Published:Updated:

வாரணமும் தோரணமும்!

அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

சித்தர்கள் வழியில் இறையருள் தேடி...

வாரணமும் தோரணமும்!

சித்தர்கள் வழியில் இறையருள் தேடி...

Published:Updated:
அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

அளவிலா இன்பமாகிய இறைத்தன்மையையும் அந்த இறையால் நிகழும் இயக்கத்தையும் உணர்ந்தவர்கள் சித்தபுருஷர்கள். விண்ணையும் மண்ணையும் மட்டுமன்றி தன்னையும் அறிந்தவர்கள் அவர்கள். தன்னை அறிந்தவர்கள் எனில் சகலமும் அறிந்தவர்கள் என்றே கூறிவிடமுடியும். அப்படி எல்லாமும் அறிந்தவர்கள், சில தருணங்களில் எதுவும் அறியாதவர் போல் அல்லது எதையோ அறியத் துடிப்பவர் போல் மெளனத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

வாரணமும் தோரணமும்!

தேரையரும் அப்படித்தான் நிலவறையையே கருவறையாகப் பாவித்து உள்ளே தம்மைப் பொதிந்துகொண்டார் நெடுங்காலமாக. மற்ற சித்தர்கள் வந்து அழைத்ததும், தம்மை மூடியிருந்த பெரும் பாறையை திசைகள் அதிர பெரும்சத்தத்துடன் வெடிக்கச் செய்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

காரணமின்றி காரியம் இல்லை என்பார்கள். தேரையர் இங்ஙனம் உள்ளே ஒடுங்கியதற்கும் வெளிப்பட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதுபற்றி அறியுமுன், அகத்தியருக்கே கண்ணொளி தந்த தேரையரின் கதையை அறிந்துவிடுவோம்.

யோகி ருத்திராகாரரின் பிணியைத் தேரையர் தீர்த்துவைத்ததும் பெரிதும் மகிழ்ந்தார் அகத்தியர். தேரையரை அழைத்து ``இனி நீ தனியே சென்று பணியைத் தொடரலாம். சென்று வா...’’ என்று பணித்து ஆசியும் வழங்கினார். தேரையருக்கோ குருவை பிரிந்து செல்வதில் துளியும் விருப்பம் இல்லைதான். எனினும் குருவின் கட்டளை ஆயிற்றே... ஆகவே கண்ணீர்மல்க விடைபெற்றுக்கொண்டார்.

அகத்தியரின் ஆசிரமத்திலிருந்து புறப்பட்டுப் பயணப்பட்டவர், நெடுந்தூரம் பயணித்து அநாமயம் எனும் வனப்புறத்தை அடைந்தார். அந்த வனமும் சூழலும் அவருக்குத் திருப்தி அளிக்கவே அங்கேயே தங்கியிருந்து பணி செய்தார்; தேரையரின் தவமும் வழிபாடும் வழக்கம் போல் தொடர்ந்தன. ஏற்கெனவே அங்கு தவம் செய்துகொண்டிருந்த சாதுக்களும் மகான்களும் தேகத்தால் பலவீனம் அடைந்தபோது தேரையரின் மருத்துவம் அவர்களுக்குத் தக்க துணையாக இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில்... இறையின் சித்தமோ அல்லது சீடரின் மகத்துவத்தை உலகறியச் செய்யவேண்டும் என்று அந்த அகத்திய குரு திருவுளம் கொண்டாரோ என்னவோ... அகத்தியருக்குக் கண்ணொளி மங்கத் தொடங்கியது.

அவரின் வழிகாட்டுதல்படி சீடர்கள் மருந்து தயாரித்தார்கள். குருநாதர் சொன்னபடியே அவருக்கு சிகிச்சைகள் மேற்கொண்டார்கள். ஆனால் கண்ணொளி மேலும் மேலும் மங்கியதே தவிர, வேறு பயன் இல்லாமல் போனது. இந்த நிலையில்தான் அநாமயம் எனும் காட்டில் யோகி ஒருவர் மருத்துவப் பணியில் சிறந்து விளங்குவதாக தகவல் அறிந்தார்கள் அந்தச் சீடர்கள்.

அவர்கள் ஆசிரமத்துக்குப் புதியவர்கள். ஆகவே அநாமய வனத்தில் இருப்பது இன்னார் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவரை அழைத்து வந்து சிகிச்சை செய்தால் கண்ணொளி பெறலாம் என்று குருநாதரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள்.

அகத்தியர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். `சரி! அழைத்து வாருங்கள்’ என்று சீடர்களுக்கு அனுமதியும் வழங்கினார். நடக்கப் போவதை அறியாதவரா அகத்தியர்? அவர் நினைத்தபடியே வந்து சேர்ந்தார் தேரையர். சில மூலிகைகளால் குருநாதருக்கு சிகிச்சைகள் மேற்கொண்டார். விரைவில் அகத்தியருக்கு பார்வை மீண்டது. நீண்ட தாடியும் சடாமுடியுமாகத் திகழ்ந்த தேரையரை நோக்கியவர் சிரித்தபடியே சொன்னார்: ``என்ன தேரையா... இப்போதுதான் முக்கால் வைத்தியனாகி இருக்கிறாய் போலும். சரி... சரி... இங்கே இரு. முழு வைத்தியனாகும் காலம் வரும்!’’

தேரையர் உள்ளம் நெகிழ்ந்தார். அன்பும் அக்கறையுடன் கூடிய குருவின் குரலைச் செவிமடுத்துஎவ்வளவு காலமாயிற்று. ``தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும்’’ என்றார் பணிவோடு. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் தேரையரை அழைத்த அகத்தியர் ``எனக்குக் கண்வெடிச்சான் மூலிகை வேண்டும் கொண்டு வருவாயா?’’ எனக் கேட்டார்.

மறு பேச்சு பேசவில்லை தேரையர்; உடனே புறப்படுவிட்டார். ஆனால் மனதுக்குள் ஒரு சலனம். குருநாதர் குறிப்பிடும் மூலிகை ஆபத்தானது. கண்வெடிச்சான் மூலிகைக் கொடியை உடைத்தால் புகைபோன்ற ஆவி வெளியேறும்; அது கண்களைப் பொசுக்கிவிடும். இந்த விவரம் தெரிந்தும் குருநாதர் தனக்கு இப்படியொரு கட்டளை யைப் பிறப்பிக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்று அறிய முயன்று தோற்றுப்போனார்.

வாரணமும் தோரணமும்!

மூலிகையைக் கொண்டு வரும் முயற்சியில் தன்னுடைய கண்கள் பாதித்தால் குருநாதரின் கட்டளையை எங்ஙனம் நிறைவேற்றுவது என்றும் கலங்கித் தவித்தார். `ஊனென்ற உடலுக்குள் நடுவுமாகி உத்தமியாள் வீற்றிருக்கும் உண்மைதானே’ என்கிறது சித்தர் பாடல் ஒன்று. உடலின் மையத்தில் ஆதார சக்தியாய் வாலையாகிய பாலாம்பிகையே வீற்றிருக் கிறாளாம். ஆம் அம்பாளே ஆன்மாவை ஆள்கிறாள் என்பார்கள் பெரியோர்கள்.

தேரையரும் அம்பாளைச் சரணடைய தீர்மானித்தார். மூலிகை இருக்கும் இடத்தை அடைந்ததும் தியானத்தில் அமர்ந்தார். செந்நிற மேனியளாய், செந்நிற மலர்கள் சூடியவளாய்... அம்பாளின் திருக்கோலத்தை மனத்தில் நிறுத்தி தியானித்தார்.

உள்ளத்தில் ஒளி தோன்றியது. அவ்வொளி செங்கிரணங்களை அள்ளித் தெளிக்கும் செஞ்சூரியனாய் விரிந்தது! அவரின் மனக் கண்ணில்... விண்ணெங்கும் மண்ணெங்கும் செந்நிறமே வியாபிக்க... சூரிய ஒளிச்சுடர் ஒரு தாமரை மொக்காய் குவிந்து பின்னர் மலர்ந்தது. சிரித்தது! மலரா சிரித்தது... இல்லை இல்லை... அம்பாளே சிரித்தாள், தன் பிள்ளையைப் பார்த்து. `வருந்தாதே தேரையா! நான் இருக்கிறேன்’ என்று அபயம் அளித்தாள்.

ஆம்! இவ்வாறு பாதாதிகேசம் செந்நிறம் கொண்டவளாய் செந்நிற ஆபரணங்கள் அணிந்தவளாய், சிவப்பு வண்ண மலர்களைச் சூடியவளாய் திகழும்படியான அம்பாளின் திருவுருவை மனதில் நினைத்துப் பிரார்த்தித்தால் எவ்வித பிரச்னை களும் விரைவில் தீர்ந்து விடும்; அம்பாளின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். அவளின் கருணைப் பார்வை நமக்குக் கவசமாகும். இங்ஙனம் அம்பாளைத் தியானிப்ப தோடு, `உதிக்கின்ற செங்கதிர்...’ எனத் தொடங்கும் அபிராமிஅந்தாதிப் பாடலையும் பாடி வழிபட் டால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பது பெரியார்கள் காட்டிய வழி.

தேரையருக்கும் அம்பாளின் திருவருள் கைகூடியது. அவளருளால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் குறிப்பிட்ட மூலிகையைக் குருநாதரிடம் கொண்டு சேர்த்தார். அகமகிழ்ந்தார் அகத்தியர். பேரானந்தத்துடன் அவருக்கு ஆசிகள் வழங்கினார். ``தேரையா நீ பூரணனாகிவிட்டாய். சென்று வா... உனக்குப் விருப்ப மான இடத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்று’’ என்று வாழ்த்தினார். அத்துடன் சூட்சுமங்கள் பலவற்றையும் தன் சீடருக்கு உபதேசித்து அருளினார்.

வாரணமும் தோரணமும்!

ங்ஙனம் குருவருளும் திருவருளும் பூரணமாகப் பெற்ற தேரையர் பொதிகைமலைச் சாரல்களில் பயணப்பட்டார். அரியபல மூலிகைகளைக் கண்டறிந்தார். மருத்துவத்திலும் மகத்துவ சூட்சுமங்களைப் பெற்றார். செல்லும் இடமெல்லாம் மக்களின் உடற்பிணியை மட்டுமன்றி உள்ளப் பிணியையும் அகற்ற முயன்றார். ஆனால் பெரும்பாலானோர் அவரின் நல்ல வழிகாட்டலைக் கடைப்பிடிக்கவில்லை. பயனடைந்தார்களே தவிரம் மற்றவர்களுக்குப் பயன் தரும் வாழ்வை அவர்கள் வாழவில்லை. தெளிவில்லாத அவர்களின் நிலை கண்டு வருந்திய தேரையர், தனிமையை நாடினார்.

கருவேலங்காடாகத் திகழ்ந்த அந்தப் பகுதியில் ஆழமாய் ஒரு குழி தோண்டி உள்ளே அமர்ந்தார். பெரும் பாறையால் தன்னை மூடிக் கொண்டார். நெடுநாட்களுக்குப் பிறகு சித்தர்கள் வந்து அழைத்ததும் இதோ மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

சிவ வாக்கு போன்று அந்தச் சித்தர்கள் திருவாக்கு பல சொன்னார்கள் தேரையரிடம்... ``எதிர்பார்ப்புகள் இல்லாத பணியே நமக்கானது. முன்வினையால் அல்லல் படும் - ஆரவாரம் செய்யும் மற்றவர்களின் நிலை குறித்தோ அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ நாம் எதிர்பார்ப்பு கொள்ளக் கூடாது. நம் கடன் பணி செய்து கிடப்பது...’’ என்று பலவாறு எடுத்துரைத்தார்கள்!

தேரையர் மனம் தெளிந்தார். அவர்களை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். அவர் சென்றடைந்த இடம் பெரும் புண்ணிய க்ஷேத்திரம்; குகைக்கோயில் அழகனாய் முருகன் குடியிருக்கும் திருத்தலம்!

- பயணிப்போம்...

வாரணமும் தோரணமும்!

மூவகை மனிதர்கள்!

னிதர்களில் மூன்று வகை உண்டு என்கிறார் வாரியார் சுவாமிகள்.

முதல் வகை கஜகர்ணம். யானை தன்னுடைய நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது ஆடிக்கொண்டே இருக்கும். அதுபோன்று மனிதர்கள் சிலர், எதிலும் ஆழ்ந்து இருக்காமல் மேம்போக்காக வாழ்வர்; பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்பி நிற்பார்கள். இவர் களை கஜகர்ணம் போடுபவர்கள் என்று கூறுவர்.

இரண்டாவது அஜகர்ணம். ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால், தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும். அதுபோல, சிலர் தங்களின் குறைகளை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருந்தாமல் அனைவரையும் வெறுப்பார்கள்.

மூன்றாவது கோகர்ணம். பசுவின் உடலில் எங்கு தொட்டாலும் அது உடலெங்கும் உணர்ச்சிவயப்பட்டு சிலிர்க்கும். அதுபோன்று நல்லவர்கள் சிறிய தவறு செய்தாலும் உடனே அதற்காக பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள். இதில் நாம் மூன்றாம் வகையினராக இருக்கவே முயலவேண்டும்.

- கே.பாண்டியன், கடலூர்