Published:Updated:

உதவலாம் வாருங்கள்

ஶ்ரீராமர் - உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமர் - உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள் - வாசகர்களின் கேள்விகளும் பதில்களும்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள் - வாசகர்களின் கேள்விகளும் பதில்களும்

Published:Updated:
ஶ்ரீராமர் - உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமர் - உதவலாம் வாருங்கள்

திருக்கோயில்களில் மண்டப அமைப்புகள் எந்தக் காலத்தில் இணைந்தன. திருக்கோயில் மண்டபங்கள் குறித்து ஆகமங்கள் சொல்வது என்ன? அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன போன்ற விஷயங்கள் பலருக்கும் தெரியும். வேறு என்னென்ன வகையிலான மண்டபங்கள் திருக் கோயில்களில் அமைந்திருக்கும். இதுபற்றி விரிவான தகவல்களைக் கொண்ட புத்தகம் ஏதேனும் உள்ளதா. எங்கு கிடைக்கும்?

-கோ.திருமூர்த்தி, திருப்பூர்

சமீபத்தில் நான் படித்து ரசித்த பாடல் வரிகள் இவை...

எந்தை வருக ரகுநாயக வருக

மைந்த வருக மகனே இனி வருக

என்கண் வருக எனதாருயிர் வருக அபிராம

இங்கு வருக அரசே வருக முலை

உண்க வருக மலர் சூடிட வருக...


அடம்பிடிக்கும் ராமபிரானைப் பாலுண்ண வருமாறு கோசலாதேவி கெஞ்சி, கொஞ்சி அழைப்பது போன்ற இந்த வரிகள், திருப்புகழில் உள்ளது என்ற தகவலை அறிந்து வியந்தேன். முருகனைப் பாடும் திருப்புகழில் ராமனைப் போற்றும் வரிகள். இதேபோன்று வேறு விவரங்கள் திருப்புகழில் உண்டா? அதுபற்றிய தனித் தொகுப்புப் புத்தகம் ஏதேனும் வெளிவந்துள்ளதா. இதுபற்றி அறிந்தவர்கள் விவரம் பகிருங்களேன்.

- சி.மதுமிதா, சென்னை-44

ச்சபேஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகில் நான்குமுக லிங்கம் அமைந்த சந்நிதி உள்ளது. நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்திலும் சதுர்முக லிங்கத்தை தரிசிக்கலாம் என்பார்கள். இதுபோன்று நம் தமிழகத்தில் வேறு எந்தெந்த தலங்களில் சதுர்முக லிங்கம் உள்ளது. முகலிங்க வழிபாட்டின் தாத்பரியம் என்ன? விவரம் அறிந்தவர்கள் விளக்குங்களேன்.

-கே.கல்யாணி, விழுப்புரம்

கும்பகோணம் அருகிலுள்ள திருவலஞ்சுழி கல் பலகணி சிறப்புப் பெற்றது. இதேபோல் பலகணி மற்றும் சாளரங்களால் சிறப்புப் பெற்ற வேறு தலங்கள் உண்டா?

- சி.கதிரேசன், சென்னை-56

ரோமச முனிவருக்கு மருத்துவம் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி விளக்கம் அளித்ததாக தகவல் ஒன்று படித்தேன். இதுபற்றி விரிவான விவரம் தேவை. சட்டைமுனிச் சித்தர் வரலாறு முழுத் தொகுப்பு எந்த நூலில் உள்ளது? அது எங்கு கிடைக்கும் விவரம் பகிருங்களேன்.

-சி.லக்ஷ்மிநாராயணன், வள்ளியூர்

`சிட்டனைச் சிவனைச் செழுஞ் சோதியை

அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்

பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி

நட்டனைத் தொழ நம்வினை நாசமே’


- என தேவாரம் போற்றும் திருத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி. கொடுமுடி என்பதற்கு ‘பெரிய சிகரம்’ என்று பொருள். மேரு மலையின் சிகரமே மகுட லிங்கமாக அமைந்துள்ளது. ஆகவே, இங்குள்ள இறைவன் கொடுமுடி நாதரை மகுடலிங்கேஸ்வரர் எனவும் போற்றுவார்களாம்.

காவிரிக்கு இந்தத் தலத்தில் தனிச் சிறப்பு உண்டு. விநாயகர் காக்கை வடிவெடுத்து அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரி நதியைப் பெருகியோடச் செய்தார் அல்லவா? அப்படி காவிரி கவிழ்க்கப்பட்ட இடம் கொடுமுடித்துறை என்பர்.

கொடுமுடி தலம் குறித்து புத்தகம் ஒன்றில் படித்தத் தகவல் இது. மேலும் இந்த ஊருக்கு பரத்வாஜ க்ஷேத்திரம், அங்கவருந்தனபுரம் என்றும் பெயர்கள் உண்டு எனவும் தகவல் இருந்தது. இந்தப் பெயர்களுக்கான காரணம் என்ன? பரத்வாஜ முனிவரால் பரத்வாஜ க்ஷேத்திரம் எனும் பெயர் வந்தது எனில், அந்த முனிவருக்கும் இந்தத் தலத்துக்கும் என்ன தொடர்பு? அங்கவருந்தனபுரம் எனும் பெயர் வரக் காரணம் என்ன? அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்து கொண்டால், எல்லோரும் அறியலாமே!

- வீ.நடராஜன், திருச்செந்தூர்

ராமன் சீதா கல்யாண மந்திரம்!

`டஇந்தியாவில் சில பகுதிகளில் திருமணத்தின்போது பெண்ணைக் கொடுக்கும் சடங்கில், மந்திரம் ஒன்று சொல்வார்கள். ராமர்-சீதா திருமணத்தின்போது சொல்லப்பட்ட அந்த மந்திரம், கன்னிப்பெண்களுக்கு கல்யாண வரம் அருளும் வல்லமை கொண்டது. எனக்கு அந்த மந்திர ஸ்லோகம் தேவை’ என திருநெல்வேலி வாசகி ப.சிவசங்கரி கேட்டிருந்தார்.

அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தைச் சென்னை - குரோம் பேட்டை வாசகர் தி.திருமலை பகிர்ந்துள்ளார்:

இயம் ஸீதா மம ஸுதா

ஸஹ தர்ம சரீதவ

ப்ரதீச்ச சைனாம் பத்ரம்தே

பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா

பதிவ்ரதா மஹா பாகா

சாயா இவானுகதா ஸதா


ராமர்-சீதா திருக்கல்யாணத்தின்போது, இந்த மந்திரத்தைச் சொல்லித்தான் சீதையை ராமனிடம் ஜனகர் ஒப்படைத்ததாகச் சொல்கிறது ராமாயணம். `இதோ என் மகள் சீதா. ராமபிரானே, நீ செல்லும் தர்மநெறியில் இவள் உன்னோடு துணை வருவாள். கையைப் பற்றி பெற்றுக்கொள்வாயாக. மங்கலம் ஆகுக. கற்பைக் காத்து மிக பாக்கியவதியாக உன் நிழலைப்போல உன்னைப் பற்றி நிற்பாள். எப்போதும் விட்டுப் பிரியமாட்டாள்’ என்பது இந்த மந்திரத்தின் கருத்து.

குடிசைக் கோயிலில் அருளும் அம்மன்!


`காரைக்குடி அருகில் விளாறிமார் கொண்டு செய்யப்பட்ட குடிசையில் அருளும் அம்மன் கோயில் குறித்த விரிவான தகவல்கள் தேவை’ என்று சென்னை வாசகர் என்.கணேசன் கேட்டிருந்தார். அவருக்கு அந்தக் கோயில் குறித்த விவரத்தைச் சிவகங்கை வாசகர், சி.குமார் பகிர்ந்துள்ளார்:

காரைக்குடி அருகே பட்டமங்கலம் - கருங்குளத்தில் உள்ளது பறைநாச்சியார் கோயில். காரைக்குடியிலிருந்து பட்டமங்கலத்துக்கு பேருந்து வசதி உண்டு. இங்கே, குடிசைக் கோயிலில் அருள்கிறாள் அன்னை பறைநாச்சியார். இந்த அன்னையின் ஆணைப்படியே இங்கே விளாரிமார் கொண்டு குடிசைக் கோயில் அமைந்ததாகச் சொல்கிறார்கள். எவரும் இறுமாப்புடன் தலைநிமிர்ந்தபடி சந்நிதிக்குள் நுழையக்கூடாது; பணிவுடன் நுழையவேண்டும் என்றே இரண்டரை அடி உயரம் அளவிலேயே சந்நிதி வாயில் அமைந்துள்ளதாம்.

இரண்டாண்டுக்கு ஒருமுறை திருவிழாவையொட்டி குடிசைக் கோயிலும் அன்னையின் பிம்பமும் புதுப்பிக்கப்படுமாம். பிரச்னைகள் தீரவும், வாரா கடன்கள் வந்து சேரவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த அம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism