Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்!

ஶ்ரீவீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்

`பாபா மாமி' ரமா சுப்ரமணியன்

சித்தய்யாவுக்குக் கொடுத்த வாக்குப்படி அவருக்கும், புதிதாக வந்த சீடருக்கும் லட்சிய திரயம்பகம் குறித்து உபதேசித்தார் சுவாமி வீரபிரம்மேந்திரர்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்

``லட்சிய திரயம்பகம் மூன்று வகைப்படும். பாஹிர் லட்சியம், மத்ய லட்சியம் மற்றும் அந்தர லட்சியம் என மூன்று வகைகளாக லட்சிய திரயம்பகம் பிரிக்கப் பட்டுள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டவாறு மூக்கின் நுனியில், உள்ளத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஒருவர் அவ்வாறு ஒருமுகப்படுத்தும்போது, அவர் ஐந்து விதமான நிறங்களைக் கண்டுகொள்வார். ஐந்து நிறங்களும் பஞ்ச பூதங்களுக்குரியவை. யோகம் புரிபவர் இவற்றை உள்வாங்கி, தன் தலையை மெதுவாக உயர்த்தி ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் இருக்கும்போது, அவர் ஒரு தெய்விக ஒளியைக் காண்பார்.

அதை தரிசித்ததும் கண், காது மற்றும் மூக்கின் துவாரங்களை கைவிரல்களால் அடைத்துக்கொண்டால், ஒளியின் பிரகாசம் அதிகரிக்கும். அப்போது பிரணவ மந்திரமான `ஓம்' என்ற ஒலி கேட்கும். அத்துடன் அந்த ஒளி நவவர்ண ஜாலங்களாகத் தோன்றி யோகியின் தெய்விக நிலையை உறுதி செய்யும்.

இரண்டாவதான மத்ய இலட்சியம் எனும் யோகம், புருவங்களின் மத்தியில் நிலைநிறுத்தப்படும் தியானமாகும். மனம் தீவிரமாக புருவ மத்தியை தரிசிக்கும்போது, அங்கு பிரகாசம் நிறைந்த துளை ஒன்றைக் காண முடியும். அது சூட்சுமரந்திரம் (Sookshma Randhram) என்று அழைக்கப்படும். இங்ஙனம் கண்ணை மூடி மனத்தால் தரிசிக்கும்போது மின்னலைப் போன்ற வெளிச்சமும், நட்சத்திரங்களும், சூரிய, சந்திர கிரகங்களும், பஞ்சபூதங்களின் நிறங்களும், எல்லையில்லாத கரிய நீல நிறமுடைய ஆகாயமும் தென்பட்டு காலக்ஞானியின் வரவைப் பறைசாற்றும். இப்படியான பரவச நிலையை அனுபவிக்கும் யோகி, வாழ்வின் இச்சைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுவார்!.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்

மூன்றாவதான அந்தர இலட்சியம் எனப்படும் யோகம், அந்தரங்கமான ஆத்மாவில் நிகழும் தெய்விக மாற்றங்களைக் குறிப்பதாகும். மூக்கின் மத்தியில், மனதை ஒருமுகப்படுத்தி தியானிப்பதன் மூலம், தெய்விக ஒளியை ஆத்மாவில் தரிசிக்க இயலும். ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்து பேரின்ப நிலையைத் தரும்.’’

சுவாமி இவ்வாறு விளக்கியதும் புதியவரும் பாலஞானி சித்தய்யாவும் பரவச நிலையை அடைந்தனர். மறுநாள் ஸ்வாமி கிராமவாசிகள் அனைவரையும் அழைத்துச் சமூக நலனுக்காக மிகப்பெரிய யாகத்தை நடத்தினார். அத்துடன் பூஜைகள் செய்து தீர்த்தமும் பிரசாதமும் வழங்கினார். அதேநேரம், அந்தக் கிராமத்தில் வேறுசில அற்புதங்களும் நடந்தன.

ஆம்! பூஜை முடிந்ததும் கிராமத்தில் பல இடங்களில் பலரும் மயங்கி விழுந்தனர். காரணம், ஸ்வாமியால் நிகழ்த்தப்பட் பூஜைகளின் விளைவாக, அந்தக் கிராமத்தில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகளும் துர்சக்திகளும் அலறித்துடித்து தாம் தங்கியிருந்த உடலை விட்டு ஓடின. தீயசக்திகளால் பூஜைக்கு வர இயலாமல் இல்லங்களில் தங்கியிருந்த நபர்கள், தீயவை விலகியதும் அப்படியே மயங்கிச் சாய்ந்தனர். வெகுநேரமாக அவர்கள் எழுந்திருக்கவில்லை. இந்நிகழ்வை தமது ஞான திருஷ்டியின் மூலம் அறிந்து கொண்ட ஸ்வாமி, உடனடியாக தமது இருக்கையிலிருந்து எழுந்து, தமது கைத்தடியை மேல் நோக்கி எறிந்தார்.

அதன் மகிமையால், மயங்கிக் கிடந்தவர்கள் விழித்தார்கள். அனைவரும் ஸ்வாமியை தரிசித்து நன்றி தெரிவித்தனர்; அவரிடம் தீர்த்தப் பிரசாதம் பெற்றுத் திரும்பினர். விஸ்வகர்மா குலத்தவருக்கு ஸ்வாமியின் உபதேசம் கிடைத்தது. அதுபற்றி அவர்கள் அப்பகுதியின் நவாபுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

நவாபு வியந்துபோனார். ஸ்வாமியைப் பல்லக்கு மூலம் அழைத்து வரச் செய்து உபசரித்தார். தானும் அவரிடம் உபதேசம் பெற்றுக்கொண்டார். அந்த வேளையில் நவாபு ஸ்வாமியிடம், “சலாம் சாஹேப். தாம் எனது மாளிகையில் காலடி வைத்ததுமே என் பரம்பரையினர் முக்தி நிலையை அடைந்ததாக உணர்கிறேன். என்னைப் போன்ற சாமான்யர்களுக்குத் தங்களைப் போன்ற உயர்ந்தோரின் ஆசியும் கருணையும் எப்போதும் வேண்டும்!” என்றார்.

ஸ்வாமி சிரித்துக்கொண்டே, “மகனே! இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிர்களும் பிரம்மத்தின் கூறுகளே. பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. பானையில் இருந்தாலும் நதியில் பாய்ந்தாலும் சமுத்திரத்தில் திரண்டா லும் தண்ணீர் எப்போதும் தண்ணீர்தான். வந்த இடம் வேறுவேறாக இருந்தாலும், செல்லும் இடம் அனைவருக்குமே ஒன்றுதான். ஆகவே, நாம் அனைவரையும் பிரம்மத்தின் வடிவாகவே காணவேண்டும். பிரம்மத்துக்கு மதம், குலம், இன வேறுபாடு கள் எதுவும் இல்லை. ஆக நீயும் உன் குடும்பத்தாரும் பிரம்மத்தின் கூறுகளே. சத்திய நிலையை உணர்ந்தவர்கள் மட்டுமே இக்கருத்தைப் புரிந்துகொள்வார்கள்’’ என்றார்.

ஸ்வாமியின் இந்த உபதேசத்தால் நவாபு மகிழ்ந்தார். அவர் “ஸ்வாமி! எனது விருப்பம் ஒன்று நிறைவேறாமல் உள்ளது. அதை தாங்களே நிறைவேற்றித்தர வேண்டும்” என்று வேண்டினார்.

ஸ்வாமி, “மகனே! உனது விருப்பத்தை நீ கூற வேண்டிய அவசியம் இல்லை. நான் இங்கு வருவதற்கு முன்னரே, உன் மன எண்ணங்களை நன்கு படித்துவிட்டேன். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், உன் மனத்தில் அத்தகைய விருப்பம் வருவதற்கு முன்னரே, எனக்கு அதைப்பற்றி தெரியும்!’’ என்றார்.

அத்துடன், ``உடனடியாகச் சென்று ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து வா. அந்தத் தண்ணீரை உன் விருப்பப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அப்படி எடுத்து வரும் தண்ணீரை அணைந்த விளக்குகளில் ஊற்று. மட்டுமன்றி, நீ விரும்பினால் இதுவரை உபயோகிக்காத புது விளக்குகளையும் வாங்கி வந்து, அவற்றிலும் தண்ணீரை நிரப்பு. பின்னர் தண்ணீருக்குள் திரியை நனைத்து விளக்கை ஏற்று. நீ நினைப்பது போல அனைத்து விளக்குகளும் தண்ணீரில் பிரகாசமாக எரியும்!’’ என்றார்.

நவாபு அதிர்ந்தார். `நான் மனதில் நினைத்ததை அப்படியே கூறுகிறாரே... நிச்சயமாக இவர் தெய்வத்தின் அவதாரமே’ என்று வியந்தவராக, ஸ்வாமி கூறியபடியே விளக்குகளைக் கொண்டு வரச் செய்து அவை அனைத்திலும் தண்ணீரை ஊற்றி, பஞ்சுத் திரிகளை தண்ணீரில் நன்றாக நனைத்து தீபம் ஏற்றச் செய்தார்.

என்ன அற்புதம்... அவை யாவும், எண்ணெய் ஊற்றிய விளக்குகளை விடவும், மிகவும் பிரகாசமாக தொடர்ந்து பல மணி நேரம் சுடர்விட்டு எரிந்தன. இக்காட்சியை நவாபுவின் மாளிகையில் உள்ள அனைவரும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆம்! நவாபு வீரபிரம்மேந்திரரை தன் மாளிகைக்கு அழைத்துவருவதற்கு முன், `ஒருவேளை இவர் உண்மையான ஞானியாக இருந்தால், தண்ணீர் ஊற்றிய விளக்குகளை எரிய வைக்கட்டும் பார்க்கலாம்' என்று நினைத்திருந்தார். அவர் மனதில் உள்ளதை வெளிப்படுத்துமுன், ஸ்வாமியே அதை வெளிப்படுத்தி, தண்ணீரில் விளக்குகளை எரியவைத்து அற்புதம் நிகழ்த்தினார்.

ஆக, ஸ்வாமி மீதான மதிப்பும் பக்தியும் நவாபுக்கு அதிகமானது. நவாபு பரம்பரையின் ஆட்சி வருங்காலத்தில் என்ன நிலையைச் சந்திக்கும், இது தலைமுறைக்கும் தொடர்ந்து நீடிக்குமா எனப்போன்ற கேள்விகளை ஸ்வாமியிடம் கேட்டார். எனவே, நவாபுக்கும் ஸ்வாமி காலக்ஞானம் குறித்து கூற வேண்டிய சூழல் வந்தது. ஆகையால் நவாபுவுக்கும் புனித நூலான காலக்ஞானத்தை எடுத்துரைத்தார்.

- தொடரும்...

`மனம் போடும் முடிச்சுகள்!'

புத்தர் ஒரு நாள் தன் சீடர்கள் முன், கையில் ஒரு துணியுடன் வந்து அமர்ந்தார். எதுவும் பேசாமல் அந்தத் துணியில் ஐந்து முடிச்சு களைப் போட்டார். பின்பு தலை நிமிர்ந்து சீடர் களைப் பார்த்தார்.

``முடிச்சுகள் இல்லாமல் முன்பிருந்த துணி யும், முடிச்சுகள் உள்ள இப்போதைய துணியும் ஒன்றா, வேறு வேறா?'' என்றார். அவரின் சீடர் ஆனந்தர், ``முன்பிருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி, சுதந்திரம் இழந்து அடிமையாகி விட்டது'' என்றார்.

உடனே புத்தர், ``எல்லாரும் இயல்பாக இருக்கும்போது கடவுள்கள்தாம். ஆனால், சிக்கலில் சிக்கி அடிமையாகிறார்கள்!'' என்றார்.

பிறகு, ``இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். சாரிபுத்தன் என்ற சீடர் சொன்னார்: ``எவ்வாறு முடிச்சுகள் போடப்பட்டன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க இயலாது. நினைவின்றி மனம் போடும் முடிச்சுகள் அவிழ்க்க முடியா தவை!''

புத்தர் சொன்னார்: ``விழிப்பு உணர்வு இன்றி மனம், ஆசை வலையைப் பின்னும். அது போட்ட முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் வாழ்க்கை யைச் சிக்கலாக்கும்!''

- சி.செந்தில், திருநெல்வேலி-3