திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 10

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

ஓவியங்கள்: ஜீவா

வீரபிரம்மேந்திர ஸ்வாமியாலும் அவர் அருளிய காலக்ஞான நுலாலும் மகிமை பெற்றது ஹரிஹரபுரம்.

அவ்வூர் மக்கள் காலக்ஞானம் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை ஒரு பாத்திரத்தில் இட்டுவைத்து, மண்ணால் மூடி பாதுகாத்து வைத்தனர். சில நாள்களில் அதன் மீது புளிய மரக் கன்று ஒன்று துளிர்க்க ஆரம்பித்தது.

கடந்த 700 வருடங்களாக பொலிவுடன் விளங்கும் இந்தப் புளிய மரம் இரண்டு பகுதி களாகப் பிரிந்து காணப்படுகிறது. வசந்த காலத்தில் பசுமையுடன் திகழும் இந்த மரத்தின் அடிப்பாகத்தின் சுற்றளவு, ஒரு கஜத்துக்கும் அதிகம். இதன் பழங்களின் உள்பாகம் முழுவதும் கரிய வண்ணத்தில் காணப்படுவதால், உண்பதற்கு ஏற்றதல்ல!

ஸ்ரீவீரபிரம்மேந்திரரின் அம்சமாகவே இந்தப் புளிய மரத்தைப் போற்றுகிறார்கள் பக்தர்கள். இந்த அற்புத மரமானது, இயற்கையின் சீற்றங் களால் விளையும் விபரீதங்களை, அவை நிகழ்வதற்கு முன்னதாகவே சில குறிப்புகளின் மூலம் முன் அறிவிப்பு செய்கிறதாம்.

புயல், வெள்ளம் முதலான பெரும் சீற்றங்கள் ஏற்படப் போகின்றன என்றால், முன்னதாக இரவு நேரத்தில் தனது இலைகள் முழுவதையும் உதிர்த்து விடுகிறதாம் இந்தப் புளிய மரம். அதேபோல், பயங்கர தொற்று வியாதிகள் ஏற்படுவதற்கு முன், இம்மரத்தின் நடுவில் அமைந்துள்ள இரண்டு கிளைகளின் இலைகள் மட்டும் இரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்குமாம். உள்ளூர் வாசிகள், இன்றைக்கும் இந்த மரத்தின் மகிமையைச் சிலாகிக்கிறார்கள்!

இனி, ஸ்வாமிகளின் அற்புதங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

அச்சம்மா, வீரபிரம்மேந்திர ஸ்வாமியிடம் ஞானத்தைத் தவிர வேறு எதையும் தனக்காக வேண்டியதில்லை. ஒருநாள் அச்சம்மாவின் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. அன்று அதுகுறித்து ஸ்வாமிகளிடம் கூறுவதற்கான சந்தர்ப்பத்தை, ஸ்வாமி அருளியதாகவே எண்ணினார்.

ஆகவே ஸ்வாமிகளிடம் சென்று, “ஸ்வாமி! இத்தனை நாட்களாக தங்களிடம் எனது குறையைப் பற்றி கூறவேண்டும் என்று நினைக்க வில்லை. ஆனால், இப்போது கூறவேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு வாரிசு என்று சொல்லிக்கொள்ள ஒரு புதல்வன் உள்ளான். ஆனால் அவனுக்குக் கண் பார்வை இல்லை. அவனுடைய வருங்காலத்தை எண்ணி கவலையாக உள்ளது” என்றார்.

அதைக் கேட்டு வீரபிரம்மேந்திர ஸ்வாமி புன்னகையுடன், “தாயே! நான் தங்கள் மகனைக் குறித்து நன்கு அறிவேன். நீங்கள் அவனைப் பற்றி கவலைகொள்ள தேவையில்லை. இந்த உலகத்தைப் பார்க்கும் அதிர்ஷ்டம் நிச்சயம் அவனுக்கு உள்ளது. நாளை மறுநாள் அவனை என்னிடம் அழைத்து வாருங்கள்’’ என்று கூறிவிட்டு, நித்ய வழிபாடுகளைச் செய்ய பூஜை அறைக்குச் சென்றுவிட்டார் ஸ்வாமி.

அவர் குறிப்பிட்டிருந்த நாளில் மகனை அழைத்து வந்து வீரபிரம்மேந்திரரை தரிசிக்க வைத்தார் அச்சம்மா.

அந்தப் பிள்ளயைப் பார்த்த வீரபிரம்மேந்திரர், ``தாயே! தங்களின் புத்திரன் இவன்தானா? இந்தக் குழந்தை பிறவியிலேயே பார்வையை இழந்துவிட்டதா அல்லது இடையில் விபத்தின் மூலம் பார்வை இழந்ததா?” என்று கேட்டார்.

அச்சம்மா, “ஸ்வாமி! இவன் பிறவியிலேயே பார்வையை இழக்கவில்லை. இடையில் ஒருநாள் திடீரென்று தன்னால் எதையும் பார்க்க இயலவில்லை என்றான். ஆனால் இவன் கண்களைப் பரிசோதித்த எவரும், இவனால் பார்க்க இயலாது என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், இவன் கண்கள் மற்றவர்களின் கண்களைப் போன்றே காட்சியளிக்கின்றன. அது எனது துரதிர்ஷ்டமே. வேறென்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவை ஆறுதல் படுத்தி, அவரை அமைதியாக இருக்கும்படி ஜாடை காண்பித்துவிட்டு, அவரின் மகனிடம் பேசினார்.

“குழந்தாய்! வா என் அருகில் வந்து உட்கார். உனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது’’ என்றார்.

அவனும் தள்ளாடியபடி ஸ்வாமிகளை அணுகி அவர் அருகில் அமர்ந்தான். ஸ்வாமி தன் திருக்கரத்தை அச்சிறுவனின் தலையில் வைத்து, ஒரு விரலைக் கொண்டு அவனுடைய புருவங்களின் மத்தியில் அழுத்தினார்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


பின்னர் அவனிடம், “குழந்தாய்! உன் கண்க ளைப் பத்து நிமிடங்கள் நன்றாக மூடிக்கொள். பின்னர் மெதுவாக திற!” என்றார்.

அவனும் கண்களை இறுக மூடிக்கொண்டான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கண்களைத் திறந்த அச்சம்மாவின் மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். என்ன ஆச்சரியம்... அதுவரை பார்வையில்லாமல் இருந்த அந்தப் பிள்ளை, ஸ்வாமியின் ஸ்பரிசத் தால் பார்வை பெற்றான்.

நெடுஞ்சாண் கிடையாக விழுந்து ஸ்வாமி யின் பாதங்களைப் பற்றிக்கொண்டான். மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினான்.

“ஸ்வாமி! தாங்கள் வேறு யாருமல்ல; என்னைக் காப்பாற்ற வந்த மந் நாராயணனே ஆவீர்கள். ஒரு விநாடி தாங்கள் என் தலையில் கை வைத்து, புருவ மத்தியில் தொட்டதற்கே, இப்படியொரு பலன் வாய்த்தது என்றால், ஆயுள் முழுவதும் உங்களுக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தால், எவ்வளவு பலன் கிடைக்கும்?!

நான் தங்களின் காலடியின் புழுதியாக இருக்க விரும்புகிறேன். தயைகூர்ந்து எனக்கு நன்மார்க்கத்தைக் காண்பியுங்கள்’’ என்றான்.

உடனே சுவாமிகள் அவனிடம், ``என் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு, எப்போது துன்பம் நேர்ந்தாலும் நான் அவர்களைக் காப்பாற்றுவேன். குழந்தாய்! இப்போது உனது பூர்வஜன்மக் கதையைச் சொல்கிறேன் கேள்...’’ என்றவர் அதுபற்றி அவனுக்கு விவரித்தார்:

``உனது முற்பிறவியில் ஒரு புனிதவதியை நீ திருமணம் செய்திருந்தாய். ஆனால் நீ அவளின் கண்களைப் பிடுங்கிவிட்டாய். அவள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

இத்தகைய கொடுஞ்செயலுக்கான தண்டனையை இதுவரை நீ அனுபவித்தாய். உனது தாய் செய்த புண்ணியங்களால் இழந்த பார்வையை நீ திரும்பப் பெற்றாய்’’ என்றார்.

தான் இழைத்த கொடூரத்துக்காகப் பெரிதும் மனம் வருந்தினான் அச்சம்மாவின் மகன். அத்துடன் ஸ்வாமிகளிடம், ``ஸ்வாமி! தாங்கள் அனுமதித்தால், என் நண்பர்களுடன் சேர்ந்து இங்கு தம்மால் நிகழ்ந்த அற்புதங்களை அனைவருக்கும் எடுத்துச்சொல்லலாமா?’’ என்று கேட்டான்.

அவனுடைய பக்தியையும் ஆர்வத்தையும் கண்டு மகிழ்ந்த ஸ்வாமிகள் புன்னகைத்தார்.

“தாராளமாக! நீ உனது விருப்பம் போல செய். ஒன்றை மட்டும் மனத்தில் நிறுத்திக்கொள். இதுவரையிலும் பார்வை இல்லாத உன்னை கிராமத்தினர் பரிதாபமாகப் பார்த்தனர். இப்போது பார்வை பெற்று விட்டாய். இனி, அவர்களில் பலரும் பொறாமையுடன் உன்னைப் பார்க்க நேரிடலாம். பொறாமைப் பார்வையால் பாறைகளும் வெடித்துவிடும்.

ஆகவே, எப்போதும் நீ வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது, நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு செல். அப்போது கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம். கண் திருஷ்டி மிகவும் கொடியது; நமக்குத் துன்பம் தரவல்லது. ஆனால் நீ எப்போதும் என் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறாய். அதனால் கவலை வேண்டாம்’’ என்று கூறி அவனை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் காலக்ஞானி மகாயோகி வீரபிரம்மேந்திரரின் அருளால் அச்சம்மாவின் மகனுக்குப் பார்வை கிடைத்த விஷயம் ஊரெங்கும் பரவியது. அந்தப் பகுதியை ஆட்சிசெய்து வந்த நவாபுவின் செவிகளையும் எட்டியது இந்தத் தகவல்.

நவாபு வியந்து மகிழ்ந்தார்.

“இவர் போன்ற புனிதமான சாதுக்கள் நம் பகுதிக்கு வருகை தர, நாம் புண்ணியம் செய்திருக்கிறோம். அந்த யோகியை நான் காண வேண்டும். அவரை அழைத்து வாருங்கள்’’ என்று வீரர்களைப் பணித்தார்.

அவரின் வீரர்களும் அச்சம்மாவின் மடத்துக்குச் சென்று நவாபுவின் வேண்டுதலைச் சொல்லி ஸ்வாமியை அழைத்தனர். அதை ஏற்று அரண்மனைக்குப் புறப்பட்டார் வீரபிரம்மேந்திரர்.

அவர் அங்கு செல்ல தீர்மானித்ததற்குக் காரணம் இருந்தது. அதுபற்றியும், அரண் மனையில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

- தரிசிப்போம்...