Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

ஆசார கோவை

முருகப் பக்தன் நான். சேய்த்தொண்டர் வரலாறு, முருகனின் திருவடிவங்கள் போன்றவை குறித்த தகவல் களைத் தொகுத்து வருகிறேன். இதுபோல் சிற்ப சாஸ்திரம், திருவடிவ பேதங்கள், திருக்கதைகள் அடிப்படையில் முருகன் குறித்த தகவல் தொகுப்புகள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
சின்னாளப்பட்டி எனும் ஊரில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் அருள்வதாக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தத் தலத்துக்கு எப்படிச் செல்வது?

- கே.ராமநாதன், திருநெல்வேலி

நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் உள்ள பழங்கால வீடுகளில் கூரையில் திருநீற்றுக் குடுக்கையைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். எங்களுக்கும் திருநீற்றுக் குடுக்கை தேவைப்படுகிறது. எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- மு.கயிலாசம், சென்னை-44

வீட்டுப் பூஜையறையில் வெட்டிவேர் தோரணம் அல்லது திரை இட்டு அலங்கரிப்பது விசேஷம் என்று உறவினர் ஒருவர் சொன்னார். வெட்டிவேரினால் ஆன இந்தப் பொருள்கள் தயாரித்து விற்கப்படுகின்றனவா அல்லது வெட்டிவேர் வாங்கி நாம் செய்துகொள்ள வேண் டுமா... வெட்டிவேரினை மொத்தமாக எங்கு வாங்கலாம்?

- எல்.சிதம்பரம், கோவை-2

திருச்செந்தூர் திருத்தலத்தில் பத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உண்டு என்றொரு தகவலை முன்பு படித்திருக்கிறேன். தற்போது சரவணப் பொய்கை, நாழிக் கிணறு, சமுத்திரத் தீர்த்தத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. மற்ற தீர்த்தங்கள் குறித்த தகவல்கள் எந்த நூலில் கிடைக்கும். அதேபோல், வள்ளிக்குகை அமைந்த பகுதி சந்தன மலையாகத் திகழ்ந்தது என்றும் படித்துள்ளேன். அதுபற்றிய விவரங்களும் தேவை.

- சு.கோமு, சென்னை-61

ந்தோஷி மாதா வழிபாடு செய்ய விரும்புகிறோம். புளிப்பில்லாத பதார்த்தங்கள் தவிர்த்து வெல்லம் படைத்து வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். வழிபாட்டின் போது படிக்கவேண்டிய திருக்கதையும் தேவை. சந்தோஷி மாதா வழிபாடு தொடர்பான நூல் எங்கு கிடைக்கும்

- வி.கீதா, தூத்துக்குடி

ழம் பெரும் நூலான ஆசார கோவை. தொலைபேசி மூலம் இதுகுறித்து கேட்டிருந்த சென்னை வாசகர் சம்பத், `நீராடுவது தொடங்கி இரவு தூங்குவது வரையிலும் உரிய வழிகாட்டுதலைத் தரும் இந்த நூல் குறித்த தகவலை விளக்கும்படி கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக சாப்பிடும் நியதிகள் குறித்த ஆசாரக் கோவையின் வழிகாட்டலை வேண்டினார். சிறப்பு மிகுந்த இந்த நூல் குறித்த சில தகவல்கள், எல்லோரும் பயனடையும் விதம் இங்கே...


`ஆசாரக்கோவை’- கடைச் சங்க காலத்திய நூல் இது. இந்த நூலை அருளியவர் `பெருவாயின் முள்ளியார்’ என்பவர்.

இந்நூலில் நூறு பாடல்கள் உள்ளன. காலையில் எழுந்திருப்பதில் இருந்து, குளிப்பது எப்படி என்று சொல்லி; சாப்பிடுவதில் இருந்து, இரவு தூங்குவது வரை - நாம் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்று அற்புதமாகப் பாடம் நடத்தும் அருமையான நூல் அது.

உண்ணுவது குறித்து இந்நூல் தரும் தகவல்கள்:

குளித்து விட்டே உண்ண வேண்டும். உண்பதற்கு முன்பும் பின்பும் கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை பலப்படும். அஜீரணக் கோளாறு போன்றவை வராது.

வாயை நன்றாகக் கொப்பளித்துக் கழுவிவிட்டு உண்ண வேண்டும். உண்ணும்போது உண்ணும் கலத்தைச் சுற்றி, தெய்வத்தை நினைத்து நீர் சுற்றி விட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

`நீராடிக் கால் கழுவி வாய் பூசி மண்டலம் செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர்’
என்கிறது பாடல்.

அதேபோல், காலைக் கழுவிக்கொண்டுதான் உண்ண வேண்டும் என்று கூறும் ஆசாரக் கோவை, இரவு தூங்குவதற்கு முன்பும் காலைக் கழுவிக்கொண்டுதான் படுக்கவேண்டும் என்று சொல்கிறது.

சாப்பிடும்போது, கழுவிய கால் களில் ஈரம் இருக்க வேண்டும்; ஆனால், காலைக் கழுவிக்கொண்டு படுக்கும் போது, காலில் ஈரம் இருக்கக் கூடாது. ஈரம்போக சுத்தமா கத் துடைத்துக் கொண்டே படுக்கவேண்டும்.

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.