கோயில்கள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் திருவாரூரும் ஒன்று. இங்கு வலங்கைமான் வட்டத்தில் கண்டியூர் எனும் ஊரில் (திருவையாறு கண்டியூர் அல்ல; இது வேறு தலம்) எழுந்தருளி இருக்கிறார் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர்.
`திருஞானசம்பந்தப் பெருமானால் பூஜிக்கப்பட்ட இந்த ஏகாம்பரேஸ்வரர், ஞானமும் முக்தியும் தரவல்ல பெருமான். அம்பிகை காமாட்சி, திருமண வரம் அருளும் தேவியாகவும் பிள்ளை வரம் அருளும் தாயாகவும் விளங்கி வருகிறாள்!
`காலமறிய முடியாத காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், மிகுந்த இடிபாடுகளுடன் சிதிலமுற்றுப்போனது. உள்ளூர் அடியார் பெருமக்கள் இணைந்து வேறோர் இடத்தில் பெரியளவில் ஆலயம் எழுப்பத் தொடங்கினர். அம்பிகை மற்றும் பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என ஆலயப் பணிகள் மெள்ள தொடங்கின. ஆனால் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கோயில் பணிகள் முடங்கிப்போய்விட்டன. இப்போது மீண்டும் திருப்பணியைத் தொடங்கவேண்டும். அடியார்கள், சிவபக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் இந்த ஆலயத்தின் திருப்பணிகள் விரைவுபெறும்' என்று அடியார்கள் தகவல் பகிர்ந்தார்கள்.



உடனே புறப்பட்டோம் இந்தக் கண்டியூர் ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்க. கண்டியூரில் `அகத்தியக் காவிரி' எனப்படும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இவரது ஆலயம். மிக அற்புதமான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அன்பே வடிவான அடியார்க் கூட்டம் ஒன்று ஈசனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
வலம் வந்தோம். சாந்நியத்துடனும் அதிர்வுடனும் திகழ்கிறது ஆலய வளாகம். மனதுக்குள் இனம் புரியாதபடி சிலிர்ப்பு. வலத்தை நிறைவுசெய்து பெருமானை தரிசிக்க முனைந்தோம். அற்புதமான லிங்கத் திருமேனியராய் காட்சி தந்தார் ஈசன். முற்கால சோழ மன்னர்கள் பலரும் பணிந்து போற்றிய பெருமானாம் இவர். நாமும் பணிந்தோம்.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும்,
நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே...
என்று பெரியோர்கள் வழியில் வணங்கித் தொழுதோம். `ஈசனை அன்றி வேறொன்றையும் கண்டிலேன், எல்லாம் சிவமெனக் கண்டேன்' என மனம் ஆராதிக்கத் தொடங்கியது. `தரிசித்த கணத் திலேயே நம் சஞ்சலங்களை நீக்கிவிடும் சுவாமி இவர்' என்றார் அடியார் ஒருவர். நமக்கும் அந்த அனுபவம் வாய்த்தது. மனதில் பெரும் நிம்மதி! அதே உணர்வுடன் அம்பாளையும் வணங்கினோம்.
`ஆலயப் பிரதிஷ்டைக்கு உதவி செய்பவருக்கு அரச போகம் கிட்டும்; பக்தியில் திளைப்போர் ஆலயத் திருப்பணிக்கு உதவினால் இம்மையில் சகல இன்பங்களையும் மறுமையில் மோக்ஷமும் பெறுவர்' என்பது ஸூதஸம்ஹிதை போன்ற ஞானநூல்களின் வழிகாட்டல். நாமும் இந்த ஆலயப் பணிக்கு இயன்ற பங்களிப்பை வழங்கு வோம். திருப்பணிகளில் அடியார்களுடன் கைகோர்ப்போம். சிவனருளால் நம்முடைய ஏழேழ் தலைமுறையும் வாழ்வாங்கு வாழும்!
வங்கிக்கணக்கு விவரம்:
KANDIYUR EKAMBARESWARAR IRAIPANI MANDRAM
STATE BANK OF INDIA KODAVASAL BRANCH
A/C No. - 36363573449
IFSC - SBIN0007015
தொடர்புக்கு - ராஜசேகர் 94437 12187
சாப்பிட்ட பிறகு பிரார்த்தனை...
சாப்பிட்டு முடித்ததும் செய்ய வேண்டிய பிரார்த்தனை குறித்து விஷ்ணுபுராணம் குறிப்பிடுகிறது.
கிழக்கு நோக்கி ஏதேனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொள்ளவேண்டும். பின்னர் `என் உடலில் உள்ள பஞ்சபூதங்களும் நான் சாப்பிட்ட உணவை ஜீரணமாக்க வேண்டும். ஜீரணமான உணவு எனக்குப் பலத்தைத் தரவேண்டும். எனக்குச் சுகம் உண்டாக வேண்டும். ஆரோக்கியம் பெருக வேண்டும். உடம்புக்கும் எல்லா இந்திரியங்களுக்கும் ஆதாரமாகவும் பகவானாகவும் ஒருவனாகவும் இருப்பது விஷ்ணுவே என்பது எப்படி சத்தியமோ, அந்தச் சத்தியத்தால் என்னால் சாப்பிடப்பட்ட உணவு முழுவதும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்' என்று மனதாரப் பிரார்த்திக்க வேண்டுமாம்.
- ஆர்.கீதா, சென்னை-4