
வடிவீஸ்வரத்தில் அற்புத வழிபாடுகள்!
கல்யாணப் பிரார்த்தனைக்கான தலங்களில் ஒன்று; குழந்தைப் பாக்கியம் வேண்டுவோர் அவசியம் தரிசிக்கவேண்டிய கோயில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் சிவாலயம். இங்கே, சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்தால் விரைவில் கல்யாணம் கூடிவரும்; பள்ளியறை பூஜையில் பால் சமர்ப்பித்து வழிபட்டால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற தலம் சுசீந்திரம். இங்கே, மும்மூர்த்தியர் அம்சமாக அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி அருள்புரிகிறார். இங்குள்ள சிவலிங்கத்தை இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது.
அதேபோல் இந்திரன் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட மற்றொரு தலம்தான் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில். நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, தளவாய் தெரு வழியாக நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்துள்ளது இந்த ஆலயம். பெரிய தெப்பக்குளத்துடன் அழகுற காட்சி தருகிறது ஆலயம். இக்குளத்தையொட்டி கோயிலின் கிழக்கு வாயில் அமைந்துள்ளது. சுவாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். எனினும் அம்பாளுக்கான தெற்கு வாயிலுக்கே பெரிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆம், மதுரையைப் போன்று இங்கேயும் அம்பாளே முக்கியத்துவம் பெறுகிறாள். தெற்கு வாயிலையே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள்.
தெற்கு வாயிலில் நுழைந்து வலமாக வந்தால் விநாயகர், தட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்தங்கள், மகாவிஷ்ணு, நாகராஜர், காசி விஸ்வநாதர், தேவியருடன் அருளும் முருகப்பெருமான், நடராஜர், சனீஸ்வரர், சூரிய-சந்திரர், நவகிரக மூர்த்தியர் மற்றும் நாயன்மார்களை தரிசிக்கலாம். கோயிலின் தூண் சிற்பங்களும் அழகுமிளிர காட்சி தருகின்றன. வலமாக வந்து கிழக்குப்புறத்தில் கொடிமரத்தைத் தரிசிக்கலாம். இங்குள்ள மண்டபத்தின் விதானத்திலும் நவகிரகங்கள் காட்சி தருகின்றனர். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, சண்டேஷ்வரர், ராகு, கேது, பெருமான், யாகசாலை அறை, சந்திரன், சூரியன், சனீஸ்வரர், நாயன்மார்கள் சன்னதிகள் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.
கோயில் மஹாமண்டபத்திலும், வெளிபிரகாரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கல் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசலில் வந்ததும் கொடிமரத்தை தரிசிக்கலாம். கொடிமரம் அமைந்துள்ள மண்டபத்தின் மேல் பகுதி கூரையிலும் நவகிரகங்கள் காட்சி தருகின்றன.






அம்பாளையும் ஸ்வாமியையும் மனமுருகி வழிபட்டோம். வாழை இலையில் சந்தனம், குங்குமம், திருநீறு, கொழுந்து, பிச்சிப் பூக்கள் வைத்து பிரசாதமாக வழங்கினார் கோயிலின் மேல்சாந்தி கே.கணபதி சுப்பிரமணிய நம்பியார். அவரிடம் ஆலய மகிமைகள் குறித்து கேட்டோம்.
“இது ஆயிரம் தலைமுறைக்கும் முந்தைய பழைமையான கோயில். திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம். ஒருமுறை விதிவசத்தால் சாபத்துக்கு ஆளானான் இந்திரன். ஆகவே விமோசனம் வேண்டி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட தீர்மானித்தான். அதன்படி இரண்டு லிங்கங்களை எடுத்துவந்த இந்திரன், அவற்றில் ஒன்றை இங்கே வடிவீஸ்வரத்தில் ஸ்தாபித்தான். மற்றொன்றை சுசீந்திரத்தில் பிரதிஷ்டை செய்தான் என்பது ஐதீகம்.
இங்கே அவன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது மாலை வேளையில். ஆகவே இந்தக் கோயிலில் மாலையில் நடைபெறும் சாயரட்ச பூஜை விசேஷம். இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி ஒழுகினசேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரச் செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தானாம். இன்றைக்கும் மாசிமாதம் அந்த ஆற்றில் ஸ்வாமி ஆறாட்டு வைபவம் நிகழ்கிறது.
இங்கிருந்து மற்றொரு லிங்கத்துடன் யானை மீது ஏறி சுசீந்திரம் சென்றான் இந்திரன் என்கின்றன புராணங்கள். வழியில் ஆற்றைக் கடக்க யானை பாலம் அமைத்ததாம். இன்றைக்கும் அந்தப் பாலத்தை `யானை பாலம்’ என்றே மக்கள் அழைக்கிறார்கள். சுசீந்திரத்தில் இரவு வேளையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் இந்திரன். ஆகவே அங்கே இரவு நடக்கும் அத்தாள பூஜை சிறப்பு’’ என்று சிலிர்ப்புடன் விவரித்தவரிடம் தலத்துக்கான பெயர்க்காரணத்தைக் கேட்டோம்.
“வடிவு என்றால் அழகு என்று அர்த்தம். ஈஸ்வரன் என்ற பெயர் சிவபெருமானைக் குறிக்கும். அழகே உருவான அழகம்மனுடன் சுந்தரேஸ்வரர் கோயில் கொண்டிருப்பதால் இந்தத் தலத்துக்கு வடிவீஸ்வரம் என்று திருப்பெயர். மண்டைக்காடு கோயிலில் பகவதி அம்மன் சக்கரத்தில் அமர்ந்திருப்பாள். இங்கேயோ அம்பாள் சக்கரம் போன்ற பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
ஒரே மண்டபத்தில் அம்பாளும் ஸ்வாமியும் தனித் தனிச் சந்நிதியில் அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். உக்ர தேவதைகள் வடக்கு நோக்கி காட்சிதரும். சாத்வீக தெய்வங்கள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும். இங்கே அழகம்மன் தெற்குநோக்கி, பாவாடை - தாவணி அணிந்த குமரியாக அருள்கிறாள்.
திருக்கோட்டாற்றுப் பதிகத்தில் இந்தத்தலம் பற்றி திருஞானசம்பந்தர் பாடி உள்ளார். நாகராஜா கோயிலைப் போன்று கேரளாஆகமப்படி இது ஓட்டுக் கோயிலாகவே இருந்தது. பிற்காலத்தில் கோபுரம் அமைக் கப்பட்டுள்ளது. பெளர்ணமி தினங்களில் அழகம்மன் தேரில் பவனி வருவாள். பெண்களே அதிகம் வடம்பிடிப்பது சிறப்பாகும்’’ என்கிறார் கே.கணபதி சுப்பிரமணிய நம்பியார்.
அற்புதமான இந்த ஆலயத்தில் சித்திரை விஷு, வைகாசி விசாகம், ஐப்பசியில் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், சொக்கப்பனை வைபவம், மார்கழி வழிபாடுகள் - ஆருத்ரா தரிசனம், மாசித் திருவிழா, பங்குனி உத்திரம், புரட்டாசியில் நவராத்திரி என திருவிழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றன.
மட்டுமன்றி பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளும் கோலாகலமாக நடைபெறுகின்றன. குழந்தைப் பாக்கியம், திருமணப்பேறு கிடைக்கவும், குடும்பப் பிரச்னைகள் தீரவேண்டியும் எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் ஆகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இங்கே சாயரட்சை பூஜை விசேஷம். இதில் கலந்துகொண்டு தரிசித்தால் சகல நன்மைகளும் கைகூடும்.


சுசீந்திரம் கோயிலில் பள்ளியறை பூஜை வேளையில் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம். ஆகவே அங்கே பள்ளியறை பூஜையில் பக்தர்க ளுக்கு அனுமதி இல்லை. எனவே, இங்கே நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்தப் பூஜையின்போது பால் சமர்ப்பித்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்.
கோடை விடுமுறை வந்துவிட்டது. குடும்பத்துடன் தென் தமிழகத் துக்குச் செல்லும் அன்பர்கள், அவசியம் நாகர்கோவிலுக்கும் சென்று வடிவீஸ்வரம் கோயிலை தரிசித்து வாருங்கள். அழகம்மனும் சுந்தரேஸ்வரரும் உங்கள் வாழ்க்கை செழிக்க வரம் தருவார்கள்!
எப்படிச் செல்வது?: நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து தளவாய் தெரு வழியாக சென்று வடிவீஸ்வரம் கோயிலை அடையலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலையில் 5 முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.