
தைப்பொங்கல் தரிசனம்
சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத் தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் சூரியன் எழுந்தருளி உள்ளார். இந்த ஆலயங்களின் மகிமை குறித்து காசி காண்டம் விவரிக்கிறது.

லோலார்க்கர்: பிரசித்திப் பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது இவரின் ஆலயம். இங்குள்ள குளத்தில் நீராடி லோலார்க்கரை வழிபடுவதால் மனச் சஞ்சலங்கள் நீங்கும்.
உத்திர அர்க்கர்: காசிக்கு வடக்கே ‘அலேம்புரா’ எனும் இடத்தில் உள்ள சூரிய தீர்த்தமே உத்திர அர்க்க குண்டம். இதன் அருகில் அருள்பவர் உத்திர அர்க்கர். ஆடு வழிபட்டு அருள்பெற்றதால் இதை வக்ரியா குண்டம் என்றும் சொல்வர் (வக்ரி-ஆடு).
ஸாம்பாதித்யர்: கண்ணனின் மகன் சாம்பன் வழிபட்ட சூரியன். இவரது ஆலயம், விஸ்வநாதர் கோயிலுக்கு மேற்கே உள்ளது.
திரௌபதி ஆதித்யர்: இவரது ஆலயம், விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில், அட்சய பீடத்தின் கீழ் உள்ளது. இவரின் அருளால் திரெளபதி அட்சயபாத்திரம் பெற்றதாகக் கூறுவர்.
மயூகாதித்யர்: இவர் ‘பஞ்ச கங்காகாட்’ அருகிலுள்ள மங்கள கௌரி கோயிலில் காட்சி தருகிறார். இவரின் தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமானால் `மயூகன்' என்று பெயர் சூட்டப்பட்டாராம்.
கஷோல்கா ஆதித்யர்: கருடனும் அவரின் தாய் விநதையும் வழிபட்ட சூரியன் இவர். புகழ்பெற்ற திரிலோசனர், காமேஸ்வரர் ஆலயப் பிராகாரத்தில் எழுந்தருளி உள்ளார்.
அருணாதித்யர்: இவர் திரிலோசனர் ஆலயத்தில் அருள்கிறார். கருடனின் சகோதரன் அருணனுக்கு அருளி, அவரைத் தன் சாரதியாக ஏற்றுக்கொண்ட மூர்த்தி இவர். அருணோதய காலத்தில் இவரைத் தியானித்து வழிபடுவது சிறப்பு.
விருத்தாதித்யர்: மீர்காட் எனும் இடத்தில் எழுந்தருளியுள்ளார். வேதங்களில் தேர்ந்த `விருத்தன்’ என்பவர், இந்தச் சூரியனை வழிபட்டு குன்றாத இளமையைப் பெற்றாராம்.
கேசவாதித்யர்: இவர், வருணா சங்கமத்தில் உள்ள கேசவர் கோயிலில் எழுந்தருளியுள்ளார். கேசவனாகிய திருமாலின் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால், இவருக்கு இந்தப் பெயர்.
விமலாதித்யர்: கதோலியாவுக்கு அருகே ஜங்கம்பாடியில் இவரை தரிசிக்கலாம். விமலன் என்ற பக்தரின் குஷ்டநோய் நீங்கிட அருள்பாலித்தவர். இவரைத் தரிசித்தால் பிணிகள் நீங்கும் என்பர்.
கங்காதித்யர்: பகீரதன், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தபோது, தானும் காசிக்கு வந்து கங்கைக் கரையில் தங்கிய சூரியன் இவர். காசியில் `லலிதா காட்' எனும் இடத்தில் கோயில் கொண்டுள்ளார்.
யம ஆதித்யர்: சூரிய தேவரின் புதல்வனான யம தர்மன் காசியில் தந்தையின் அருள்பெற்ற இடம் சங்கடா காட். ஆயுள் பலம் தருபவர் யம ஆதித்யர்.
காசிக்குச் செல்லும் அன்பர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த 12 சூரியர்களையும் வழிபடுவது விசேஷம் என்கிறார்கள்.
- கே.தங்கம், சென்னை-4