பிரீமியம் ஸ்டோரி
மார்கழி மாதம் வரும் சுக்ல பட்ச (வளர் பிறை) ஏகாதசித் திரு நாளை, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று போற்றுவர். இந்த நாளில் முறைப்படி விரதம் இருந்து, சொர்க்கவாசல் வைபவத்தைக் காண்பவர்களுக்குப் பாவங்கள் தொலையும்; சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள்.
வைகுண்ட ஏகாதசி!

உற்பத்தி ஏகாதசி

முராசுரன் என்பவனால் மிகந்த துன்பங்களுக்கு ஆளான தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களிடம் திருமாலிடம் சரண் புகுமாறு அறிவுறுத்தினார் சிவனார். அதன்படி அனைவரும் திருமாலிடம் சென்று வேண்டிக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்ட திருமால், அசுரனுடன் போரிடத் துவங்கினார்.

ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது போர். நிறைவில், போரில் களைப்புற்றவராக பத்ரிகாஸ்ரமம் - குகைக்கு வந்து ஓய்வெடுத்தார் பெருமாள். அங்கேயும் வந்து போருக்கு அழைத்தான் முரன். அப்போது, திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இந்தச் சக்தியை அசுரன் நெருங்கும் வேளை... அவளிடம் இருந்து வெளிப்பட்ட பெரும் ஓலம், அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது.

துயில் எழுந்த பெருமாள், அந்தப் பெண்ணுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டார். ‘`உன்னை வழிபடுபவர் களுக்கு வைகுண்டப் பேறு அளிப்பேன்’’ என்று வரம் தந்தார். இங்ஙனம் பெண்சக்தி திருமாலின் மேனியில் தோன்றிய தினத்தையே `உற்பத்தி ஏகாதசி' என்கிறோம்.

ஏகாதசியும் நெல்லிக்கனியும்

ஏகாதசி அன்று நெல்லி இலை மற்றும் கனி இடப்பட்ட ஜலத்தில் நீராடி நியமத்துடன் விரதம் கடைப்பிடித்து, மகாவிஷ்ணுவை வழிபட்டு, துவாதசி அன்று உணவில் நெல்லிக்கனியை சேர்த்துக் கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வது சிறப்பாகும். இதனால் கங்கையில் நீராடிய பலனும் காசியில் வசித்த புண்ணியமும் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

வைகுண்ட ஏகாதசி!

சொர்க்கவாசல் வைபவம் ஏன்?

மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கைடபர். இந்த அசுரர்கள், தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.

எனவே, ‘`வைகுண்ட ஏகாதசித் திருநாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் (உற்ஸவ மூர்த்தியாக) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்துப் பின்தொடரும் பக்தர்களின் பாவங்களை நீக்கி முக்தி அளிக்க வேண்டும்’’ என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து கலியுக மக்களுக்கும் மோட்சத்துக்கு வழி கிடைத்தது.

அருள்மிகு பரமபதநாதர்

வைகுண்ட ஏகாதசி என்றதுமே பரமபத வாசல்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த தினத்தில் சொர்க்கவாசலில் எழுந்தருளும் பெருமாள் பரமபதநாதனாக அனைவருக்கும் அருள்கிறார்.

வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் மார்க்கத்தில், சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமம் தியாமுகச்சேரி. இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் பரமபதநாதன் எனும் திருப்பெயரிலேயே அருள்பாலிக்கிறார். அனுதினமும் தரிசிக்கும் பக்தர்களுக்கு பரமபதப் பேறு அருளும் ஸ்வாமி இவர் என்கிறார்கள் பக்தர்கள். பிரம்மதேவனுக்காக ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவியுடன் பரமபதநாதனாக இங்கு எழுந்தருளினாராம் பெருமாள்.

இவ்வூருக்குத் தெற்கே திருப்பாற்கடல் தலத்தில் பள்ளிகொண்ட பெருமாளும், வடக்கே சோளிங்கரில் யோக நரசிம்மரும், மேற்கே பள்ளிகொண்டாவில் உத்தர ரங்கநாதரும், கிழக்கே காஞ்சி வரதராஜ பெருமாளும் கோயில்கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.

வைகுண்ட ஏகாதசி!

விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசிக்கு முதல் நாள் திருமாலை வணங்கி விரதம் தொடங்க வேண்டும். அன்று, பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். ஏகாதசி தினத்தில் துளசி யைப் பறிக்கக் கூடாது. முதல்நாளே பறித்து வைத்துக்கொள்ளலாம்.

ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, காலைக்கடமைகளை முடித்து, மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும். பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வது மாக இருக்க வேண்டும்.

ஏகாதசிக்கு மறுநாள்- துவாதசி. அன்று உணவு அருந்துவதை பாரணை என்பர். துவாதசி அன்று அதிகாலையில் நீராடி, இறைவனைப் பிரார்த்தித்த பிறகு, உப்பு- புளிப்பு இல்லாத உணவை ஆல் இலையில் பரிமாறி... சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து... பற்களில் படாமல், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று மூன்று முறை கூறி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

நாம் சாப்பிடுமுன் பெரியோருக்கும் வறியவருக்கும் உணவு வழங்க வேண்டும். துவாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. குழந்தைகள், வயதானவர்கள் நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் விலக்கு என்கிறது சாஸ்திரம்.

வைகுண்ட ஏகாதசி!

கண்ணனே சொன்ன ஏகாதசி மகிமை!

பாண்டவ தூதனாக அஸ்தினாபுரம் சென்ற பகவான் விதுரர் வீட்டில் தங்கினார். அதன்பொருட்டு துரியோதனன் முதலானோர் ஏளனம் செய்தனர். அவர்களிடம், ‘`அனுதினமும் இறை நாமத்தை உச்சரிக்கும் - இறை நினைவுகளில் திளைத்திருக்கும், இறை மகிமைகளை உபதேசிக்கும் பாகவதர்கள் சாப்பிட்டு மீதம் வைக்கும் உணவு மிகத் தூய்மையானது; பாவங்களைப் போக்கவல்லது. சுத்தம் பாகவதஸ்யான்னம்!’’ என்று பதில் தந்தார் கிருஷ்ணர்.

அத்துடன் வேறுசில மேன்மைகளையும் சுட்டிக்காட்டினார்: ‘`சுத்தம் பாகீரதி ஜலம் சுத்தம் விஷ்ணு பதத்தியானம் சுத்தம் ஏகாதசி விரதம்.’’

அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம், கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்!

வைகுண்ட ஏகாதசி!

திருவரங்கத்தில்...

ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வரும் டிசம்பர் 14 முதல் ஜனவரி 4-ம் தேதி வரை கீழ்க் காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.

டிசம்பர் - 14: திருநெடுந்தாண்டகம்

டிசம்பர் - 15 பகல் பத்து ஆரம்பம்

டிசம்பர் - 24: ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம்

டிசம்பர் - 25: பரமபத வாசல் திறப்பு

(அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும்).

டிசம்பர் - 31: ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவை

ஜனவரி - 1 : திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்வு

ஜனவரி - 3 : ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரி

ஜனவரி - 4: ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச வைபவம்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சொர்க்கவாசல் திறப்பின்போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை; ஆன்லைன் டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 8 மணிக்குப் பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி!
வைகுண்ட ஏகாதசி!

இருபத்தைந்து ஏகாதசிகள்!

வளர்பிறையில் ஒன்று தேய்பிறையில் ஒன்று என மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகள்; வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒருசில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

அவை:

 உற்பத்தி ஏகாதசி

 வைகுண்ட ஏகாதசி

 ஸபலா ஏகாதசி

 புத்ரதா ஏகாதசி

 ஷட்திலா ஏகாதசி

 ஜயா ஏகாதசி

 விஜயா ஏகாதசி

 ஆமலகி ஏகாதசி

 பாப மோசனிகா

 ஏகாதசி காமதா ஏகாதசி

 வரூதிநி ஏகாதசி

 மோகினி ஏகாதசி

 அபரா ஏகாதசி

 நிர்ஜலா ஏகாதசி

 யோகினி ஏகாதசி

 சயினி ஏகாதசி

 காமிகா ஏகாதசி

 புத்ர(ஜா)தா ஏகாதசி

 அஜா ஏகாதசி

 பத்மநாபா ஏகாதசி

 இந்திரா ஏகாதசி

 பாபாங்குசா ஏகாதசி

 ரமா ஏகாதசி

 ப்ரபோதினி ஏகாதசி

 கமலா ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி!
வைகுண்ட ஏகாதசி!

திருமலை திருப்பதியில்...

திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் கிடையாது. பதிலாக வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, ‘முக்கோடி பிரதட்சணம்’ என்ற பிராகார திறப்பு விழா வைபவம் நடைபெறும். திருப்பதியில், இந்த முக்கோடி பிரதட்சணம், சொர்க்கவாசலுக்கு சமம் என்பர்.

திருப்பதி திருக்கோயிலில் சம்பங்கி பிராகாரம் (முதல் பிராகாரம்) மற்றும் விமான பிரதட்சணம் (2-ஆம் பிராகாரம்) ஆகியவை தவிர ‘முக்கோடி பிரதட்சணம்’ என்றொரு பிராகாரமும் உண்டு. இந்த பிராகாரம், வருடத்தில் மூன்று நாள்கள் திறக்கப்படும். அதாவது, மார்கழி மாதம் - வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி முதல் துவாதசி வரை திறந்து விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு திருப்பதியில் 10 நாள்கள் வரை (வரும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள பக்தர்கள் வேண்டு கோளின்படியும் பெரியோர்களான மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதி களின் ஆலோசனைகளின்படியும் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு