Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தேரையர் விளக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தேரையர் விளக்கங்கள்

தோரணமலை அற்புதங்கள்!

வாரணமும் தோரணமும்!

தோரணமலை அற்புதங்கள்!

Published:Updated:
தேரையர் விளக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தேரையர் விளக்கங்கள்

குருவருள் இருந்தால் திருவருள் பரிபூரணமாக வாய்க்கும். இதற்கு சித்தபுருஷர் களின் வாழ்க்கைச் சம்பவங்களே சாட்சி. அவற்றில் ஒரு சம்பவம் திருமாளிகைத் தேவர் தொடர்பானது. இந்தச் சித்த புருஷர், தன் குருநாதராம் போகர் காட்டிய ஞான வழியிலேயே தன் தவ வாழ்வைத் தொடர்ந்தார். அதன் காரணமாக திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம்போன்று ஜொலித்தது; அவரின் உள்ளம் அருள் ஒளியால் பிரகாசித்தது என்பார்கள் பெரியோர்கள்.

வாரணமும் தோரணமும்!

`திருமாளிகை! பாலும் கற்கண்டும் கலந்து சோறு ஊட்டினாலும் இந்த உலகம் உன்னை ஏற்காது. பொய்மை நிறைந்தது அது. ஆனாலும் நீ மனத் தளர்ச்சி அடையக்கூடாது. சந்தனக் கட்டை போன்று இந்த உடம்பு மக்கள் சேவையில் அரைபட வேண்டும்’ என்ற குருநாதர் போகரின் கட்டளைப்படியே வாழ்ந்து வந்தார் திருமாளிகைத் தேவர். குருவருளும் திருவருளும் எப்போதும் அவருக்கு அரணாய் அமைந்தன. அதனாலன்றோ, சிவாலயத்தின் காளைச் சிலைகளும் உயிர் பெற்று இவரின் பொருட்டு மன்னனின் சேனைகளைச் சிதைத்தன!

ஆம்! நரசிங்கர் என்றொரு சிற்றரசன். சிலரின் பொய்யுரைகளை நம்பி திருமாளிகைத் தேவரைத் தண்டிக்க முற்பட்டான். தன்னு டைய வீரர்கள், சேனாதிபதிகளை அனுப்பி
னான். அவர்களால் அந்தச் சித்தபுருஷரை நெருங்கக்கூட இயலவில்லை. நிறைவில் மன்னனே சிறு படையுடன் சென்றான்.
அப்போது அவர் இருந்தது திருவாவடுதுறை தலம். அங்குள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் மதில்களில் காளைச் சிலைகள் இருந் தன. மன்னனின் படை வரும்தருணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மதிலிலிருந்த காளைச் சிலைகள் உயிர்பெற்று நந்தியெம்பெருமானின் உடலில் புகுந்து பூதங்களாய் வெளிப்பட்டு மன்னனின் படைகளை விரட்டியடித்
தனவாம். பின்னர் அந்த மன்னன் உண்மை உணர்ந்து சித்தபுருஷரை வணங்கிச் சென்றதாகச் சொல்வார்கள். இன்றும் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் ஆலய மதில்களில் நந்திச் சிலைகள் கிடையாது.

இன்னொரு சம்பவம். ஒருமுறை இரவு பூஜைக்காக குருநாதர் போகருடன் கோயி லுக்குச் சென்றார் திருமாளிகைத் தேவர். சிவதரிசனம் நிறைவுற்றது. பிரசாதமாக பயற்றஞ் சுண்டல் கிடைத்தது. இருவரும் வெளியே வரும்போது தீப்பந்தம் சுமந்து வரும் தொழிலாளி உறங்கிவிட்டிருந்தான்.
அவனை எழுப்ப மனமின்றி, தானே தீவட்டியைச் சுமந்தபடி குருநாதர் போகரைப் பின்தொடர்ந்தார் திருமாளிகைத் தேவர். அவரே திவட்டியைச் சுமந்து வருகிறார் என்பது போகருக்குத் தெரியாது. அருள்துறை எனும் திருமடத்தை நெருங்கியதும் `தீவட்டி போதும் இங்கேயே நில்’ என்று கூறிவிட்டு மடத்துக்குள் சென்று விட்டார் போகர்.
குருநாதரின் கட்டளை அல்லவா? திரு மாளிகை இரவு முழுவதும் அங்கேயே தீவட்டியைப் பிடித்தபடி அப்படியே நின்றுவிட்டார்.
பொழுது விடிந்தது. காலை அனுஷ்டானங்களை நிறைவேற்ற வேண்டுமே? தீவட்டியையும், பயற்றஞ் சுண்டலையும் இரு கரங்களில் ஏந்தியிருந்த திருமாளிகைத் தேவர், காலை அனுஷ்டானங்களை நிறைவேற்ற வேண்டி, இரண்டு புது கரங்களைப் பெற்றார் என்கின்றன சித்தர் வரலாற்று நூல்கள். விடிந்ததும் விவரம் அறிந்து போகர் அழைத்த பிறகே மடத்துக்குள் சென்றாராம் திருமாளிகை.
அதுமட்டுமா? அவரின் கையில் இருந்த சுண்டல் வேகாத பயிறாகமாறியது. அதையும் அவர் நிலத்தில் விதைக்க பயிர்கள் செழித்து விளைந்தனவாம். அதைக்கண்ட ஊர்மக்கள் அவரின் மகிமையை அறிந்து வணங்கிப் போற்றினார்களாம்.

அங்கே திருமாளிகைத் தேவருக்குக் குரு போகர் எனில், தோரண மலையில் தேரையருக்கோ அகத்தியரே ஞானகுரு. சித்தக் கலைகளோடு, மூலிகை மகத்துவங்களும் மருத்துவப் பாடங்களும் அகத்தியர் மூலம் பூரணமாகக் கிடைத்தது தேரையருக்கு. சில தருணங்களில் குருவே வியக்கும் சீடராகவும் விளங்கினார் தேரையர் என்பது பற்றியும் நாம் பார்த்தோம்.

அப்படித்தான் ஒருமுறை, காசிவர்மன் என்ற மன்னனுக்குத் தீராத தலைவலி ஏற்பட்டது. ராஜவைத்தியம் பலன் கொடுக்காததால் அகத்தியரைச் சரணடைந்தார் மன்னர். நாடி பார்த்த அகத்தியர் நொடிப்பொழுதில் உண்மையை அறிந் தார். நுண்ணிய தேரைக் குஞ்சு ஒன்று எப்படியோ நாசி வழியே புகுந்து மன்னனின் மூளையில் உறைந்திருப்பதை அறிந்தார். உடனடியாக சிகிச்சை ஆரம்பமானது சம்மோஹினி மூலிகை மூலம் மன்னனை மயக்கித்தில் ஆழ்த்தினார் அகத்தியர். சிலகணப் பொழுதுகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. தேரைக்குஞ்சு தென்பட்டது. அது சிறிது அசைந்தாலும் மன்னனின் மூளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். என்ன செய்வது, தேரையை எப்படி வெளியேற்றுவது என்று அகத்தியர் யோசித்திருந்த வேளையில் சிறு பாத்திரத்தில் நீர்நிரப்பி எடுத்து வந்த அவரின் சீடர், நீர்ப் பாத்திரத்தைத் தேரையின் கண்ணில் படும்படி காட்டி னார். அவ்வளவுதான் அந்த நீருக்குள் தாவிவிட்டது தேரை.

வாரணமும் தோரணமும்!

உடனடியாக சந்தானகரணி மூலிகையால் மன்னனின் கபாலம் மீண்டும் மூடப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. அகத்தியர் சீடரை அணைத்துக்கொண்டார். அவரின் திருவருளா லும் இந்தச் சம்பவத்தாலும் அந்தச் சீடருக்குத் தேரையர் என்ற திருப்பெயர் நிலைத்தது. தேரையரும் அகத்தியரின் ஆசியுடன் தன் பணியைத் தொடர்ந் தார். மருத்துவம் பொருட்டு தேரன் அளித்த நூல்கள் எண்ணிக்கையில் 21 என்பது சித்தக்கலை ஆர்வலர்கள் சொல்லும் தகவல். அவர் இயற்றிய பல நூல்கள்கிடைக்கவில்லை என்கிறார்கள்.
கிடைத்தவற்றில் தொகுக்கப்பட்ட தேரையர் வெண்பா, தேரையர் மகா கரிசல், தேரையர் காப்பியம், தேரையர் யமக வெண்பா விருத்தி உரை, தேரையர் தரு போன்றன குறிப்பிடத் தக்கவை.

அசனவித்தி யாசமான வசனத்தி னாலேகுண
மாவது தெரியாது தேவருக்கு மருமை
நிசமான வுணவுக ளிசைவாகி னால் முகில்
நீரின் குணம் வேறிலை பாரின் குணமே

- என்று தொடங்குகிறது ஒரு பாடல். உண்ணும் உணவின் தன்மையை அறிந்து கொள்வது, தேவர்களுக்கும் கடினமான காரியமாம். ஆதலால் உண்ணும் உணவில் மிக முக்கியமாகக் கருதப் படும் நீரின் தன்மையைக் கூறுவோம் எனக்கூறி நீரின் தன்மைகளை விளக்குகிறார் தேரையர்.
மழை நீரின் குணத்தில் யாதொரு மாறுபாடும் இல்லை. ஆனால் அந்த நீர் மண்ணில் விழுந்ததும் மண்ணின் குணத்தைப் பெற்று மாறுபடும். ஆகவே உணவின் மாறுபாடு, நாம் குடிக்கும் நீரின் தன்மையை அடிப்படை யாகக் கொண்டுள்ளது என்பது தேரையரின் வாக்கு.

ஆற்றுநீர் கபமறு மூற்றுநீர் கயமறும்
மாரிநீர் வளியறும் கூவனீ ரெரியறும்
சேற்று நீர் மலபந்தம் தேற்றுநீர் பசிமந்தம்
திரநீர் நலிமாறும் மேரிநீர் வலிமாறும்

- என்பது தேரையரின் வழிகாட்டல். அதாவது, ஆற்று நீரும் ஊற்று நீரும் கபத்தைப் போக்கும். மழை நீர் வாதத்தைப் போக்கும். கிணற்று நீர் பித்தத்தை அகற்றும். சேற்று நீர் மலத்தைக் கட்டும்.தேங்கிய நீர் பசிமந்தம் உண்டாக்கும். கடல்நீர் வயிற்று வலியைப் போக்கும். ஏரி நீர் வலியை நீக்கும் என்கிறார் தேரையர்.

அதுமட்டுமா... வெந்நீர் குடித்தால் என்னவாகும், குளிர்ந்த நீர் எதற்கான அருமருந்து என்றும் விளக்குகிறார். மேலும், கோட்டையைக் காக்கும் அகழி போன்று உடலைக் காக்கும் பச்சடி குறித்தும் சுவாரஸ்ய தகவலைச் சொல்கிறார் தேரையர். அது என்ன பச்சடி தெரியுமா?
- தரிசிப்போம்...