Published:Updated:

அற்புதம் நிகழ்த்துவான் முருகன்!

வைகாசி விசாகம்
பிரீமியம் ஸ்டோரி
வைகாசி விசாகம்

மயூரப்ரியன்

அற்புதம் நிகழ்த்துவான் முருகன்!

மயூரப்ரியன்

Published:Updated:
வைகாசி விசாகம்
பிரீமியம் ஸ்டோரி
வைகாசி விசாகம்

ஈசனின் நெற்றிக் கண்ணில் பொறிகளாய்த் தோன்றி, புனல் கமலத்தில் குழந்தைகளாய்த் தவழ்ந்து, ஆறுரு ஒன்றாகித் திகழ்ந்த முருகனின் அவதாரமே அற்புதம்தான் எனில், அடியார்களுக்குக் கந்தனின் அருள் கனிந்த விதமும் அற்புதங்களால் நிறைந்ததுதான்.

வைகாசி விசாகம்
வைகாசி விசாகம்


முருகப்பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாகம் வருகிறது. இந்தத் திருநாளையொட்டி அற்புதங்கள் நிறைந்த அந்த அருள் சம்பவங்களைப் படித்தும் கேட்டும் கந்தனை நம் சிந்தையில் வைத்தால், நம் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்துவான்! அவ்வகையில் இங்கே சில அற்புதங்கள் உங்களுக்காக!

முருகன் காட்டிய நடனக் கோலம்!

ஒருமுறை அருணகிரிநாத சுவாமிகள் திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசிக்க விருப்பமுடன் சென்றார். செந்திலம்பதியை கண்குளிரக் கண்டார். தலத்தின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்தார். திருச்செந்தூருக்குரிய திருப்புகழ்ப் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத் துள்ளவை 84 பாடல்கள்.

திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பல நாட்கள் தங்கி தினமும் முருகனைத் தரிசித்து மகிழ்ந்தார். அப்போது மாசி மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 7-ம் நாள் விழாவில் பெருமான் மலர் மாலைகளைப் புனைந்து விளாமிச்ச வேர் விமானத்தில் எழுந்தருளியிருந்தார்.

கள்ளமிலா அடியார்கள் உள்ளம் உருகி வள்ளல் முருகன் புகழை இனிய இசையுடன் பாடிக்கொண்டு வந்தனர். அன்று மாலை தங்கச் சப்பரத்தில் முருகன் பவனி வருகிறார். இந்தக் காட்சியைக் கண்ட அருணகிரியார், ‘பெருமானே! உன் திருவோலக்க அழகைக் காண இரு கண்கள் போதுமா? இத்தனை ஆபரணங்களைப் புனைந்து காணக் காணத் தெவிட்டாதக் காட்சியுடன் விளங்குகின்றீரே! இப்படிக் கொஞ்சம் நடித்தருளும்; உமது திருநடனம் காண விழைகின்றேன்’ என்று வேண்டினார். செந்தில் கந்தன் அருணகிரியாரைப் பின்புறம் வரச் செய்து திருநடனம் புரிந்து, நடனக் காட்சியைக் காட்டி அருள்புரிந்தார்.

செந்தில் கந்தன்
செந்தில் கந்தன்


‘முருகா! கடம்பும், மகுடமும், செங்கையும், வேலும், ஆறுமுகமும், பன்னிரு கண்களும், குளிர்ச்சியான பேரொளியும், தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என்னும் ஆறு ஆபரணங்களும் திருவடிகளில் கணகணவென்று ஒலிப்பதுமான இந்த உமது நடனக் கோலம், என் கண் குளிர எந்தவேளையும் சந்தித்தல் வேண்டும்’’ என்று உள்ளம் நெகிழ வேண்டினார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பிரம்மோத்ஸவத்தில் ஏழாம் நாள் திருவிழாவில் மாலையில் தங்கச் சப்பரத்தில் முருகன் எழுந்தருளும்போது, சப்பரத்தின் பின்புறத்தில் நடனக் கோலத்துடன் அவரை தரிசிக்கலாம்!

வென்றிமலை கவிராயர் ஆன அற்புதம்!

திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான். அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான்.

அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார். பிறகு அவர் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை.

எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற் கரையில் கரை ஒதுங்கிய ஏடு, ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.

பழநி ஊரிலே பவனி வந்தான் தேரிலே!

பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடைபெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம்.

பழநி குறித்து இன்னுமொரு அற்புதத்தையும் சொல்வார்கள். கொடைக்கானல் மலைவாழ் மக்கள் புதிய செருப்பு தைத்து, தலையில் சுமந்தபடி பாத யாத்திரையாகப் பழநி மலைக்கு வந்து முருகப் பெருமானுக்கு அர்ப்பணிப்பார்களாம். அன்றிரவு அவற்றை அணிந்துகொண்டு பழநி முருகன் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வேட்டையாட வருவதாக ஐதீகம். மறுநாள் காலையில் காட்டுப் பகுதியில் அந்தச் செருப்புகள் காணப்படுமாம்!

திருத்தணி மேவும் பெருமாளே!

வள்ளிமலை சுவாமிகள் முருகனின் தீவிர பக்தர். 1917-ஆம் ஆண்டு ஜூன் மாதம். ஒரு நாள் வள்ளிமலை சுவாமிகள் அடியார்களுடன் சேர்ந்து திருப்புகழ் பாடல்களை மெய்ம்மறந்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது, ‘திருப்புகழோதுங் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்பதற்குப் பதிலாக ‘தெருத் திண்ணைதோறும் திருப்புகழ் ஓதுந் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்று சுவாமிகள் பாட அடியார்கள் திகைத்தனர். பஜனை முடிந்ததும் அடியார்கள் அவரிடம் ‘‘ஏன் இப்படி?’’ என்று கேட்டனர். சுவாமிகள், ‘‘ஏன் அப்படிப் பாடினேன் என்று எனக்கே தெரியவில்லை’’ என்று பதிலளித்தார்.

மறு நாள் இரவு 8 மணியளவில் திருத்தணி சீர்கர்ணீக மடத்தின் திண்ணையில் அமர்ந்து திருப்புகழ் பாராயணத்தைத் தொடங்கினார் சுவாமிகள். திடீரென வானில் பேரொளி எழும்பியது. சிறிது நேரத்தில் கையில் விசிறியுடன் அங்கு வந்த வேதியர் ஒருவர், திண்ணையின் மீது ஏறி சுவாமிகளின் அருகில் அமர்ந்தார். எல்லோரும் திருப்புகழ் பாடலில் லயித்திருந்தனர். திடீரென திண்ணையில் இருந்து இறங்கிய வேதியர், அருகில் உள்ள திருக்குளத்தின் படிக்கட்டு பகுதிக்குச் சென்று களிப்புடன் நடனமாடினார். பின்னர் மாயமாக மறைந்துபோனார்.

அப்போதுதான் ‘வந்தவர்; உலகு போற்றும் தணிகை நாதனே!’ என்றும் தனது வருகையை முன் கூட்டியே உணர்த்தவே சுப்பிரமண்ய ஸ்வாமி `தெருத் திண்ணை தோறும் திருப்புகழோதுந் திருத்தணி மேவும் பெருமாளே’ என்று வள்ளிமலை சுவாமிகளைப் பாட வைத்தார் போலும்!’ என்று மெய்சிலிர்த்தனர் அடியார்கள்.


எட்டணா மணியார்டர்!

வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். ஒருநாள் இரவு கனவில் வயலூர் முருகன் தோன்றினார். ‘`எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா?’’ என்று கேட்டார்.

அறங்காவலருக்கு எதுவும் புரியவில்லை. காலையில் வண்டியைக் கட்டிக்கொண்டு நேராக வயலூர் சென்றார். கோயிலில் அர்ச்சகரை அழைத்து, ‘`நேற்று யார் தரிசனத்துக்கு வந்து எட்டணா கொடுத்தார்?’’ என்று கேட்டார்.

‘`காங்கேய நல்லூரிலிருந்து மல்லையதாஸ் பாகவதர் குமாரர் கிருபானந்தவாரி என்பவர் எட்டணா கொடுத்தார். வெள்ளிக் கவசம் சாத்தி தரிசனம் செய்து வைத்தேன். இதோ பதிவுப் புத்தகத்தில் அவருடைய விலாசம் உள்ளது’’ என்றார் அர்ச்சகர்.

நடந்தது புரிந்தது அறங்காவலருக்கு. உடனே அந்த எட்டணாவை வாரியார் முகவரிக்கு மணியார்டர் செய்துவிட்டார். ‘திருப்பணி செய்யும் பொறுப்பையே ஏற்று முடிக்கத் தக்கவர் வாரியார். அவரிடம் இந்த எட்டணாவை வாங்கிக்கொண்டு திருப்தி அடையலாமா?’ என்ற குறிப்பை வயலூர் முருகன் தெரிவித்ததாக அவர் எண்ணினார்.

ஸ்தல யாத்திரை முடித்துக்கொண்டு காங்கேயநல்லூர் திரும்பிய வாரியாருக்கு மணியார்டர் காத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு கூப்பனைப் படித்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர், திருச்சியில் உபன்யாசத்துக்குச் சென்ற வாரியாரை அறங்காவலர் சந்தித்தார். கனவில் நடந்ததைச் சொல்லி, வயலூர் ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். முருகன் அருளை வியந்து, அந்தத் திருப்பணியை ஏற்றுச் செவ்வனே நிறைவேற்றினார் வாரியார் சுவாமிகள்.

கந்தவேள்
கந்தவேள்

கந்தன் வந்தான்!

``வடக்கே யுத்தபுரியான திருப்போரூர் சென்று எம் புதல்வன் குமரனது ஆலயத்தைப் புதுப்பித்துப் பொலிவடையச் செல்வாயாக!’’ என்ற மீனாட்சியம்மையின் ஆணையை ஏற்று, குருவின் ஆசியைப் பெற்றுக்கொண்டு திருப்போரூர் வந்து சேர்ந்தார் சிதம்பர சுவாமிகள்.

ஒரு பெண் பனை மரத்தின் கீழே சுயம்பு மூர்த்தியாக கந்தவேள் காட்சி அளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். வேம்படி விநாயகர் கோயிலில் தங்கி, அங்குள்ள வள்ளையார் ஓடை என்னும் குளத்தில் நீராடி, கந்தனை வழிபட்டு வந்தார் சிதம்பரதேவர்.

இந்நிலையில் ஒருநாள், அவரைக் காண நேரில் வந்தார் முருகப் பெருமான். அதுவும், அவரின் குருவான குமாரதேவர் உருவில்! குருதான் வந்திருக்கிறார் என்றெண்ணி மகிழ்ந்து, அவரை வரவேற்றார் சிதம்பர சுவாமிகள். குமாரதேவர் வடிவில் வந்த குகப் பெருமான், தமது திருக்கரத்தால் சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறிட்டு, நயன தீக்ஷை (பார்வை அனுக்ரஹம்) செய்தார்.

உடனே, முன்பு அங்கே முருகனின் ஆலயம் இருந்த அமைப்பு, சிதம்பர சுவாமிகளின் மனக்கண் முன் காட்சியளித்தது. குருவின் வருகையையும், அதனால் தனக்குள் உண்டான மாற்றத்தையும் கண்டு வியந்தார் அவர். அது பற்றிக் குருவிடம் கேட்க முயன்றபோது, அவர் அங்கிருந்த சுயம்பு மூர்த்தியினுள் புகுந்து மறைந்தார். அதைக் கண்ட சுவாமிகள், கந்தனே குரு வடிவில் வந்ததை அறிந்து பேரானந்தம் கொண்டார். விரைவில் கோயில் கட்டும் திருப்பணிகளைத் தொடங்கினார்.

மஹா ஸ்கந்த ஹோமம்!

வைகாசி விசாகத் திருநாளான வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நம் வாசகர்கள் சகல நலன்களும் பெறும் பொருட்டு, மஹா ஸ்கந்த ஹோமம் நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட உச்சுவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் (மாலை 6 முதல் 8 மணி வரை) மஹா ஸ்கந்தஹோமம் நடைபெறவுள்ளது. அர்ஜுனனும் சகாதேவனும் அருள்பெற்ற தலம் இது. சக்திவிகடனும் ஆலய நிர்வாகமும் இணைந்து வழங்கும் இந்த ஹோமத்தில் வாசகர்களும் சங்கல்பம் செய்து பிரார்த்திக்க, சகல விருப்பங்களும் நிறைவேறும் (சங்கல்பக் கட்டணம் 500) சங்கல்ப முன்பதிவுக்கு: 97909 90404

முத்துஸ்வாமி தீட்சிதர்
முத்துஸ்வாமி தீட்சிதர்

விபக்தி கீர்த்தனைகள்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் முத்துஸ்வாமி தீட்சிதரும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்றவர்.ஒரு முறை, தன் குருநாதரது ஆணைப்படி திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும் போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம். அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்சிதர். மறு கணமே ‘நாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்சிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள்’ ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism