Published:Updated:

வாரணமும் தோரணமும்-2

பொதிகை மலை
பிரீமியம் ஸ்டோரி
பொதிகை மலை

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி...

வாரணமும் தோரணமும்-2

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி...

Published:Updated:
பொதிகை மலை
பிரீமியம் ஸ்டோரி
பொதிகை மலை

காலத்தைக் கடந்தவர்கள். அண்டவெளியின் ரகசியங்களை அகத்திலேயே கண்டுகொள்ளும் மகானுபாவர்கள். `சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’ என்கின்றனவே ஞானநூல்கள்... அவ்வண்ணம் சிந்தையில் எப்போதும் பரத்தை நிறுத்தி, அதனருளால் பார் செழிக்க கருணை பொழியும் புண்ணியர்கள் சித்தபுருஷர்கள்.

வாரணமும் தோரணமும்-2

சாமானியர்களைப் போன்று பசி, பிணி, துக்கம் எதுவும் அவர்களைப் பாதிப்பது இல்லை. ஏழு மிளகை மட்டுமே சாப்பிட்டுத் தண்ணீர் குடித்து நாள்களைக் கழித்துவிடமுடியும் அவர்களால். அவ்வளவு ஏன்... பல வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கணம் விழித்து ஓரு கனியோ இலையோ உண்டுவிட்டு மீண்டும் நெடுங்காலம் தவத்தில் ஆழ்ந்துவிடும் சித்தபுருஷர்களும் உண்டு.

வள்ளிமலை என்றொரு திருத்தலம். வேலூர் - ராணிப்பேட்டை அருகில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒருமுறை வாரியார் சுவாமிகள் அங்கே திருப்பணிகள் செய்துகொண்டிருந்தார்.

செப்பனிடும் பொருட்டு மலைப்பாதைப் படிகள் உருவப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நடுவே சிறுமண்டபம் ஒன்று இருந்தது. அங்கும் தளக் கல்லை உருவினார்கள் பணியாள்கள்.

சட்டென்று நறுமணத்துடன் கூடிய புகை வெளிப்பட்டது. அந்த இடத்தில் பணியில் இருந்தவர்கள் பேச்சுமூச்சற்றுக் கீழே விழுந்தார்கள். விஷயம் வாரியார் சுவாமிகளுக்குச் சென்றது. பதைபதைப்போடு ஓடோடி வந்தார். கல் உருவப்பட்ட இடத்தை பயபக்தியோடு உற்று நோக்கினார். உள்ளே தரைக்குக் கீழே சித்தர்கள் சிலர் தவத்தில் இருப்பதைக் கண்டார். கண்மூடி வணங்கினார். அவர்களின் தவத்துக்கு இடையூறு நேரக் கூடாது என்று அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டுத் திருப்பணிகள் தொடர்ந்தனவாம்.

வாரணமும் தோரணமும்-2

ஆம்... காலத்தை வென்றவர்கள் சித்தபுருஷர்கள்!

அவர்களால், அளவில் ஓர் அணு போன்று உருவைச் சுருக்கமுடியும். இந்த சக்திக்குப் பெயர் அணிமா. மலையைவிடவும் பெரிதாய் பேருரு கொள்ளவும் முடியும். இந்த ஸித்திக்குப் பெயர் மகிமா. இப்படி எண்வித ஸித்திகள் உண்டு.

அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, வசித்வம், பிராகாமியம், பிராப்தி, ஈசத்வம் எனும் எட்டு ஆற்றல்களே அஷ்டமா ஸித்திகள். இவை அனைத்தும் கைவரப் பெற்றவர்கள் சித்த மகாபுருஷர்கள். அவர்கள் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை; ஆனால் அவர்களோ தங்களின் பொருட்டு எதையும் சிந்திப்பது இல்லை.

இப்படியான சித்தர்கள் சிலர் ஒருவரைத் தேடி தெற்குநோக்கிப் பயணப்பட்டார்கள். யார் அவர்?

அவரும் ஒரு சித்தபுருஷரே. தர்மசெளமினி என்ற தவசீலரின் சீடர். ஒருநாள் தர்மசெளமினி தன் சீடரை அழைத்தார். `அன்பனே! உயிர்த்துவம் யோக நெறி யாவும் அறிந்தவன் நீ. ஆனாலும் கற்றது கையளவு அல்லவா? ஆகவே நீ தென்னகம் சென்று அகத்திய முனிவரை தரிசித்து பணிவிடை செய். அவரின் திருவருளும் போதனைகளும் உனக்குத் தேவை!’’ என்று பணித்தார்.

குருநாதரை வணங்கி ஆசிபெற்றுப் புறப்பட்டார் சீடர். அகத்தியரை தரிசித்தார். அகத்தியரும் சந்தானகரணை முதலான பலவித மூலிகை நுட்பங்களும், சம்மோஹினி மந்திரம் முதலான பல மருத்துவ சூட்சுமங்களும் உபதேசித்தார். விரைவில் குருவே வியக்கும் சீடரானார்.

அந்தக் காலத்தில் சிவபக்தரான பாண்டிய மன்னர் ஒருவருக்குக் கடுமையான இடுப்பு வலி ஏற்பட்டது. மாமன்னர் ஆயிற்றே ராஜ வைத்தியம் நிகழ்ந்தது; இடுப்புவலியும் ஓரளவு குறைந்தது. ஆனால் பக்கவிளைவாக முதுகில் கூனல் விழுந்தது. பெரிதும் வருத்தம் அடைந்தார் மன்னர்.

திக்கற்ற எவரையும் தக்கபடிக் கரைசேர்ப்பது குருவருள் அல்லவா. ஆகவே, குருநாதரைத் தேடி விரைந்து வந்தார். அகத்தியரை தரிசித்துப் பணிந்தார். தன் நிலையைக் காட்டி கூனலைச் சரியாக்கும்படி வேண்டிக் கொண்டார்.

அவரை தன் ஆசிரமத்திலேயே சிறிதுகாலம் தங்கும்படி பணித்தார் அகத்தியர். சீடரை அழைத்துக் குறிப்பிட்ட சில மூலிகைகளைப் பறித்துவரச் செய்து சாறு பிழிந்து சேகரித்தார். அந்தக் குளிகைப் பாத்திரம் அடுப்பில் ஏற்றப்பட்டது. பின்னர் சீடரிடம், ``சீடனே! அடுப்பில் உள்ள மூலிகைச் சாற்றைப் பதம் பார்த்து இறக்கி வை’’ என்று கட்டளையிட்டுவிட்டு வேறு பணிகளைக் கவனிக்கச் சென்றார்.

`இதுதான் பதம்' என்று எப்படித் தெரிந்துகொள்வது... நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு இப்படியான கேள்வியும் எண்ணமும் எழுவதில் வியப்பில்லைதான். ஆனால் சீடர் குருவருளைப் பரிபூரணமாகப் பெற்றவராயிற்றே. சிறு நுட்பத்தின் மூலம் மருந்தின் பதத்தை அறிந்துகொண்டார். எப்படி தெரியுமா?

அடுப்பின்மீது பாத்திரத்திலிருந்த மூலிகைச் சாறு மெள்ள சூடேறியது. அதிலிருந்து வெளியேறிய புகை மேலே கூரை விதானத் தில் கரி படியும்படி மேலெழுந்தது. ஒருநிலையில் `டப்... டுப்...’ என்று ஏதோ சத்தம். அகத்தியரின் சீடர் மேலே பார்த்தார்.

அடுப்பில் பாத்திரம் இருந்த இடத்துக்கு நேர் மேலே கூரையில்... பல்லக்கில் இணைக்கும் வளைந்த மூங்கில் கட்டிவைக்கப்பட்டிருந்தது. அந்த மூங்கில்தான் மூலிகையின் ஆவி பட்டு குமைந்து குமைந்து நீண்டு நிமிர்ந்தது. அதனால் உண்டான சத்தம்தான் அது என்பதைக் கண்டுகொண்டார் சீடர். மூலிகை பதம் கூடிவிட்டது என்பதைத் தெரிந்து பாத்திரத்தை இறக்கிவைத்தார்.

அதேநேரம் அகத்தியரும் நுழைந்தார். சீடரின் மதியூகத்தைப் பாராட்டினார். அந்த மூலிகைத் தைலம் மன்னரின் முதுகுத் தண்டில் முறைப்படி தடவப்பட்டது. சிகிச்சை தொடர, விரைவில் கூன் நீங்கி நிமிர்ந்தார் பாண்டிய மன்னர் என்ற தகவல் உண்டு.

இந்த அகத்தியச் சீடரின் மகிமையை விளக்கும் வேறொரு சம்பவமும் உண்டு.

வாரணமும் தோரணமும்-2

பொதிகை மலைக்கு அருகில் ருத்ராகாரர் என்றொரு யோகி ஒருவர் ஆசிரமம் அமைத்து தவம்புரிந்து வந்தார். ஒருமுறை அவருக்குக் கடுமையான வயிற்றுவலி. அகத்தியரைக் காண வந்தார். அவருக்கு தக்க மருந்து கொடுத்து, பத்திய முறைகளையும் விளக்கி அனுப்பிவைத்தார் அகத்தியர்.

ஆனாலும் சில நாள்கள் கழித்து, `பிணி தீர்ந்தபாடில்லை’ என்று ருத்ராகாரரிடம் இருந்து தகவல் வந்தது. அகத்தியர் சீடரை அனுப்பி வைத்தார். ருத்ராகாரரைப் பரிசோதித்த சீடரும் பிரச்னை என்ன என்பதைப் புரிந்துகொண்டார்.

கொருக்கைக் குச்சி ஒன்றை எடுத்தார். நடுவில் துளையுள்ள குச்சி அது. அதை ருத்ராகாரரின் வாய்க்குள் நுழைத்து துளையின் வழியே மருந்தைச் செலுத்தி அருந்தச் செய்தார். விரைவிலேயே பிணி தீர்ந்தது. ருத்ராகாரர் மகிழ்ந்தார். அகத்தியர் கொடுத்த மருந்தையேதான் சீடரும் கொடுத்தார். ஆனால் வயிற்று வலி இப்போதுமட்டும் குணமானது எப்படி என்று அவருக்கு வியப்பு. விஷயம் இதுதான்...

ருத்ராகாரர் முதலில் நேரடியாக மருந்தை எடுத்துக்கொண்டார். அவரின் பல்லில் படிந்திருந்த பாஷாணத்தின் வீரியத்தால் மருந்து வேலை செய்யவில்லை. சீடர் கொருக்கைக் குச்சி மூலம் பல்லில் படாதபடி மருந்தை உட்கொள்ளச் செய்தார். ஆகவே பிணி தீர்ந்தது! இந்தச் சம்பவங்கள் மட்டுமா? ஒருமுறை அகத்திய மாமுனிக்குப் பார்வை மங்கிப்போக, அவருக்கே இந்தச் சீடர் கண்ணொளி கொடுத்த சம்பவமும் நடந்தேறியது.

அதுபற்றிப் பின்னர் அறிவோம். இதோ அகத்தியச் சீடர் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டார்கள், அவரைத் தேடிவந்த சித்தர்கள். அவர்களைப் பின் தொடரலாம் வாருங்கள்....

டர்ந்த அந்த வனப்பகுதியில் நடந்த சித்தர்கள் குறிப்பிட்ட ஓரிடத்தை அடைந்தார்கள். வனத்துக்கு மத்தியில் சிறு புல்வெளியாய்த் திகழ்ந்த அந்த இடத்தில், மையமாக வெள்ளைநிற யானை ஒன்று படுத்திருப்பது போன்று பெரும்பாறை ஒன்று தென்பட்டது.

சித்தர்கள் அந்தப் பாறையை நெருங்கினார்கள். வலம் வந்தார்கள். பின் விண்ணை நோக்கிக் சிரமேற் கரம் குவித்து வணங்கினார்கள். பாறையைச் சுற்றிலும் நின்றபடி உரக்கக் குரல் கொடுத்தார்கள்... ``தேரையரே வாரும் வெளியே!’’ என்று.

மறுகணம் அந்தப் பாறை வெடித்து இரண்டாகப் பிளந்தது. அடியில் பள்ளத்தில் தவத்திலிருந்த அகத்தியரின் சீடர் - தேரையர் மெள்ள கண்மலர்ந்தார். அண்ணாந்து நோக்கியவர் இந்தச் சித்தர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்!

- பயணிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism