Published:Updated:

வாரணமும் தோரணமும் - 4

சித்தர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்கள்

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி இனிய பயணம்!

வாரணமும் தோரணமும் - 4

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி இனிய பயணம்!

Published:Updated:
சித்தர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்கள்

‘செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்’ என்கிறது பாடல் ஒன்று. இந்த உலகையே சிவமாகப் பார்ப்பவர்கள் சித்தர்கள். `சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’ என்பார் ஒளவை. அவ்வாறே சித்தமெல்லாம் சிவமயம் என்றிருப்பவர்கள் சித்தர்கள்.

தோரண மலை
தோரண மலை


சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை ‘அண்ட லிங்கம்’ என்றே போற்றுவார்கள். சரி, அந்த லிங்கத்தை அபிஷேகிக்க தீர்த்தம் வேண்டாமா? அந்தப் பிரமாண்டத்தை அபிஷேகிக்கவே புண்ணிய நதிகளை எல்லாம் தன்னகத்தே சங்கமிக்கவைத்து புனிதத்திலும் புனிதமான தீர்த்த சாகரமாக விளங்குகிறதாம் சமுத்திரம்.

நன்று! அபிஷேகிக்க சமுத்திர தீர்த்தம் சரி... அர்ச்சனை செய்ய, ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்க பூக்கள்? விண்ணில் நிறைந்திருக்கும் தாரகைகளே அர்ச்சனைப் பூக்களாம்.

மிக நன்று! அடுத்து ஸ்வாமிக்கான வஸ்திரம் - ஆடைகள்? அவருக்கு திசைகளே ஆடை.

`தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்

திரை பொரு நீரது மஞ்சன சாலை

வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை

கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே’

என்கிறது திருமந்திரம். இப்படித்தான் அண்டபிரமாண்டத்தையும் சிவ வடிவாய் காண்பார்கள் சித்தர் பெருமக்கள். அப்படியே இந்த அகிலத்தில் உறையும் சகல உயிர்களிலும் இறை வடிவையே காண்பார்கள். அன்பே சிவமென்று அன்பு செய்வார்கள்.

தேரையரும் அகிலத்தை அன்பால் திளைக்க வைக்க சித்தம் கொண்டார். சிவகணங்கள் போன்று தம்மைத் தேடிவந்து பணி செய்யப் பணித்த சித்தர்களுக்கு மனதால் நன்றிகூறியவராக, அற்புத மான அந்தத் தலத்தை அடைந்தார். அதன் பெயர் தோரணமலை.

ஆம்! நம் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான திருத்தலம்தான். குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை.

வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக்கிறது, தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்டதாகக் கூறுவர். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். இவ்வளவு சிறப்புகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று, தோரண மலையின் உச்சியில் ஒரு குகையில் கோயில் கொண்டிருக்கிறான் அழகு முருகன் - தோரணமலையான்.

தேரையர் இங்கே தங்கியிருந்து அறப்பணிகள் ஆற்றியிருக்கிறார்; மருத்துவ சிகிச்சைகள் செய்திருக்கிறார். தேரையர், தம்மை நாடி வரும் அன்பர்களின் உடற்பிணி உள்ளப் பிணி சகலத்தையும் தீர்த்துவைத்தார். நிறைவில் அவர் மகா சமாதி அடைந்ததும் இந்தத் தோரணமலையில்தான்!

தேரையர்
தேரையர்


இந்தத் தலத்தில் சிற்சில இடங்களில் காணப்படும் ஊறல் குழிகள், மலையின் மீது முருகன் அருள்பாலிக்கும் குகைக்கோயிலுக்கும் மேலே உள்ள தாமரைக்குளம் மற்றும் சுனைகள் தேரையர் இங்கு தங்கியிருந்து பணியின் சிறப்புகளுக்குச் சாட்சிகளாகத் திகழ்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

தேரையர் மட்டுமா? அகத்தியரும் இந்த மலைப்பகுதியில் தங்கியிருந்து பெரும்பணி ஆற்றியுள்ளார்; தொன்மையான பாடசாலையும் அவரால் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த விசேஷத் தகவல்களையும் தோரணமலை குகைக் கோயில் முருகனின் மகிமைகளையும் விளக்கமாகக் காண்போம். முன்னதாக தேரைய ரைப் போன்றே வேறோர் அடியார் அகத்தி யரின் திருவருளைப் பெற்ற திருக்கதையைப் பார்ப்போம்.

பொதிகை என்றதுமே நம் மனக்கண்ணில் தரிசனம் அருளும் தவசீலர், நம் அகத்தியபெருமான் அல்லவா?

அவரின் அருளால் பொதிகை தீரத்திலும் தாமிரபரணியின் கரை நெடுகிலும் நிகழ்ந்த - நிகழும் அற்புதங்கள் ஏராளம் உண்டு. அப்படித்தான் சிவசர்மர் என்ற அடியார் வாழ்விலும் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

ஞானத்தில் சிறந்த சிவசர்மருக்கு பெரும் விருப்பம் இருந்தது. எப்படியேனும் அகத்தியரை தரிசிக்கவேண்டும் என்பதுதான் அது. ஒருநாள் குருவருளைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். அதுவரையிலும் தான் சேர்த்து வைத்திருந்த பொருளை - சொத்துக்களை விற்றுக் கிடைத்த பணத்தைப் பொன்னாக மாற்றி சிறு துணி மூட்டையில் கட்டிக்கொண்டு கிளம்பினார்.

நெல்லைச் சீமையில் தாமிரபரணிக் கரையில் ஒரு சிவாலயத்தைக் கண்டார். நதியில் நீராடி சிவனாரை வழிபட்டுவிட்டு தொடர்ந்து பயணப்படலாம் என்று தீர்மானித்தார். அவர் நீராடிக் கரையேறியபோது சிவாலயத்தில் பூஜை செய்யும் சாந்தன் என்ற அன்பர் எதிர்ப்பட்டார். அவர் சிவசர்மர் குறித்து விசாரிக்க, இவரும் தன் விருப்பத்தையும் பயணம் குறித்தும் விவரித்தார். அத்துடன் பொன்முடிப்பைச் சாந்தனிடம் ஒப்படைத்து, `அகத்தியரை தரிசித்துவிட்டு திரும்பும்போது பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்.

நீண்டநெடுந்தூரம் காடு, மலைகள் கடந்து பயணித்தார் சிவசர்மர். கள்ளும் முள்ளும் காயப்படுத்தியதால் மேலும் ஓர் அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலையில், முதுமையின் இயலாமையும் சேர்ந்துகொள்ள துவண்டு சரிந்தார் சிவசர்மர். கண்களில் நீர் பெருக, தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கியவர், மனதில் அகத்தியரை தியானித்தார். ``குருவே துணை!’’ என்று வேண்டி துதித்தார்.

அப்போது எதிரில் வேதியர் ஒருவர் வந்தார். சிவசர்மரின் விருப்பத்தைக் கேட்டறிந்தவர் ``நீர் இருக்கும் நிலையில் இயலும் காரியமா அது. அகத்தியரை மறந்துவிடும். முயற்சியைக் கைவிடும். அருகில் எங்கேனும் சிகிச்சை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியைப் பாரும்!’’ என்றார்.

சிவர்மர் கடும் கோபம் கொண்டார். ``என் உயிரே போனாலும் அகத்தியரை தரிசிக்காமல் திரும்பமாட்டேன்’’ என்றார் ஆவேசத்துடன். தொடர்ந்து கண்களை மூடி மீண்டும் அகத்தியரையே வணங்கினார். அப்போது அந்த இடத்தில் பேரிறைச்சல் கேட்டது. திடுக்கிட்டு கண்விழித்தார் சிவசர்மர். எதிரில் வேதியர் இல்லை; சாட்சாத் அகத்திய முனிவரே நின்றிருந்தார். பரவசம் அடைந்தார் சிவசர்மர். குருவை குறுமுனியைப் பலவாறு போற்றி வணங்கினார்.

அகத்தியர் அவருக்கு அருள்புரிந்தார். அருகிலிருந்த ஒரு பொய்கையைச் சுட்டிக்காட்டி, ``சிவசர்மரே இந்தப் பொய்கை மகிமை மிக்கது. இதோ இந்த விளக்கைப் பிடித்துக்கொண்டு அந்தப் பொய்கையில் மூழ்கி எழுக!’’ என்றார். அத்துடன் சிவசர்மர் சிரமமின்றி பொய்கைக்குச் செல்லவும் அருள்பாலித்தார்.

குருவருளில் மூழ்கித் திளைத்த சிவ சர்மர், அந்தக் குருவின் ஆணைப்படி புண்ணியப் பொய்கையிலும் மூழ்கி எழுந்தார். எழுந்தவர் நீர்ப் பரப்பில் தன் உருவ பிம்பத்தைக் கண்டு முதலில் அதிர்ந்தார்; பிறகு ஆனந்தித்தார். ஆம்! முதுமை நீங்கி இளமையுடன் திகழ்ந்தார் சிவசர்மர். மீண்டும் அவருக்குக் காட்சி தந்த அகத்தியர், ``சிவப் புண்ணியம் பெருகட்டும்’’ என்று ஆசி கூறி மறைந்தார்.

குருவின் தரிசனத்தாலும் அவர் கொடுத்த வரத்தாலும் பெரும்பாக்கியம் பெற்ற சிவசர்மர் மீண்டும் தாமிரபரணிக் கரையில் தான் வழிபட்ட சிவாலயத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கேயும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அதன் காரணமாக அந்தத் தலத்து இறைவனுக்கும் எரிச்சாளுடையார் எனும் திருப்பெயர் வாய்த்தது. சிவசர்மருக்குக் கிடைத்த குருவருளே சிவபெருமானின் திருவருள் கைகூடவும் துணை செய்தது எனலாம்.

ஆம்! பொதிகை தீரமெங்கும், பொதிகையில் பிறந்து நதியாய் தவழ்ந்து தரணியைச் செழிக்க வைக்கும் பொருநையின் கரையெங்கும் அகத்தியரின் திருவருள்கடாட்சம் நிறைந்து திகழ்கிறது. இந்தப் பகுதியில் அகத்தியருக்கும் அற்புத தரிசனம் கிடைத்த ஒரு தலம் உண்டு.

சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைக் காண பெருங்கூட்டம் கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த கதையும், உலகைச் சமன் செய்ய அகத்தியரை தென்னகம் செல்லும்படி இறை ஆணையிட்ட திருக்கதையையும் நாம் அறிவோம்.

அதன்படி தென்னகம் வந்த அகத்தியர் பொதிகையில் காரையார் எனும் பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஒருநாள் அவர் யோக நித்திரையில் இருந்தபோது, பிரகாசமான பெரும் ஜோதி ஒன்றை தரிசித்தார். அது என்னவென்று அறியும் நோக்குடன் இறை வனைப் பிரார்த்தித்து ஞானதிருஷ்டியில் காரணம் அறிய முனைந்தார்.

விளைவு... பேரானந்த அருள்காட்சியை தரிசித்தார். லோகமாதா, பேச்சி முதலான தெய்வங்களுடன் தர்ம சாஸ்தா சிவபெருமானை வழிபடும் அற்புதத்தை தரிசித்து மகிழ்ந்தார்.

அன்று மிகவும் புண்ணியமான நாள். ஆடி அமாவாசை. இந்தத் தினத்தில், இந்த இடத்துக்கு வந்து வழிபடும் மக்களுக்கு சகல நன்மைகளையும், அவர்கள் கேட்கும் வரங் களையும் வாரி வழங்க வேண்டும் என்று மகா சாஸ்தாவைப் பிரார்த்தித்தார். சாஸ்தாவும் ``அப்படியே ஆகட்டும்’’ என்று அருளினார். தேவர்கள் மலர் மாரிப் பொழிந்தனர். அற்புத மான அந்த இடம் இன்றைக்கும் பிரசித்திபெற்ற புண்ணியத் தலமாகத் திகழ்கிறது.

ஐயனாருடன், விநாயகர், மகாலிங்கம், காத்தவராயன், பட்டவராயன், சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் ஆகிய பரிவார தெய்வங்களும் அருளும் இந்தத் தலம் எது, எங்குள்ளது தெரியுமா? சிவசர்மருக்குச் சிவனருள் கைகூடியது என்று பார்த்தோமே அந்தத் தலத்தின் மகிமை என்ன? அகத்தியரின் அருளோடு அனைத்தையும் விரிவாக அறிவோம்!

- பயணிப்போம்...



மூவகை நண்பர்கள்!

நமக்கு அமையும் நண்பர்களை மூவகையாகப் பிரித்து மூன்று மரங்களை உவமைகாட்டி விளக்குவார் வாரியார் சுவாமிகள். அவை பனை, தென்னை, பாக்கு மரம்.

பனை மரம் தானே தண்ணீர் உறிஞ்சி, தானாகவே வளர்ந்து நமக்கும் பலன் அளிக்கும். நண்பர்கள் சிலர் இப்படித்தான். தாமாகே முன்வந்து நமக்கு உதவி செய்வார்கள்.

தென்னை: எப்போதாவது தண்ணீர் உற்றினாலும் போதும்; அது வளர்ந்து நமக்கும் நன்மை பயக்கும். அப்படித்தான் சிலர், எப்போதோ நாம் செய்த உதவியை மனதில் கொண்டு, நமக்குத் தேவைப்படும் தருணத்தில் உதவி செய்வார்கள்.

பாக்கு மரம் தினமும் தண்ணீர் உற்றினால்தான் செழித்து வளரும். நண்பர்கள் சிலரும் அடிக்கடி நாம் உதவி செய்தால் மட்டுமே நம்மை நினைவில் வைத்திருப்பார்கள்!

- எம்.கார்த்திகேயன், முசிறி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism