Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 9

வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபிரம்மேந்திரர்

பாபா மாமி ரமா சுப்ரமண்யம்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 9

பாபா மாமி ரமா சுப்ரமண்யம்

Published:Updated:
வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபிரம்மேந்திரர்

காலக்ஞானம் எனும் மிக அற்புதமான நூலின் விளக்கங்களை ஸ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமிகளிடமே முதன் முதலாக கேட்கும் பெரும் பேறு அச்சம்மாவுக்குக் கிடைத்தது. யாகந்தி கிராமத்தில் அவருக்குக் கிடைத்த ஞான உபதேசம் தொடர்ந்தது. உபதேச விளக்கங்கள் குறித்து நாமும் படித்தறிவோம்.

`விஜயநகரம் முதலான பல பேரரசுகள் அழிந்துபோகும். அந்நியர்கள் ஆதிக்கத்தால் நம் தேசத்துக் கோயில்களின் செல்வங்கள் கொள்ளை போகும். புண்ணிய க்ஷேத்திரமான காசி தொடர்ந்து 40 நாள்களுக்கு பவித்திரமற்ற தன்மையை அடையும். (முகலாயர் படையெடுப்பால் தொடர்ந்து பல நாள்கள் காசி நகரமும், ஆலயங்களும் பல இடர்ப்பாடுகளைச் சந்தித்தன; பூஜை, வழிபாடுகள் முறையாக நிகழ்த்தப்படவில்லை.)

திரையில் தோன்றும் பிம்பங்களின் நிஜ உருவங்கள், ஆட்சி பீடத்தில் அமர்ந்து செல்வாக்கு பெறும் என்பது சுவாமிகள் அருளிய தீர்க்கதரிசனம். 13-ம் நூற்றாண்டில் திரைப்படம் என்ற சிந்தனைகூட எவரிடத்திலும் இல்லை. அக்காலத்திலேயே, திரையில் தோன்றும் பிம்பங்களின் உருவங் களே அனைவரையும் ஆட்சிசெய்யும் என்பதையும் காலக்ஞானி கணித்தார்!

மகாபாரதப் போரைப் போன்று இவ்வுலகில் மூன்று உலகப்போர்கள் நடைபெறும். நவீன ஆயுதங்களின் தாக்குதலால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிவார்கள். ஸ்வாமி கூறியபடியே இரண்டு உலகப்போர்களின் தாக்கத்தையும் நிகழ்ந்த அழிவுகளையும் நாம் அறிவோம். அதேபோல் மூன்றாவது உலகப் போரும் நிகழும். அதற்கு மதவாத பிரிவினை சக்திகளே காரணமாக இருக்கும் என்றும் ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கார்த்திகை பகுள துவாதசி நாளன்று வடக்குத் திசையில் 25 நாள்களுக்கு, நட்சத்திரங்கள் நான்கு முகங்களுடன் காட்சி அளிக்கும். கோதாவரி நதி தொடர்ந்து 12 நாள்கள் வறண்டுபோகும். பின்னர் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும். கலியுகத்தின் முடிவில் புனித மான கங்கை நதி வறண்டு போகும்.

காலக்ஞானம்
காலக்ஞானம்


இடைவிடாமல் பெய்யும் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சைலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த மலைகளின் பாறைகள் சரிந்து கீழே விழும். ரத்த மழையும் அமில மழையும் பெய்யும். வளி மண்டலத்தின் மாசுக்கள் சூழும்; ஆகாயத்திலிருந்து புகையும் நெருப்பும் வெளிப்படும். வேப்ப மரத்திலிருந்து இனிய சுவையும், நறுமணமும் கொண்ட பூக்கள் பூக்கத் தொடங்கும். பிறந்த குழந்தைகளும் உடனடியாக பேசத் தொடங்கும்.

காளஹஸ்தீஸ்வரர் ஆலய வாசலில் அமைந்திருக்கும் துவார பாலகர் சிலைகள் உயிர் பெற்று தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் நிலையும் குறிப்பிட்ட நாளில் நிகழும். திருப்பதி வேங்கடாசலபதி ஸ்வாமியின் வலது தோள் பகுதி நடுங்கத் தொடங்கும். திருப்பதி முதலான பிரசித்திபெற்ற ஆலயங்கள் சிலகாலம் மூடப்படும்; தரிசனமும் தடை செய்யப்படும்.

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மனின் திருவுருவத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். இந்தச் சகுனம் கலியுகத்தின் முடிவை பறைசாற்றும்.

புனித கிருஷ்ணா நதிக்கும் கோதாவரி நதிக்கும் இடையில் உள்ள பகுதியில், பசுக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நதியில் விழுந்து உயிரைத் தியாகம் செய்யும்.

கலியுகத்தின் இறுதியில் இரவு நேரத்தில் ஆகாயவெளியில்... ஆலய மணிகள் ஒன்றிணைந்து ஒலிப்பது போன்று பெரும் ஓசை கேட்க ஆரம்பிக் கும். இந்த ஓசை தொடர்ந்து பல மணிநேரங்கள் நீடிக்கும்.

எல்லோருமே அடுத்தவரின் பொருளை திருடுவதிலேயே குறியாக இருப்பார்கள். போதும் என்ற மனது எவரிடமும் இருக்காது. கலியுகத்தின் இறுதியில் புண்ணியம் செய்தவர்களும், தூய உள்ளம் கொண்டவர்களும் மட்டுமே பூமியில் வாழ்வார்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை அச்சம்மாவிடம் விவரித்த வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள், “தாயே! கலியுகத்தின் நிறைவில் மகா விஷ்ணுவின் அவதாரம் நிகழும் வரையிலும், மேற்கூறிய துர்சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனினும், என் பக்தர்களுக்கு எவ்வித துன்பமும் நேராமல் காக்கவேண்டியது என் பொறுப்பு. வாழைப்பழத்தின் தோலை உரிப்பது போல், பக்தியைத் தவிர வேறு எவ்வித கடின முயற்சியும் இன்றி என் பக்தர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.

என் மீது நம்பிக்கை கொண்டவர்களும், என்னால் இயற்றப்பட்ட காலக்ஞானத்தை பக்தியுடன் தாமும் படித்து, பிறருக்கு எடுத்துரைப்பவர்களும் எட்டு விதமான ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். எவரொருவர் என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ, அவர் பிரம்மத்துவத்தை அடைவார்’’ என்று அருள்பாலித்தார்.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திர ஸ்வாமிகளின் இந்த உபதேசங்களைக் கேட்கும் பாக்கியம் பெற்றதால், மிகவும் மனம் மகிழ்ந்தார் அச்சம்மா; ஸ்வாமிகளை வணங்கித் தொழுதார்!

இந்த நிலையில்தான், பிரம்மதேவரின் அம்சமான அனஞ்ஜயா என்ற தவ சீலர், சமூக நன்மைக்காக வீரபிரம்மேந்திர ஸ்வாமியைத் தேடி வந்தார். அப்போது ஸ்வாமிகள் ஹரிஹரபுரத்தில் இருந்தார்.

தவசீலரான அனஞ்ஜயா பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டு ஹரிஹரபுரத்தை அடைந்தார். அவ்வூரின் எல்லையைத் தாண்ட நினைத்த அவருடைய கால்களை, ஏதோ ஒரு சக்தி தடுப்பதைப் போல உணர்ந்தார். தம்மையும் அறியாமல் தொடர்ந்து நடந்தவர், வீரபிரம்மேந்திர ஸ்வாமி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததும், ``குழந்தாய்! உனக்கு என்ன வேண்டும்?’’ எனக் கேட்டார் சுவாமி வீரபிரம்மேந்திரர்.

அனஞ்ஜயா ஸ்வாமிகளிடம், “ஸ்வாமி! இவ்வுரைத் தாண்டி என்னால் பயணிக்க இயலவில்லை. ஏதோ ஓர் அற்புத சக்தி என்னை தங்களிடம் இழுத்து வந்ததாகவே உணர்ந்தேன். இதற்கான காரணம் என்ன? ஊருக்குள் பலரும் நீங்கள் வருங்கால நிகழ்வுகளை காலக்ஞானம் என்ற பெயரில் எழுதுவதாகத் தெரிவித்தனர். அதுபற்றியும் அறிய ஆவலாக இருக்கிறேன்’’ என்றார்.

அனஞ்ஜயாவை ஒரு விநாடி உற்று நோக்கினார் வீரபிரம்மேந்திரர். பின்னர், தனது ஞான திருஷ்டியால் வந்திருப்பது யார் என்பதை அறிந்து அளவு கடந்த ஆனந்தம் கொண்டார்.

“அனஞ்ஜயா! நீ யார் என்பது உனக்குத் தெரியுமா? பிரம்மதேவரின் அம்சமான நீ, சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு என்னைத் தேடி வந்துள்ளாய். நான் நிச்சயமாக உனக்கு காலக்ஞான உபதேசத்தை அளிக்கிறேன்’’ என்று கூறி, வருங்காலத்தில் நிகழப்போகும் பயங்கர நிகழ்வுகளை அனஞ்ஜயாவுக்கும் எடுத்துரைத்தார்!

ஸ்வாமியாலும் அவரின் காலக்ஞான நூலாலும் மகிமை பெற்றது ஹரிஹரபுரம். அவ்வூர் மக்கள், ஸ்வாமி எழுதிய ஓலைச்சுவடிகளை ஒரு பாத்திரத்தில் இட்டு மண்ணால் மூடி, பாதுகாத்து வைத்தனர். சில நாள்களில் அதன் மேல் ஒரு புளிய மரக் கன்று துளிர்க்க ஆரம்பித்தது.

அது வளர்ந்து மரமானதும் அந்தப் புளிய மரத்தைச் சுற்றிலும் ஸ்வாமிக்காக ஒரு மடத்தைக் கட்டினார் அச்சம்மா. இன்றளவும் அந்தப் புளியமரம் சுமார் ஐம்பது அடி உயரத்தில் கம்பீரமாக ஸ்வாமியின் மகத்துவத்தைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism