Published:Updated:

‘வெள்ளை மண் விபூதியானது!’

வள்ளலார் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளலார் தரிசனம்!

- எஸ்.அருணாசலம்; ஓவியம்: ம.செ

தில்லையம்பதியான நடராஜர் நர்த்தனமாடும் சிதம்பரத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் உள்ளது மருதூர். வயல்கள் சூழ்ந்த இந்த மருதூர் கிராமம் இந்த உலகுக்குத் தந்த வரமே ராமலிங்க அடிகளாராகிய திரு அருட்பிரகாச வள்ளலார்.

`ஏழைகளின் பசியைப் போக்கும் ஜீவகாருண்யம் என்ற அன்பான வழிபாடே, கடவுளின் அருளுக்கு நாம் பாத்திரமாக ஒரே வழி!’ இதுவே, இந்த உலகம் உய்வடைதற்கு வள்ளலார் காட்டிய வழி.

இவரின் ஞான வாழ்வைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:

எல்லாம்வல்ல இறைவன் இட்ட விதை மருதூரில் முளைத்தது. சென்னை திருவொற்றியூரில் செடியானது. சிதம்பரத்தில் தருவாக வளர்ந்தது. வடலூரில்... தருமச்சாலை, சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை என்றெல்லாம் கிளைவீசிப் படர்ந்தது. கருங்குழியில் மலர்ந்து மணம் வீசியது. மேட்டுக்குப்பத்தில் பழுத்துக் கனிந்தது எனலாம்.

வள்ளலார்
வள்ளலார்
ம.செ

அருள் நிறைந்த வள்ளலாரின் வாழ்க்கை அற்புதமானது. சென்னை திருவொற்றியூரில் அவர் இருந்த காலம் அது. அங்கே, கடற்கரையில், நீரலைகள் ஜரிகையிடும் வெண்மணற் பரப்பின் தண்ணிய சூழலில், சிவஞானி பட்டினத்தாரின் சமாதி உள்ளது.

திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்த மூதாட்டி ஒருவர், பட்டினத்தார் சமாதிக்கு வழிபட வந்த வள்ளலாரை வணங்கி, தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

``ஐயா! `மணல் எல்லாம் வெண்ணீறு’ என்று பட்டினத்துச் சுவாமிகள் இந்த ஊரைப் புகழ்ந்து பாடியுள்ளாரே. தங்கள் கருத்து என்ன?’’

உடனே வள்ளலார் அந்த மூதாட்டியிடம், ``சந்தேகம் வேண்டாம்... இதோ, பாருங்கள்’’ என்றபடியே ஒருபிடி மணலை எடுத்துக் கொடுத்தார்.

வெண்மணலே வெள்ளை வெளேரென சொல்லும்படிக்கு விபூதியாக மாறி, அந்த மூதாட்டியின் கையில் சின்னச் சின்ன சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. அந்த மூதாட்டி வியந்துபோனாள்; வள்ளலாரை வணங்கிப் போற்றினார்.

வள்ளலார் ஒற்றித் தியாகேசரை வழிபடுவதற்கு, அவ்வூர் கோயில் கோபுரம் அருகிலுள்ள நெல்லிக்காய்ப் பண்டாரம் தெரு வழியாகவே செல்வார்.

அந்தத் தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் நிர்வாண சந்நியாசி ஒருவர் உட்கார்ந்துகொண்டு, தெருவில் போவோர் வருவோரை எல்லாம்... ``இதோ நாய் போகிறது... இதோ நரி போகிறது... இதோ புலி போகிறது... இதோ எலி போகிறது’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் வள்ளலார் அந்தத் தெரு வழியாக வந்ததைப் பார்த்த நிர்வாண சந்நியாசி வள்ளலாரைச் சுட்டிக்காட்டி,

``இதோ... ஓர் உத்தம மனிதன் போகிறான்’’ என்று உரைத்தார். அத்துடன், ஓர் ஆடையால் தன் மேனியை மறைத்துக் கொண்டார்.

வள்ளலார் அவரிடம் சென்று மென்மையுடன் சில வார்த்தைகளைச் சொன்னார்.

அவரது தரிசனத்துக்காகவே காத்திருந்த மாதிரி அந்த நிர்வாணத் துறவி அன்று இரவே அங்கிருந்து மாயமானார்.

வள்ளலாருக்கு அம்பாள் நேரில் வந்து அமுதூட்டிய அற்புதமும் நிகழ்ந்தது.

வடலூர் சத்தியஞானசபை
வடலூர் சத்தியஞானசபை

ஒருமுறை கோயில் தரிசன முடித்த வள்ளலார் பசியின் களைப்பில் அங்கிருந்த வாகன மண்டபத்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டார். பிள்ளையின் பசியைத் தாய் பொறுப்பாளா?

திருவொற்றியூர் வடிவுடை நாயகி, ஒரு கிண்ணத்தில் அன்னம் எடுத்து வந்து அமுதூட்டினாள். ஞானக்குழந்தையாம் திருஞானசம்பந்தருக்கு ஞானப் பாலூட் டியவள், வள்ளலார் சற்றே வளர்ந்த பிள்ளை என்பதால் அன்னம் ஊட்டினால் போலும்.

இந்த அற்புதத்தை அற்புதமாய் பாடி யிருக்கிறார் வள்ளலார். அந்தப் பாட்டு...

`தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம்

திரு அமுதோர் திருக்கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே

ஒற்றியில் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி

உவந்து கொடுத்தருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே!

தைப்பூசம் இணைந்த ஒரு வெள்ளிக்கிழமை அன்று (1874, ஜனவரி - 30) சன் மார்க்க சங்கத்தாருக்கு வள்ளலார் இறுதிக் கட்டளை இட்டார்.

‘நான் உள்ளே பத்துப் பதினைந்து நாள்கள் இருக்கப் போகிறேன். யாரும் உள்ளே பார்த்து என்னைக் காணாமல் அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தாலும் யாருக்கும் தோன்றாத வண்ணம் வெற்று வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்துவிடுவார். என்னைக் காட்டிக் கொடார்’ என்று சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்து திருக்காப்பிட்டுக் கொண்டார்.

அதன்பிறகு அவர் அந்த அறையில் காணப்பட வில்லை. அருட் பெருஞ்சோதி, மயமான இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் இந்தப் பிரபஞ்சமெங்கும் வியாபித்து இருக்கிறார். நம் எல்லோரது உடம்பிலும் சோதி வடிவில் அவர் புகுந்து இருக்கிறார்.

இந்த வருடம் 28.1.2021 வியாழக்கிழமை அன்று தைப்பூசத் திருநாள். கருணை உள்ளத்தையும் உயிர்களை நேசிக்கும் பண்பையும் நமக்குத் தந்த வள்ளலாரைப் போற்றித் துதிப்போம்.

‘வெள்ளை மண் விபூதியானது!’

`ஐந்து மூலிகைகள்!’

வாழ்வியலுக்கான வழிகாட்டலை எளிமையாக உபதேசித்துள்ளார் வள்ளலார். காலைக்கடன், உண்ணுதல், உறங்குதல் உட்பட வாழ்வுக்குத் தேவையான வழிமுறை விளக்கங்களை அளித்துள்ளார்.

ஒரு நாளில் விடியற்காலை, மதியம், இரவு என மூன்று முறை வெற்றிலை-பாக்கு போடவேண்டும் என்பது அவர் தரும் அறிவுரை. காலையில் பாக்கு மிகுதியாகவும், உச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ள வேண்டும். வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு மென்றவுடனே முதல் இரண்டு முறை ஊறும் நீரை விழுங்கலாகாது; உமிழ்ந்து விட வேண்டும்.

அதேபோல், நல் வாழ்க்கைக்கு ஐந்து மூலிகைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். அவை: கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை, வல்லாரை, புளியாரை. இந்த ஐந்தும் ஆரோக்கியம் காக்கும் சஞ்ஜீவி மூலிகைகள் என்றால் மிகையல்ல.

- தமிழ்ச் செல்வன், மதுரை-6