Published:Updated:

விழாக் கோலம் காண்பாரா நம் விஜயவரதர்?

விஜயவரதர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயவரதர் ஆலயம்

ஆலயம் தேடுவோம்

பிரமாண்ட ஆலயம் ஒன்று அரசின் அலட்சியத்தாலும் அறநிலையத்துறையின் பிடிவாதத்தாலும் முற்றிலுமாக சிதைந்து விட்டது என்று பக்தர்கள் தரப்பில் சிலர், வாட்ஸப் மூலம் தகவல் பகிர்ந்திருந்தார்கள். தகவல் பகிர்வுடன் அவர்கள் அனுப்பியிருந்த ஆலயத்தின் புகைப்படங்களைக் கண்டு பெரிதும் அதிர்ந்தோம். அந்த ஆலயத்தை நேரில் தரிசிக்கப் புறப்பட்டோம்.

விழாக் கோலம் 
காண்பாரா நம் விஜயவரதர்?
விழாக் கோலம் 
காண்பாரா நம் விஜயவரதர்?

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்துக்கு அருகே பாபுராயன் பேட்டை எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது, அருள்மிகு விஜய வரதராஜ பெருமாள் கோயில். 5 கோபுரங்கள் மற்றும் 5 பிராகாரங்களுடன் பரந்துவிரிந்த பிரமாண்டமான கோயில். ஒரு காலத்தில் பாசுரப் பாராயணங்களும் அரையர் சேவைகளுமாகக் கோலாகலமாகத் திகழ்ந்த ஆலயம்.

ஆனால் தற்போது கோயிலுக்குள் நுழையவே தயங்கும் நிலை. அவ்வளவு இடிபாடுகள், புதர் மண்டிய பிராகாரங்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் கிடக்கிறது இந்த ஆலயம். கோயில் எங்கும் மழை நீர் தேங்கிக் கிடக்க, நம் விழிகளோகலக்கத்தில் கண்ணீரால் தளும்பத் தொடங்கியது.

‘திருவரங்கத்திலும் திருமலையிலும் செல்வச் செழிப்போடு அலங்கார பூஷிதனாக விளங்கும் பெருமாளே... அருளாளா... இங்கு ஏன் இப்படி இருளிலும் குளிரிலும் அவதிப்பட்டுக் கிடக்கிறாய். இதுவும் உன் லீலையா!’ என்று மனம் அரற்ற, ஆலயத்தைச் சுற்றி வந்தோம்.

அது 16-ம் நூற்றாண்டு. தொண்டை மண்டலம் செழிப்பாய் விளங்கிய பொற்காலம். கிருஷ்ணாஜி பண்டிட் என்ற இப்பகுதியைச் சேர்ந்த திவான் ஒருவர் காஞ்சி வரதராஜரின் மீது அபார பக்தி கொண்டிருந்தார். அவரின் மகனான பாபுராயனும் காஞ்சிவரதரின் பெரும் பக்தன்.

காஞ்சியில் பிரம்மோற்சவம் நிகழும்போது எல்லா உற்சவங்களையும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பாபுராயன். ஒருமுறை, வரதரை தரிசிக்க முடியாமல் போனது. தவித்துப் போனார் பாபுராயன். `வரதரைக் காணாத வாழ்வு என்ன வாழ்வு...’ என்று உள்ளம் வருந்த, உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினார் பாபுராயன். எவர் சொல்லியும் தண்ணீர் அருந்தவும் மறுத்துவிட்டார்.

பக்தன் தவித்திருப்பதை பரமாத்மா பொறுப்பாரா? கனவில் தோன்றினார். ``அன்பனே பாபுராயா! என்னைத் தேடி இனி நீ திருக்காஞ்சிக்கு வரவேண்டாம். உன்னைத் தேடி நானே இங்கு வந்து விட்டேன். இங்கிருந்தே உனக்குத் தினமும் திருமுக தரிசனம் அளிப்பேன். நான் எழுந்தருளப் போகும் இந்த இடம் தென்காஞ்சி என்று சிறப்பு பெறும். உன்னைத் தேடி நான் வந்ததால் `விஜய வரதன்’ என்று திருப்பெயர் ஏற்பேன்.’’ என்று அருளி மறைந்தார்.

இங்ஙனம் பக்தன் பாபுராயனின் துயரத்தை மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்கள் அனைவரின் சங்கடங்களையும் தீர்த்து, அவர்களின் வாழ்வில் வளம் அருள இங்கு அற்புதமாகக் கோயில் கொண்டாராம் அருள்மிகு விஜயவரதர்.பெருமாளே விரும்பி வந்து குடிகொண்ட ஊர் எனில், இந்தக் கோயிலை எப்படியெல்லாம் பராமரித்துப் போற்ற வேண்டும். ஆனால்... இடிபாடுகளும் புதர் மண்டிய கற்குவியலுமாகக் கிடக்கிறது ஆலயப் பகுதி.

சிற்சில இடங்களில் சுவர் சரிந்துகிடக்க, மெள்ள நகர்ந்து பெருமாளின் சந்நிதியை அடைந்தோம்.

நின்ற நிலையில் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரமும், கீழ் இடக் கரம் கதாயுதத்தில் ஊன்றித் திகழ, வலது கரத்தால் அபயம் காட்டி அருள்கிறார் விஜயவரத பெருமாள். திருமுகப் பொலிவும் புன்னகையும் அழகோ அழகு; நாளெல்லாம் தரிசித்துக் கொண்டிருக்கலாம்! தாயாரின் திருநாமம் அருள்மிகு விஜயவல்லித் தாயார். மேலும் இங்கு ராதா - ருக்மிணி சமேத வேணுகோபாலர், ராமர், சீதை, ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், கருடன் சந்நிதிகளும் உள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உள்ளது போலவே இங்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லி மண்டபமும் உண்டு. பாதிரி மரம் தலவிருட்சம், கோயிலின் உள் பிராகாரத்தில் விஜய புஷ்கரணியும், வெளிப் பிராகாரத்தில் கமல தீர்த்தமும் ஜன்மநாசினி - பாபநாசினியாக விளங்கியுள்ளன.

அந்நியர் காலத்தில்கூட அற்புதமாகத் திகழ்ந்த கோயில் இப்போது தான் கேட்பார் யாருமின்றி, வருவோர் அறவே இன்றி பாழடைந்து கிடக்கிறது. நமது தர்மம் செய்த புண்ணியமோ என்னவோ... ரங்கசாமி பட்டாசார்யர் என்ற பெரியவரும் அவரின் பெயரன் கோபிநாத்தும் சேர்ந்து இந்தக் கோயிலில் ஒருகால பூஜையைச் செய்து வருகிறார்கள். இந்த கோயிலைப் பற்றி கேட்டதும் வருத்தம் மேலிடப் பேசினார் அந்தப் பெரியவர்.

விழாக் கோலம் 
காண்பாரா நம் விஜயவரதர்?

``கேட்டதை எல்லாம் அள்ளித்தருபவர் இந்த வரதர். மக்களுக்கு இவரின் மகிமை தெரியாமல் போய்விட்டதே என்பதுதான் எங்களுக்குள்ள வருத்தம். பெரிய பெரிய கோயில்களுக்கெல்லாம் தரிசனத்துக்குச் செல்கிறோம். ஆனால் இதுபோன்ற ஆலயங்களை மறந்து விடுகிறோம். இப்படியான கோயில்களுக்கும் மக்கள் கூட்டம் சென்று வந்தால்தானே கோயிலின் புராதனமும் மகிமையும் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது இதுபோன்று ஆலயம் பாழ்பட வாய்ப்பு இருக்காது அல்லவா?

ஆங்காங்கே சிறிய கோயில்களை ஊரும் பக்தர்களுமா சேர்ந்து புனரமைப்பு செய்து வருகிறார்கள். மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இதுபோன்ற பெரிய கோயில்களின் நிலை அப்படி இல்லை. பொது மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் உடன் இணைந்தால் மட்டுமே திருப்பணிகளை எடுத்துச் செய்ய முடியும்.

கனஜோராக உற்சவங்கள் நடந்த கோயில் இது. இப்போது உற்சவமோ திருவிழாக்களோ இல்லை. மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அந்தப் பெருமாளே மனது வைத்தால்தான் உண்டு. தினமும் ஒரு கால பூஜையா காலையில் 10 மணிக்கு வந்து பூஜை செய்வோம். மற்றபடி யாராச்சும் இந்தப் பக்கம் வந்து எங்களைக் கூப்பிட்டால் கோயிலைத் திறந்து காட்டி பூஜை செய்துவைக்கிறோம்.மற்றபடி எத்தனையோ முயற்சி செய்தும் பலன் இல்லை.

வருடா வருடம் காஞ்சி வரதரே இங்கு வந்து ஒருநாள் தங்கிட்டுப் போவார். அதெல்லாம் ஒருகாலம்... என் காலத்திலேயே இந்தக் கோயில் சரியாகி, மீண்டும் கோலாகலமாக உற்சவங்கள் நடந்து விஜயவரதரை எல்லோரும் கொண்டாடவேண்டும்; அவரின் திருவருள் கடாட்சத்தைப் பெற்று மகிழவேண்டும். இதுதான் என் ஆசை; நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன்’’ என்கிறார் ரங்கசாமி பட்டாசார்யர்

அவரின் ஆதங்கம் நியாயமானதே. இதுபோன்ற பொக்கிஷமான ஆலயங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாலேயே இப்படியொரு நிலைமை. நம் விஜயவரதரின் ஆலயம் மீண்டும் பொலிவுபெற எல்லோரும் தோள்கொடுப்போம். இயன்றவர்கள் ஒருமுறையேனும் குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்கு நேரில் சென்று விஜயவரதரை தரிசித்து வழிபட்டு வாருங்கள். நண்பர்களுக்கும் உற்றார்-உறவுகளுக்கும் கோயிலின் நிலையை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களும் நேரில் சென்று தரிசித்து வரட்டும். பிரமாண்டமான இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு, அது நல்லதொரு தொடக்கமாக இருக்கும். (தொடர்புக்கு : ரங்கசாமி பட்டாசார்யர் - 96264 58573, 77087 67517)