
சி.கீதா, சென்னை-5
வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முடிந்து பிரதமை நாளில் தொடங்கப்படும். அன்று தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை நன்னாளாகவும் அமையும். இந்த நவராத்திரி ஒன்பது நாள்கள் கொண்டாப்பட்டு, நவமி நாளான ஶ்ரீராம நவமியுடன் நிறைவு பெறும். இந்த ஆண்டு 13.4.21 அன்று தொடங்கும் இந்த விழா 21.4.21 வரை நடைபெற உள்ளது.

இந்த வசந்த நவராத்திரி வழிபாடு, வாழ்வில் எல்லா வளங்களையும் அளிக்க வல்லது என்கின்றன ஆன்மிக நூல்கள். வசந்த நவராத்திரியில் அம்பாளுக்குச் செவ்வரளி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி ஆராதனைகளைச் செய்து வழிபட்டால், நோய்கள் யாவும் நீங்கும், சகல சம்பத்துகளும் பொங்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் இந்த விசேஷ நாள்களில் வீட்டில் அம்பிகையை ஆவாகனம் செய்து, சித்ரான்னங்கள் படைத்து, தேவி துதிப் பாடல்களைப் பாராயணம்செய்து வழிபடுவது நன்று. இதனால் கல்யாண வரமும், மாங்கல்ய பலமும் கிட்டும்.
ஶ்ரீராமன் வசந்த நவராத்திரி வழிபாட்டை அனுசரித்து, சீதாதேவி இருக்கும் இடத்தை அறிந்தார் என்கிறது தேவி பாகவதம். இந்த வசந்த நவராத்திரி நாள்களில் லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜையும் செய்வது சகல நன்மைகளையும் அருளும்