Published:Updated:

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’

வாடிப்பட்டி முருகன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
வாடிப்பட்டி முருகன் கோயில்

குழந்தை வரம் அருளும் வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி!

இறைவன் அருளும் ஆலயங்களில் சில, சுயம்புவாக உருவானவை. வேறுசில தேவர் களாலும் முனிவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. சில தலங்கள் சித்த புருஷர்களால் மகான்களால் நிறுவப்பட்டவை. இவற்றில் ஒவ்வொரு தலமும் தனிப்பட்ட சிறப்புகளை உடையதாகத் திகழும்.

மகான்கள், உலக மக்களின் துன்பம் தீர்க்க அவதாரம் செய்தவர்கள். அவர்களால் வழிபடப் பட்ட அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்கள் எல்லாம் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் தன்மையோடு விளங்கும். அப்படி ஓர் அற்புதத் தலம் வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டையில் அமைந்துள்ளது.

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’

வாடிப்பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது தர்மராஜன் கோட்டை. இங்குள்ள சிறு குன்றின் மீது பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இந்த முருகன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தவர் சொக்கையா சுவாமிகள். இவர் எழுப்பிய 64-வது கோயில் இது. மீதம் உள்ள 63 கோயில் களும் சொக்கையா சுவாமிகள் தன் குருவான மௌன சுவாமிகளுக்காக எழுப்பியவை.

1921-ம் ஆண்டு இந்த ஆலயத்தைக் கட்டும் போது நிகழ்ந்த நிகழ்வுகளே, சொக்கையா சுவாமிகளின் பெருமையையும் இந்தத் தலத்தின் மகிமையையும் சொல்லும் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கட்டட வேலை செய்தவர் களுக்குக் கூலி வழங்க வேண்டும். தினமும் மாலையில் கூலி வழங்கும்போது, ஒவ்வொரு வருக்கும் தன் சட்டைப் பையில் கைவிட்டுப் பணத்தை எடுத்து வழங்குவாராம்.

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’


இதில் விசேஷம் என்னவென்றால், கூலி வழங்குவதற்கு முன் அவர் சட்டைப் பையில் எந்தப் பணமும் இருக்காதாம். வெறும் பையில் கைவிட்டு அவர் எடுக்கும் பணம் அந்த நாளுக்கான அவரவர் உழைப்புக்கேற்ற சரியான கூலியாகவும் இருக்குமாம்.

எப்படி திருநீற்றைக் கூலியாக வழங்கச் செய்து திருவானைக்கா ஆலய மதில் சுவரை ஈசன் எழுப்பினாரோ, அதேபோன்று இங்கு சொக்கையா சுவாமிகளும் வெறும் பையிலிருந்து பணம் வழங்கி ஆலயம் எழுப்பினார் என்றால் இந்தத் தல மகிமையைச் சொற்களால் அளவிடமுடியாது அல்லவா!

தர்மராஜன்கோட்டையில் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது பால தண்டாயுதபாணி ஆலயம். வாடிப்பட்டியைச் சுற்றியிருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் குன்றக்குடியாகவும் திருப்பரங்குன்றமாகவும் விளங்குவது இந்தத் தலம்தான்.

பழநியைப்போலவே, ஆலயமும் மூலவரும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் தலம் இது என்பதால் மிகவும் சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.

வரவேற்பு வளைவுக்குள் நுழைந்து பயணிக்கத் தொடங்கியதுமே ஏதோ சோலைக்குள் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது. கோயி லுக்கு முன்பாக தெப்பக்குளமும் விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளன.

கோயில் அர்த்த மண்படத்தின் வாயிலில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சந்நிதிகள் அமைந்துள்ளன. வடக்கில் வெள்ளிமலையும், வெளிச்சுற்று வடகிழக்கில் நவகிரகங்களும் அமைந்துள்ளன. வடக்குச் சுற்றில் கயிலாசநாதருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் சந்நிதிகள் உள்ளன.

இந்தக் கயிலாசநாதர், பக்தர்கள் சிலரோடு விளையாடி அருள்பாலிக்கும் சம்பவங்களும் இங்கு அடிக்கடி நடப்பதாகச் சொல்கிறார்கள் அடியார்கள். அதாவது வடக்குச் சுற்றில் வலம் வரும்போது, கயிலாச நாதர் சந்நிதிக்குள் நுழையும் முன்பாக, சற்றுத் தொலைவில் நின்று பார்க்கும்போது சடா முடியுடன் ஓர் அடியார் அமர்ந்திருப்பதுபோன்ற தோற் றத்தைச் சிலருக்குக் காட்டி அருளியுள்ளர் இந்த ஈசன்.

ஈசன் இங்கு பிரத்யட்சமாய் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. இங்கு ஈசனின் சந்நிதியில் வேண்டிக்கொள்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன என்கிறார்கள்.

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’
‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’

இந்தக் கோயில் பூசாரி முருகேசனோடு பேசினோம்.

“இங்கு அருளும் பால தண்டாயுதபாணி, பழநி இறைவனை விட இளைய வயதுடையவராக வடிவமைக் கப்பட்டுள்ளார். குழந்தையாக அனைவரும் எளிதில் அழைத்து மகிழும் பாலனாக இவர் திகழ்கிறார். எனவே அன்போடு அழைப்பவர்களுக்கு ஓடிவந்து அருள் செய்வார்.

குழந்தை பாக்கியம் இல்லாத அன்பர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து இங்குவந்து முருகனை வேண்டிக்கொண்டால், குழந்தை வரம் கிடைக்கும். இதை பக்தர்கள் பலரின் வாழ்வில் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் ஸ்ரீபால தண்டாயுதபாணிக்குப் பால் அபிஷேகம் செய்தால், திருமணத் தடைகள் நீங்கும்; திருமண வரம் கைகூடும். மேலும் தொழிலில் மேன்மை, படிப்பில் உயர்வு ஆகியவற்றை வேண்டும் அன்பர்களும் இந்த பால தண்டாயுதபாணியை வேண்டிக்கொண்டு பலன் அடைகிறார்கள்.

கோயில் வளாகத்தில் இருக்கும் பாலா மரக் குச்சிகளை எடுத்துக் கொண்டுபோய் பூமி பூஜை, வீடு குடிபுகுதல் ஆகிய சுப நிகழ்ச்சிகளில் வைத்து, தண்டாயுதபாணியை நினைத்து வேண்டிக் கொண்டால், அந்தக் காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது, சுற்று வட்டாரத்து மக்களின் நம்பிக்கை.

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’
‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’

முருகனுக்கு உகந்த விழாக்கள் அனைத்தும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக வைகாசி விசாகம் 10 நாள் விழாவாக நடைபெறும். விசாகத்தன்று சுவாமிக்கு பதினாறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திரளான பக்தர்கள் பால் குடம், மயில் காவடி, அலகு குத்துதல், தேர் இழுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்தி இறைவனை வணங்குவர்” என்றார் முருகேசன். கோயிலுக்கு வந்திருந்த மீனாட்சி என்கிற பக்தரிடம் பேசினோம்.

“எனக்குச் சொந்த ஊர் பரவை. நான் ஐந்து வருடமாக அடிக்கடி இங்கு வந்து வழிபாடு செய்கிறேன். எனக்கு ஒரே மகன். அவனுக்குக் கல்யாணம் ஆகி நீண்டகாலமாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இங்கு வந்து முருகனை மனதார வேண்டிக் கொண்டோம். அவனருள் விரைவில் கைகூடியது. அடுத்த ஆண்டிலேயே எனக்குப் பேரன் பிறந்தான்.

பின்னர், என் பேரனோடு இங்குவந்து முருகனை வேண்டிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அதனால் என் பேரனுக்கும் பாலமுருகன் என்றே பெயர் வைத்திருக்கிறேன். எந்த கஷ்டநஷ்டமாக இருந்தாலும் இந்த முருகனிடம் சொல்லி அழுதால், உடனே மன ஆறுதலும் தீர்வும் கிடைக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி வணங்கினார் மீனாட்சி.


நீங்களும் ஒருமுறை இந்த முருகனை தரிசித்து வாருங்கள்; தடைகள் யாவும் விலகி வெற்றிக்கான வழிகள் கிட்டும்.

‘ஒன்பது செவ்வாய் பாலபிஷேகம்!’

கண் சிமிட்டி விளையாடும் மகான் விக்கிரகம்!

சொக்கையா சுவாமிகளின் சொந்த ஊர் என்பதால் சுவாமிகளின் மடங்கள் இந்தச் சுற்றுவட்டாரத்தில் மூன்று உள்ளன. சுவாமிகளின் ஜீவ சமாதி, வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ளது. இங்கே குன்றில் ஏறுவதற்கு முன்பாக சொக்கையா சுவாமிகளின் திருமேனியை தரிசிக்கலாம். சொக்கையா சுவாமிகள் இன்றும் வாழும் தெய்வம் என்பதற்கேற்ப, பல அற்புதங்களை நிகழ்த்தி வருவதாகச் சொல்கிறார்கள்.

சுவாமிகளுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். அதனால் சில குழந்தைகள் வந்து தரிசனம் செய்யும்போது, தன் (சிலை மேனியின்) இமைகளை மூடித் திறந்து விளையாட்டு காட்டுவாராம். ஒருவரல்ல இருவரல்ல பல குழந்தைகளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சொக்கையா சுவாமிகளை தரிசித்து வேண்டிக்கொண்டு, பின்னர் முருகனை வழிபட்டால், தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை!