ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

விஷ்ணு சகஸ்ரநாமம் மகாவிஷ்ணுவின் ஆயிர நாமங்களைக் குறிப்பிட்டுப் போற்றுவது. அற்புதமான இந்தத் துதிப்பாடலைச் செவிமடுத்தால் தீராத வியாதியும் தீரும் என்பார்கள் பெரியோர்கள். வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாமா? எந்த நாளில் எப்படிச் செய்யலாம். இதுகுறித்து வழிபாட்டு நியதிகள் கொண்ட தனிநூல் ஏதேனும் உள்ளதா? விவரம் அறிந்த அன்பர்கள் வழிகாட்டுங்களேன்.

- கே.கலா, கோவை

பொதிகை மலை அகத்தியர் தரிசனச் சிறப்புகளை அறிவோம். இதேபோல் அகத்தியருக்கான வேறு தனிக்கோயில்கள் தமிழகத்தில் வேறு எங்கேனும் உள்ளனவா? அகத்தியர் வழிபட்ட சிவாலயங்களை அகத்தீஸ்வரங்கள் என்ற பெயரில் பட்டியலிடுவார்கள். எனக்கு அகத்தீஸ்வர தலங்கள் குறித்த விவரமும் தேவை.

- எம்.கணபதி, கோவில்பட்டி

வேண்டும் வரங்களை அருளவல்ல அற்புதமான துதிப்பாடல் சுப்ரமண்ய பஞ்சக ஸ்தோத்திரம். சத்ரு பயம் நீங்கவும், ரத்தம் சார்ந்த பிணிகள் நீங்கவும், கடன் தொல்லை விலகவும் இந்த ஸோத்திரத்தைப் படித்து முருகனை வழிபடலாம். இதை அருளிய மகான் யார் என்ற விவரம் தேவை. தமிழில் இந்த ஸ்தோத்திர விளக்க நூல் உள்ளதா, எங்கு கிடைக்கும்?

- கே.பாண்டியன், மதுரை

ராமநாதபுரம் அருகிலுள்ள உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் அருள்வதை அறிவோம். இதேபோல், நடராஜத் திருமேனி வேறு ஏதேனும் தலங்களில் மரகதமேனியாய் அமைந்துள்ளதா? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிருங்களேன்.

-மு.கார்த்திகேயன், சென்னை-26

சித்தர் சிவவாக்கியரின் பாடல்கள் விளக்கவுரையுடன் தனித் தொகுப்பாக தேவை. சிவவாக்கியர் சரிதத்துடன் கூடிய பாடல்தொகுப்பு நூல் எங்கு கிடைக்கும். முகவரியைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- ஜி.கணேஷ், சென்னை-44`

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் சிறப்பு மாவடி தரிசனம். இதேபோல் மகிழமர தரிசனத்தால் சிறப்புப் பெற்ற சிவாலயம் குறித்த விவரங்கள் தேவை’ என 4.10.22 தேதியிட்ட இதழில் கடலூர் வாசகர் வ.வேம்புலிநாதன் கேட்டிருந்தார்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்


திருவொற்றியூர் தலத்தில் மகிழமர சேவை எனும் வைவபம் சிறப்பாக நடைபெறும். இதுபற்றிய தகவல் தொகுப்பு சக்தி விகடனில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. வாசகர்கள் படித்துப் பயன்பெற ஏதுவாக, அந்த விவரங்கள் இங்கே...

ஆதிக்கோயில் என்று பக்தர்கள் போற்றும் திருவொற்றியூர் சிவாலயத்தின் பிரம்மோற் சவம் பிரசித்திபெற்றது. அந்த விழாவின் ஒன்பதாம் நாளன்று இரவில் நடைபெறுவது - `மகிழடி சேவை’ வைபவம்.

சுந்தரருக்காக இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் தூது சென்ற திருக்கதையை நாமறிவோம். சுந்தரரின் விருப்பத்தைக் கூறி அவரை மணந்துகொள்ளும்படி இறையனார் வலியுறுத்தினார்.

சங்கிலிநாச்சியாரோ, ‘ஏற்கெனவே மணமான சுந்தரரை எப்படி மணப்பது? என்னைவிட்டு நீங்கிவிட மாட்டாரா?’ என்று ஐயம் கொண்டார். ‘திருவொற்றியூர் எல்லையை விட்டு நீங்கமாட்டேன் என்று என் முன்பு சத்தியம் வாங்கிக்கொள்’ என்று தீர்வு சொன்னார் சிவனார்.

அதன்படியே சங்கிலியாரும் சுந்தரரிடம் சத்தியம் செய்யும்படி கேட்டார். சுந்தரர் சிவனாரிடம் ஓடோடி வந்தார். ‘‘தலம்தோறும் சென்று தங்களைப் பாடும் இந்த அடியவன், இங்கேயே தங்க இயலுமா? அதனால், நான் சத்தியம் செய்யும் தருணத்தில் தாங்கள் கருவறையை விட்டு நீங்கி ஸ்தல விருட்சமான மகிழ மரத்துக்குச் சென்றுவிட வேண்டும். மற்றபடி சங்கிலியாரை ஏமாற்றும் நோக்கம் ஒன்றுமில்லை’’ என்று விண்ணப்பித்தார்.

சிவனார் என்ன செய்தார் தெரியுமா? சங்கிலியாரிடம் சென்று, “நீ சுந்தரனை மகிழ மரத்தடிக்கு அழைத்து வந்து சத்தியம் பெற்றுக்கொள்’ என்று கூறி தமது திருவிளையாடலைத் தொடங்கி வைத்தார்.அப்படியே செய்தார் சங்கிலியார்.

சுந்தரரும் வேறுவழியின்றி ‘திருவொற்றியூர் எல்லையை விட்டும், உன்னை விட்டும் என்றும் பிரியேன்’ என்று வாக்குத் தந்து, மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து சங்கிலியாரை மணந்துகொண்டார்.

அதற்கு சாட்சியாகத் திகழ்ந்த மகிழமரம் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. சுந்தரர், சங்கிலி நாச்சியாரின் திருமணத்தையும், அதைத் தொடர்ந்து சிவபெருமான் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்யும் மகிழடி சேவையையும் தரிசிப்பது பெரும் கொடுப்பினை.

திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இந்த வைபவத்தைத் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பெரியோர் வாக்கு.