Published:Updated:

கர்ப்பிணியின் தாகம் தீர்த்த குலை வணங்கீசர்!

வடகுரங்காடுதுறை
பிரீமியம் ஸ்டோரி
வடகுரங்காடுதுறை

வாலி வழிபட்ட வடகுரங்காடுதுறை

கர்ப்பிணியின் தாகம் தீர்த்த குலை வணங்கீசர்!

வாலி வழிபட்ட வடகுரங்காடுதுறை

Published:Updated:
வடகுரங்காடுதுறை
பிரீமியம் ஸ்டோரி
வடகுரங்காடுதுறை

நீலமா மணிநிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க

வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்

ஏலமொடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி

ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே!


புண்ணியம்கோடி அருளும் அற்புத சிவத்தலங்களில் ஒன்று வட குரங்காடுதுறை. கும்பகோணம்- திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டியதும், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அந்த ஊரை அடுத்து வருவது இந்த வடகுரங்காடுதுறை. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ தூரம். இதன் அருகிலேயே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு.

வடகுரங்காடுதுறை திருத்தலம்
வடகுரங்காடுதுறை திருத்தலம்


ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்ப தாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு ஏற்ப இவ்வூருக்கு ஆடுதுறை பெருமாள்கோவில் என்று பெயர் வழங்குகிறது. இந்தப் பெயரைச் சொன்னால்தான் சட்டென்று வழிகாட்டுகிறார் இப்பகுதி மக்கள்.

கி.மு 700-600 காலத்திய கோயில் இது என்கிறார்கள். கி.பி, 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் வரும்போது, நல்ல பெரிய கோயி லாக இருந்துள்ளது.

காவிரிப் பகுதியிலேயே, இரண்டு ஆடுதுறைகள் இருக்கின்றன. இரண்டும் குரங்குகள் நீராடி வழிபட்ட தலங்கள். ஆடுதுறை என்று எல்லோருக்கும் பிரபலமாகத் தெரிவது, திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள தென் குரங்காடுதுறை. அது, சுக்ரீவன் வழிபட்ட இடம்.

தயாநிதீஸ்வரர்
தயாநிதீஸ்வரர்
unknown

`ஆடுதுறை பெருமாள்கோவில்’ எனப்படும் இந்த வடகுரங்காடுதுறை திருத்தலம் வாலி வழிபட்ட தலமாம். இதையொட்டி இங்குள்ள ஈசனுக்கு `வாலீசர்’ எனும் காரணத் திருப்பெயர் உண்டு. ‘கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்’ என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞான சம்பந்தர் இங்குள்ள இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.

வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர். என்றாலும் வடகுரங்காடுதுறை ஈசனுக்குப் பிரதான திருநாமம் அருள்மிகு தயாநிதீஸ்வரர் என்பதுதான். குலை வணங்கீசர் என்றும் ஒரு சிறப்புப் பெயர் உண்டு.

கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, இந்தத் தலத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். கொளுத்தும் வெயில். வயிற்றுச் சுமையுடன் நடந்த அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. ஆனால் ஆள் அரவமற்றுத் திகழ்ந்தது அவள் நடந்துவந்த பகுதி. கூப்பிடு தூரத்தில்தான் காவிரி பாய்கிறது. என்றாலும் நதிக்கரை வரையில் செல்வதற்கும் திராணி இல்லாமல் தள்ளாடினாள். மெள்ள மெள்ள மயக்கம் வந்தது.

கோயில் கோபுரம்
கோயில் கோபுரம்
unknown


அகிலத்தையே காத்து ரட்சிக்கும் பரமனுக்கு இந்தப் பெண்ணின் கஷ்டம் தெரியாமல் போகுமா? அவளின் தாகம் தீர்க்க திருவுளம் கொண்டார். சிவ சித்தம் அருளாடல் புரிந்தது. அருகிலிருந்த தென்னை மரம் தானாக தலை சாய்த்தது. பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. அந்தப் பெண்பிள்ளையின் தாகம் தணிந்தது. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர்.

கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவருக்கு, அழகு சடைமுடிநாதர் என்றும் ஒரு பெயர் உண்டாம். சடாமுடிதாரியாக சிவனை வணங்குவது பழைய மரபு. 2 மற்றும் 3- ம் நூற்றாண்டுகளில் சடாமுடி சிவ வழிபாடுதான், மிக அதிகமாகப் பரவியிருந்தது என்பார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்தக் கோயிலின் தொன்மை விளங்கும் என்கிறார்கள்.

மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள். குரங்காடு துறை ஆழ்வார், குரங்காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார் இந்த ஸ்வாமி. இந்தத் திருக்கோயிலுக்குப் பல்லவர் களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ள தகவலையும் அறிய முடிகிறது.

அஷ்டபுஜ துர்கை
அஷ்டபுஜ துர்கை
அழகுசடை முடியம்மை
அழகுசடை முடியம்மை


இவ்வூர் ஈசனை சிட்டுக்குருவி ஒன்று தினந்தோறும் வழிபட்டு அருள்பெற்றதாம். எனவே, சிட்டிலிங்கேசர் என்ற திருப்பெயரும் உண்டு. சிவனார் மட்டுமல்ல இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கோஷ்டம் மற்றுமுள்ள சந்நிதிகளில் அருளும் மற்ற தெய்வங்களும் விசேஷமானவர்கள்தான்.

இங்கே ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு தேவியருடன் அருள்கிறார் முருகப்பெருமான்.

`திரைக்கரம் கோலி நவமணி கொழித்திடும் சாரல் வயலணி

திருக்குரங்காடு துறையுறை பெருமாளே’ என்று போற்றிப் பாடி அருணகிரிநாதர் வணங்கிய முருகன் இவர்.

திருக்குரங்காடு
திருக்குரங்காடு
குரங்காட்டுமாதேவர்
குரங்காட்டுமாதேவர்

வழக்கமாக சிவாலயங்களில் பிராகாரச் சுற்றில் நால்வர் பெரு மக்களை தரிசிக்கலாம். வடகுரங்காடுதுறை எனும் இந்தத் தலத்தில் - கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நால்வருக்கு பதிலாக தேவார மூவர் மட்டும் அருள் கிறார்கள். தொடர்ந்து எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அவளின் சிலையையும் காணலாம்.

ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் முகமண்டபத்தில் தூண் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. வலப் பக்க தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்கிறார்.அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தியாகத் திகழ்கிறார். இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம்.

மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. இடப் பக்கத்தில் சாளரம் போன்ற அமைப்பு. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பிற்காலத்தில் இந்தச் சுரங்கத்தை மூடிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி


கருவறையின் தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. வழக்கமாக இவரின் காலடியில், சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள். இங்கு மேலும் நான்குபேர் உள்ளார்கள். அவர்கள் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் ஆவார்கள்.

வடகுரங்காடு துறை
வடகுரங்காடு துறை

பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். இப்படி அர்த்தநாரீஸ்வரர் இருப்பது அரிதானது.

வடக்குக் கோஷ்டத்தில் அருளும் அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையை தரிசிக்கலாம். தங்களது படைத் தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர்

இங்கு அருளும் அம்பிகையின் திருநாமம் அருள்மிகு அழகுசடை முடியம்மை. நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும்.

அதேபோல், அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் என்பது நம்பிக்கை.

பெயர் வந்தது இப்படித்தான்!

பெரியான் என்ற அன்பன் நிலத்தை உழுதுகொண்டிருந்தான். அப்போது வறியவன் உருவில் வந்த சிவபெருமான், அவனிடம் உணவு கேட்டார். அவன் தன் இல்லத்துக்குச் சென்று கொண்டு வருவதாகவும், அதுவரையிலும் வயலிலேயே காத்திருக்கும்படியும் சொல்லிச் சென்றான்.

அவன் திரும்புவதற்குள் வயலில் தினை விளைந்து பழுத்திருக்கும்படிச் செய்து மறைந்துவிட்டார் சிவபெருமான். பெரியானும் அவன் மனைவியும் வயலில் தினை விளைந்திருப்பதைக் கண்டு வியந்தனர். அந்தத் தம்பதிக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து அருளினார் ஈசன். இப்படி அதிசயமாக தினை விளைந்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு `திருத்தினை நகர்' என்று பெயர் வந்தது. தற்போதைய பெயர் தீர்த்தனகிரி. கடலூர்-சிதம்பரம் வழியில் புதுச்சத்திரம் அருகில் இத்தலம் உள்ளது!

- சி.அருணா, கடலூர்

பூஜா மணிக்கும் பூஜை உண்டு!

தினசரி இல்லத்தில் பூஜை செய்வதால் சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள்.

பூஜையின்போது மணி அடித்து ஒலியெழுப்புவோம். இது, தெய்வங்களை நம் இல்லத்துக்கு அழைப்பதற்காக என்பார்கள் பெரியோர்கள். மணிச் சத்தம் ஒலிப்பதால், இல்லத்தில் இருக்கும் தீய சக்திகள் விலகும்; எப்போதும் மங்கலமும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

பூஜையில் பயன்படுத்தும் மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என பூஜாமுறையை விளக்கும் சில ஞானநூல்கள் கூறுகின்றன. பூஜை மணியின் அதிதேவதை வாசுதேவர். மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதிதேவி. ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன். அதன் நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன். மணியை தரையில் வைத்தல் கூடாது.

- கே.கீதா, மேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism