Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முருகப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகப் பெருமான்

வாரணமும் தோரணமும்!

வாரணமும் தோரணமும்!

வாரணமும் தோரணமும்!

Published:Updated:
தோரணமலை முருகப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகப் பெருமான்

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மகாபெரியவர் மணி - மந்திரம் - ஒளஷதம் குறித்து எளிமையாய் விளக்குவார்.

தோரணமலை முருகப் பெருமான்
தோரணமலை முருகப் பெருமான்


`சரீர ரக்ஷைக்கு மூன்று வழி சொல்வார்கள் – மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதிகளைப் போக்கும் குணமுண்டு. ஆக ப்ரீத்தியின் பொருட்டு நவகிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் உரிய ரத்தினங்களை மோதிரமாகவும் மாலையாகவும் பண்ணிப் போட்டுக் கொள்வதும் குறிப்பிட்ட மணியால் மூர்த்தி செய்துவைத்து அதற்கு அபிஷேகித்த தீர்த்தத்தைப் பானம் பண்ணுவதெல்லாம் உண்டு. இதுதான் மணி. நவரத்னத்தை நவமணி என்றும் சொல்கிறோமல்லவா? மணிகளைப் போலவே ஸ்வர்ணம், ரஜதம், தாம்ரம், பாதரஸம் முதலான உலோகங் களைக் கொண்டும் சிகிச்சை செய்து கொள்வதுண்டு.

அடுத்தது மந்திரம். ஜ்வரஹரேச்வரர் கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்திரங் களை ஜபிப்பது; சூரிய நமஸ்காரம் கந்தரநுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயைக் குணப்படுத்திக் கொள்வது. இது மந்திர பயன்பாட்டு வகை. ‘ஒளஷதம்’ என்பது மருந்து மூலம் குணம் செய்து கொள்ளும் மருத்துவ சாஸ்திரம். ஓஷதி என்றால் மூலிகை’’ என்று விளக்குவார் காஞ்சிமுனிவர்.

உலகத்தாரின் உடல் - உள்ளப் பிணிகளைப் போக்கவல்ல மருத்துவர்களாக ஒளிர்ந்த சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையிலும்... சிவலிங்கம், ஐந்தெழுத்து மந்திரம், விபூதி ஆகிய முப்பெரும் பேறு களையே மணி-மந்திரம்-ஒளஷதமாகக் கொண்டார்கள் எனலாம். `ஊனுடம்பு ஆலயம்’ எனும்படி தேகத்தைத் தெய்வீகமாக்கக் கற்றுத் தந்தார்கள். அதேநேரம், `மனமது செம்மையாவது அவசியம்’ என்பதையும் உணர்த்தத் தவறவில்லை.

ஆனால் மனிதர்கள் அரிய விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வது இல்லை. அற்ப விஷயங்களுக்கு ஆசைப்பட்டு அபூர்வ பொக்கிஷங்களைக் கோட்டைவிட்டு விடுவார்கள்.

சித்தர் ஒருவர் மூங்கில் வெட்டச் சென்றார். வனத்தில் அவர் மூங்கில் ஒன்றை வெட்டிய தருணம் பொலபொலவென தங்கம் தூளாகக் கொட்டியது. அதைக் கண்டதும், `எவரைக் கொல்ல இது இங்கு வந்து சேர்ந்ததோ என்று’ பதறிப்போனார் சித்தர் பெருமான்.

அதுமட்டுமா? ``என் சிவனே... வேங்கை யைப் பிடிக்கும் பொருட்டு அதன் கண்ணில் படும்படி ஆடு ஒன்றை கட்டி வைப்பார்கள். ஆட்டைப் பார்த்து அருகில் செல்லும் வேங்கை ஆசையின் காரணமாக அழிந்துபோகும். செல்வத்தின் மீது ஆசைப்படும் மனிதர் களின் நிலையும் அப்படித்தானே? என் இறைவா! என்னை மயக்கத்தில் ஆழ்த்தாமல் ஆத்மாவுக்கு அமைதியை அருள வேண்டும்’’ என்றும் விண்ணப்பித்தார்.

சித்தரின் இந்த உள்ளக்கிடக்கை பாடலாக வும் வெளிப்பட்டது.

ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்

மாடுகட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ?

கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா

வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே

ஆம்! சித்தர்பிரான் சிவவாக்கியர் அருளிய பாடல்தான் இது. ஆசை மனதை மயக்கும்; உண்மையை மறைக்கும்.

அகத்தியரின் அருள்பெற்ற சிவசர்மரின் கதையைப் பார்த்தோம் அல்லவா? அவர் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அகத்தியரின் அருளால் பொய்கையில் மூழ்கி எழுந்து பொலிவும் இளமையும் பெற்ற சிவசர்மர் மீண்டும் தாமிரபரணிக் கரை கோயிலை அடைந்தார். அங்கே, சாந்தன் என்பவரிடம் தனது பொன் முடிப்பைக் கொடுத்து வைத்திருந்தார் அல்லவா? அதை மீண்டும் பெறும் பொருட்டு சாந்தனைச் சந்தித்தார். அவனோ, ``தாங்கள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் நீங்கள் எந்தப் பொருளையும் தரவும் இல்லை’’ என்றான். சிவசர்மர் நடந்ததை விவரமாக எடுத்துகூறியும், உரிய அத்தாட்சிகளைச் சொல்லியும் பொன்முடிப்பின் மீது கொண்ட பற்றின் காரணமாக சிவசர்மாவை ஏமாற்ற முயன்றான் சாந்தன்.

ஊர் மன்றத்துக்கு விஷயம் எடுத்துச் செல்லப் பட்டது. அவ்வூர் கோயிலில் உள்ள புளிய மரத்தடியில் சாந்தனைச் சத்தியம் செய்யச் சொன்னார்கள் மன்றத்தார். அவனும் துளியும் பயமின்றி பொய் சத்தியம் செய்தான்.

இறை வெகுண்டது. அந்தப் புளிய மரத்தோடு சேர்த்து சாந்தனை எரித்துப் பொசுக்கியது. பின்னர் சிவசர்மாவின் வேண்டுதலை ஏற்று சாந்தனை உயிர்ப்பித்தார் இறைவன். தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட சாந்தன், சிவ சர்மாவின் பொக்கிஷங்களை அவரிடம் திருப்பி ஒப்படைத்தாகச் சொல்கிறது தலபுராணம்.

இங்ஙனம் சிவசர்மருக்குச் சிவனருள் கைகூடிய தலம் அம்பாசமுத்திரம். அங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனின் திருப்பெயர் அருள்மிகு காசிபநாதர்; அம்பாள் - அருள்மிகு மரகதாம்பிகை. இதே கோயிலில் `எரித்தாட்கொண்டார்’ எனும் திருப்பெயரிலும் லிங்க மூர்த்தி ஒருவர் சந்நிதி கொண்டிருக்கிறார்.

திருநெல்வேலி - பாபநாசம் மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இந்த ஊரின் முகப்பில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது காசிபநாத சுவாமி கோயில்!

இப்படி, தாமிரபரணியின் கரைநெடுகிலும் பொதிகை மலையிலு மாக அகத்தியரின் திருக் கதையுடன் தொடர்புடையனவாய்த் திகழும் தலங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் அகத்தியருக்கு தர்மசாஸ்தாவின் தரிசனம் கிடைத்த அற்புதத் தலம். ஐயன் சொரிமுத்து ஐயனார் எனும் திருப்பெயரோடு கோயில் கொண்டிருக்கும் புண்ணிய பூமி!

இந்தத் தலத்தில் அகத்தியர் மகாலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டாராம். காலப்போக்கில் இயற்கைப் பாதிப்புகளால் கோயிலும் அந்த லிங்கமும் மறைந்துபோய்விட, பிற்காலத்தில் அசரீரி வாக்காக ஒலித்து வணிகர்கள் சிலர் மூலம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாராம் ஸ்வாமி. மிகவும் சிலிர்ப்பான திருக்கதை அது. இந்தத் தலத்தில் அருளும் பட்டவாராய சாமிக்குச் செருப்புகளையே காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலைப் பற்றியும், பட்டவராயர் கதையையும் விரிவாக அறியப் போகிறோம். முன்னதாக தோரணமலையை முழுமையாக தரிசித்து வந்துவிடுவோமே!

குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும்\சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. முருகப் பெருமான் தென்னகத்தில் மூன்று தலங்களில் குகைக்கோயில் அழகனாக அருள் பாலிக்கிறார். அவை: வள்ளியூர், கழுகு மலை, தோரணமலை.

முதல் இரண்டு தலங்களிலும் கருவறை குடவரையே எனினும், மலை ஏறிச் சென்று தரிசிக்கும் அவசியம் இல்லை. வள்ளியூரிலும் கழுகுமலை தலத்திலும் மலையையொட்டி அடிவாரத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது; தரிசிப்பது மிக எளிது. தோரண மலையிலோ மலையேறி தரிசிக்க வேண்டும் முருகனை.

அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, தனிச் சந்நிதியில் அருளும் குருபகவான், மகாலட்சுமி, சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். கண்ணன் மற்றும் சிவனாரின் சுதைச் சிற்பங்களையும் காணலாம்.

மலையேற முடியாத அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, மலைப்படிகள் தொடங்கும் இடத்திலேயே பாலமுருகன் எழுந் தருளியிருக்கிறார். மலைக்குமேல் குகையில் அருளும் தோரண மலையானை தரிசிக்க அடிவாரத்திலிருந்து 1193 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் அபூர்வ மூலிகைகள்; அவற்றின் நறுமணத்தைச் சுமந்துவரும் காற்றை சுவாசித்தாலே போதும், பிணிகள் யாவும் நீங்கிவிடும். இது பொதிகை தீரத்துக்கே உரிய சிறப்பு. ஆம், தோரணமலையிலும் அருகிலுள்ள பொதிகை சிகரங்களிலும் அபூர்வ மூலிகைகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணத்துக்குச் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.

`விஷ்ணு கிரந்தை’ என்னும் ஒரு மூலிகைச் செடி. இது, விஷக் காய்ச்சலைக் குணப்படுத்த வல்லது என்பார்கள். அதேபோல் அம்மான் பச்சரிச்சி எனும் மூலிகை தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். சஞ்ஜீவி மூலிகை இதய நோய் களுக்கு அருமருந்து. புளிஆரை எனும் மூலிகை உண்டு. இது உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுமாம்!

அதேபோல், இப்பகுதியில் உள்ள பெரிய வர்கள் சிலர் `தென்றலாடும் பாவை’ எனும் மூலிகையைப் பற்றிச் சொன்னார்கள். இது விஷம் நீக்கும் மூலிகையாம். அற்புதமான இந்த மூலிகைகளில் பலவும் எங்கிருக் கின்றன என்பது, மூலிகை மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர் களுக்கே தெரியும்; மற்றவர்கள் இவற்றை இனம் காண்பது அரிது.

மூலிகைகள் மட்டுமா? சுனைகளுக்கும் பெயர் பெற்றது தோரண மலை. இங்கு 64 தீர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். அவற்றில் ஒன்று பிணி தீர்க்கும் மருத்துவத் தன்மையோடு திகழ்வது என்றால், மற்றொன்று நமக்கு செல்வ வளத்தையும் ஐஸ்வர்யத்தையும் அளிக்கும் செல்வச் சுனையாகத் திகழ்கிறது. அதன் பெயர் மகாலட்சுமி சுனை. தாமரைச் சுனை என்றொரு தீர்த்தமும் உள்ளது. ஆனால், அந்த இடத்துக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல!

- தரிசிப்போம்...

நீராடலின் பெயர்கள்!

தினமும் செய்யும் நீராடலுக்கு நித்யம் என்று பெயர்.

பித்ரு காரியங்களின் பொருட்டு நீராடுவது கிரியாங்கம் ஆகும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் மலாபகர்ஷணம் எனப்படும்.

புண்ணிய நதிகள், தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது கிரியா ஸ்நானம் ஆகும். கிரக தோஷ பரிகாரங்களுக்காக நீராடுவது, புஷ்டி ஸ்நானம் எனப்படும். நீரில் மூழ்கிக் குளிப்பதற்கு வாருண ஸ்நானம் என்று பெயர்.

- எம்.கீர்த்தனா, சென்னை-44