Election bannerElection banner
Published:Updated:

வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்!

வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்

வேலவனுக்கு மூன்று சக்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலாயுதம். வேல் என்ற சொல் ‘வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

வேலாயுதப் பெருமானின் வேலானது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ‘பஞ்ச கிருத்தியம்’ (ஐந்து தொழில்களை) செய்யும் ஆற்றல் உடையது.

முருகன்
முருகன்

வேல் வினைகளை வேரறுக்க வல்லது. ‘வேலுண்டு வினையில்லை’ என்பது அருளாளர் வாக்கு. ‘அச்சம் அகற்றும் அயில்வேல்’ எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். ‘வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும் ‘வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் போற்றுகின்றன.

வேலவனுக்கு மூன்று சக்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்று இச்சா சக்தி; இரண்டாவது கிரியா சக்தி; மூன்றாவது ஞான சக்தி. இதில், இச்சா சக்தி வள்ளி என்றும், கிரியா சக்தி தேவசேனா என்றும், ஞான சக்தி வேல் என்றும் கூறப்படுகிறது. இதில், ஞான சக்தியான வேலின் அருளைப் பெறவேண்டித்தான் வேல்மாறல் பாராயணம் செய்யப்படுகிறது. அதுமட்டுமா? வேலுக்கு வினைதீர்க்கும் ஆற்றல் உண்டு.

முருகன்
முருகன்

வாழ்வில் தீர்க்க முடியாத சங்கடங்கள், கடன் தொல்லை, மனத்தையும் உடலையும் வாட்டும் பிணிகள், நல்லதொரு வேலை வாய்க்காமை, கல்யாணத் தடைகள், தம்பதியிடையேயான மனப் பிணக்குகள், குழந்தைச் செல்வம் இல்லாமை... இப்படியான சகல பிரச்னைகளையும் அவற்றுக்குக் காரணமான முன்வினைகளையும் களைந்து நல்வாழ்வுக்கு வரம் தரும் வல்லமையும் உண்டு முருகன்கை வேலாயுதத்துக்கு.

இத்தகு மகிமைகள் கொண்ட வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச்செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு அமைத்து வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வரம்பெற்று வருகிறார்கள்.

வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்

மனித மனங்களைப் பீடித்துள்ள அனைத்துத் தீவினைகளும் தீர, இந்த வேல்மாறல் பாராயணத்தை தினந்தோறும் நிகழ்த்தவேண்டும். ஒரு மண்டல காலம் வேல்மாறல் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும்; தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். இதை ஆண் பெண் மற்றும் சாதி மத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதைப் பாராயணம் செய்வதால் மன உறுதி, மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

கூட்டுப் பிரார்த்தனைக்குப் பலன் அதிகம் என்பார்கள். இதை கவனத்தில் கொண்டு, சக்தி விகடன் வாசகர்களும் அடியார்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும், சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்வில் சிறந்தோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடியார்களுடன் இணைந்து, மிகச் சிறப்பான முறையில் வேல்மாறல் பாராயணம் நிகழ்த்த ஏற்பாடு செய்துள்ளது, திருப்பூர் குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக்குழு. வரும் 16.2.2020 ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பூர்-கொங்கணகிரி முருகன் கோயிலில், திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் வேல்மாறல் பாராயணத்தை நிகழ்த்தவுள்ளார். வேண்டும் வரங்களை வேண்டியபடி விரைவில் அருளும் இந்த அற்புத வைபவத்தில் வாசக அன்பர்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு மால்மருகனின் திருவருளுக்குப் பாத்திரமாகலாம்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு (கட்டணம் கிடையாது) செய்துகொள்வது அவசியம். முன்பதிவு மற்றும் மேலான விவரங்களுக்கு: 99401 11356.

வினைகள் தீர்க்கும் ‘வேல்மாறல் பாராயணம்’ - முன்பதிவுக்கு : https://forms.gle/qpxXng4YScWzTuk19

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு