்ந்த வாசகர்களே...
உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...
ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

பல வருடங்களாக அங்காள பரமேஸ்வரி அம்மனின் சரித்திரம் அறிய முயன்று வருகிறேன். பூரணத் தகவல் களுடன் கூடிய நூல்கள் கிடைக்கவில்லை. அங்காள பரமேஸ்வரி அம்மனின் திவ்விய சரிதத்தை விவரிக்கும் நூல் எங்கு கிடைக்கும் என்று தகவல் அறிந்தவர்கள், பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
- ஜி.திரிபுரசுந்தரம், திருநள்ளாறு
நாங்கள் திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். எங்கள் குலதெய்வம் ஓர் ஏரிக்கரைப் பகுதியில் அணைக்கட்டுக்கு அருகில் சிறு சந்நிதியில் அருளும் வீரபத்திரர் என்று, எங்கள் பெரியப்பா தகவல் கூறினார். அவருடைய சிறிய வயதில் சென்றதாகவும், துல்லியமான இடம் எதுவென்று அடையாளம் தெரியவில்லை என்றும் விவரம் சொன்னார்.
நெல்லைச் சீமையில், மேற்காணும் அமைப்பில் வீரபத்திரர் அருளும் கோயில் எங்குள்ளது. விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் தெரிவித்து வழிகாட்டினால், எங்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு உதவியாக இருக்கும்.
- சி.இசக்கியப்பன், பெங்களூரு
எங்கள் ஊர் சிவாலய தரிசனத்தின்போது, சாயரட்சை பூஜை முடிந்ததும் பெரியவர்கள் சிலர் சேர்ந்து பாட்டு பாடி வழிபடுவார்கள். அதில் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும்.
`வேதம் வேதாந்தம் புராணம்
இதிகாசாதி மிக்கு இனிது வாழ அனைய
மெய்ப்பொருள் வடித்துரிய கைப்பொருளின்
நல்கு தமிழ் வேதமுறை வாழ...'
- என்பதாகப் பாடுவார்கள். முழுப்பாடலும் நினைவில் இல்லை. இந்தப் பாடலின் முழுத் தொகுப்பும் எவருக்கேனும் தெரியுமா.
இந்தப் பாடலை அருளியவர் யார், இப்பாடல் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன். அல்லது புத்தகம் கிடைக்கும் முகவரியை அளித்தாலும் நன்று!
- ஆர்.வேணுகோபாலன், மானாமதுரை

உதவிக்கரம் நீட்டியவர்கள்!
சக்தி விகடன் 9.2.2021 தேதியிட்ட இதழில் பெங்களூரு வாசகர் கே.ஶ்ரீநிவாசன், ஆதிசங்கரர் எழுதிய சுப்ரமண்ய புஜங்கத்தைத் தமிழில் யாரேனும் மொழி பெயர்த்திருக்கிறார்களா, விளக்கவுரையுடன் இந்த மொழிபெயர்ப்பு நூல் எங்கு கிடைக்கும்' என்று கேட்டிருந்தார்.
இதற்கு, `திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதி குக ஸ்ரீ வாரியார் பதிப்பகம் (சென்னை-2) வெளியிட்ட புத்தகம் ஒன்று உண்டு. பதவுரையும் மொழிப்பெயர்ப்பும் சேர்ந்த தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்' என்று தகவல் பகிர்ந்துள்ளார் காஞ்சிபுரம் வாசகி எஸ்.சத்யபாமா. அத்துடன் அந்த நூலையும் அனுப்பிவைத்துள்ளார்.
அதேபோல், புதுச்சேரி வாசகர் வி.பத்மநாபனும் ஸ்ரீ கணேசபுஜங்கம் - ஶ்ரீஸுப்ரமண்ய புஜங்கம் எனும் புத்தகத்தை அனுப்பிவைத்துள்ளார்.
இரு புத்தகங்களும் கே.ஶ்ரீநிவாசனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சக்தி விகடன் 9.2.2021 தேதியிட்ட இதழில், `தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள், அவை அமைந்திருக்கும் இடங்கள், அவற்றின் மகிமைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல நூல்களைப் பரிந்துரை செய்யுங்களேன்' என்று புன்னக் காயலைச் சேர்ந்த வாசகர் திரவியம் கேட்டிருந்தார்.
இவருக்கு, `தமிழ்நாட்டில் உள்ள சித்தர்கள் - மகான்களின் ஜீவ சமாதிகள்' என்ற நூலை, சென்னை அருணா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக தகவல்கள் உள்ளன. விலை ரூ.40' என்ற தகவலை, மயிலாடுதுறை - நல்லத்துக்குடி வாசகர் வி.ராதாகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.
காஞ்சிபுரம் வாசகி எஸ்.சத்யபாமா `சித்தர்கள் அருள் பாலிக்கும் திருத்தலங்கள்' என்ற தலைப்பிலான தகவல் தொகுப்பை நகலெடுத்து அனுப்பியுள்ளார். இது வாசகர் திரவியத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:
`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002
Email: sakthi@vikatan.com