Published:Updated:

தொட்டதைத் துலங்க வைக்கும் வாஸ்து நாள்... உங்கள் கட்டட வேலையை ஆரம்பிக்கச் சரியான நேரம் எது?

ஐப்பசி 11-ம் தேதி நாளை வாஸ்து தினமாக வர உள்ளது. இந்த நாளில் நாம் செய்யவேண்டியது என்ன?

அந்தகாசுரன் ஈசனோடு போர் புரியும்போது தோன்றியவன் வாஸ்து. அளவில்லாத ஆற்றல் கொண்ட இந்த வாஸ்துவால் தீமை உண்டாகக் கூடும் என்று எண்ணிய தேவர்கள் அவனை பூமியில் உறக்கத்தில் ஆழ்த்தினார்கள். ஆண்டுக்கு 8 நாள்கள் அதிலும் ஒன்றரை மணி நேரம்தான் விழித்திருக்க அவனுக்கு வரம் அளித்தார்கள் அஷ்ட திக்கு பாலகர்கள். அந்த ஒன்றரை மணி நேரத்திலும் இறுதி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை, வாஸ்து பூஜைகள் செய்வதற்கு உகந்த நேரமாக மாற்றினார்கள் தேவர்கள். இந்த நேரமே வாஸ்து பகவான் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் என்கிறார்கள். அதனால் இந்த நேரத்தில் பூமி பூஜையைத் தொடங்கி வழிபட்டால் அந்த வீடு, தொழில் இடம், தோட்டம், அலுவலகம் யாவும் விருத்தி அடையும் என்று சொல்லப்படுகிறது.
வாஸ்து பகவான்
வாஸ்து பகவான்

வாஸ்து பகவான் கண் விழித்து அருளும் நாளும் நேரமும்:

சித்திரை 10-ம் தேதி காலை 8.54 மணி முதல் 9.30 மணிவரை.

வைகாசி 21-ம் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை.

ஆடி 11-ம் தேதி காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை.

ஆவணி 6-ம் தேதி பகல் 3.18 மணி முதல் 3.54 மணி வரை.

ஐப்பசி 11-ம் தேதி காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை.

கார்த்திகை 8-ம் தேதி 10.54 மணி முதல் 11.30 மணி வரை.

தை 12-ம் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை.

மாசி 22-ம் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை.

அதன்படி ஐப்பசி 11-ம் தேதி நாளை வாஸ்து தினமாக வர உள்ளது. 28-10-21 தினமான நாளை காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை அற்புதமான நேரமாக இருப்பதால் அப்போது புதிய கட்டட வேலைகளைத் துவங்கலாம். புதிய அலுவலகம், வணிகக் கடை துவங்கலாம்.

Vasthu  |வீடு கட்டும் நிலம் நன்னிலமா... மென்னிலமா... வன்னிலமா... அறிவது எப்படி?| Sumathi Sri| வாஸ்து
வாஸ்து - வீடு கட்டுதல்
வாஸ்து - வீடு கட்டுதல்

வாஸ்து என்பது ஒரு மனையில் கட்டடம் கட்டுவதற்கு உரிய முறைகளையும், தத்துவங்களையும் விளக்கும் பாடமே என்கிறார்கள் ஆன்றோர்கள். அதனால் இதில் பயப்படும்படியான எந்த விஷயமும் இல்லை என்பதே இந்த துறை வல்லுநர்கள் கூறும் கூற்று. வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் மண்ணின் தன்மை, நீரோட்டம் எப்படி, காற்றோட்டம் எப்படி, ஒளி விழும் அமைப்பு எப்படி என்று பஞ்ச பூதங்களின் அமைப்பை அலசும் அறிவுசார் ஆலோசனையே வாஸ்து சாஸ்திரம் எனப்படுகிறது. கட்டப்படும் மனை அங்கு வசிப்பவர்களுக்கு வளர்ச்சியை உண்டாக்குமா என்பதை கணித்துக் கூறுவதே வாஸ்து சாஸ்திரம். மற்றபடி வாஸ்து பொருள்களை வைப்பது எல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயமே எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதர்வண வேதத்தில் இருந்து தொடங்கிய இந்த வாஸ்து சாஸ்திரம், வராஹமிஹிரர், மயன், விஸ்வகர்மா போன்ற தலை சிறந்த ஞானியர்களால் பல்வேறு சாஸ்திர நூல்கள் வழியே வளர்ச்சி பெற்றது என்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து புருஷ மண்டலம் என்பது முக்கியமானது என்பர். அதாவது நாம் கட்டவிருக்கும் மனையை சதுரமாக எண்ணி, அந்த சதுர வடிவத்தை 64 அல்லது 81 சதுர கட்டங்களாகப் பிரிப்பார்கள். இந்த ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் அதிபதிகளாக இருப்பார்கள் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த சதுர மண்டலத்தின் மத்தியில் பிரம்ம தேவன் அதிபதியாக இருக்கிறார். இப்படி ஒவ்வொரு தேவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மனையை கட்டடமாக்கும் பணிக்கு உதவுவதே வாஸ்து சாஸ்திரம் எனப்படும்.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

ஒரு நிலம் கூட உயிர்ப்பு சக்தி கொண்ட ஒரு வஸ்துவே என்பது நம் அடிப்படை கொள்கை. அந்த சக்தியை மேம்படுத்தி அங்கு வாழும் மனிதர்களுக்கு நன்மையைத் தேடித் தரும் பணியைச் செய்வதே வாஸ்துவின் முக்கிய பணி எனலாம். காற்றோட்டமும் வெளிச்சமும் நெகிழ்வில்லா மண் அமைப்பும் நீரோடும் அமைப்பும் கொண்டதே நல்ல வீடு எனப்படும். இதை செவ்வனே செய்து தருகிறது வாஸ்து சாஸ்திரம். கதவு இந்த பக்கம் இருக்க வேண்டும், ஜன்னல் இந்த அளவுக்கு இருக்க வேண்டும், சுற்றுச் சுவர் இப்படி அமைய வேண்டும், வெப்பம் வெளியாகும் சமையல் அறை இங்கே அமைய வேண்டும் என்று வாஸ்து விதித்திருப்பதன் நோக்கம், அங்கு வாழுபவர் நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கே.

எனவே திசைகளை அறிந்து, அங்கு அமைந்திருக்கும் பஞ்ச பூதங்களின் தன்மை உணர்ந்து உங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்வது உன்னதம். இதற்கு வாஸ்து நமக்கு வழிகாட்டுகிறது என்பது உண்மை. மற்றபடி வாஸ்து பரிகாரங்கள், வாஸ்து பொருள்கள் என்பதை எல்லாம் சாஸ்திரங்கள் வலியுறுத்தி சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அஷ்ட திக்கு பாலகர்
அஷ்ட திக்கு பாலகர்

நாளை புதிதாக வாஸ்து பூஜை செய்பவர்கள் கணபதியை தொழுது பூமி பூஜையை ஆரம்பியுங்கள். உங்கள் குலதெய்வத்தையும் அஷ்ட திக்கு பாலகர்களையும் வணங்கி உங்கள் கட்டட வேலையைத் தொடங்குங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்புங்கள்! கட்டவிருக்கும் மனையின் வடகிழக்கு மூலையில் பூமி பூஜை செய்யுங்கள். அங்கு மூன்றுக்கு மூன்றடி பள்ளம் தோண்டி, அதில் புதிதாக மண் கொண்டு நிரப்புங்கள். அதில் ஓர் அடி குழி எடுத்து புண்ணிய தீர்த்தத்தை ஊற்றி வணங்குங்கள். அங்கு 3 அல்லது 5 செங்கல் நட்டு வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமத் திலகம் இடுங்கள். ஒன்பது நவதானியங்களை தூய வெள்ளைத் துணியில் முடிச்சிட்டு வைத்து வணங்குங்கள். இதுவே பூமி பூஜை என்கிறது சாஸ்திரம்.

இந்த வாஸ்து பூஜையை வாஸ்து நேரத்தில் கடைசி 36 நிமிடத்துக்குள் செய்து முடித்து விடுங்கள் என்கிறது வாஸ்து சாஸ்திரம். நம்பிக்கை இருப்பின் ஒரு தகுந்த வாஸ்து ஆலோசகரிடம் அறிவுரை கேட்டு உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு