"ஐயப்பனுக்கு மாலை அணிந்துவிட்டால், உங்களுடன் அவர் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வார். உணவகங்களுக்கு வந்து உணவு உட்கொள்வார். உங்களுடன் கோயில்களுக்கு வருவார். உங்களுடன் தூங்குவார். உங்களின் சுவாசமாக இருப்பார் என்பதை உணர வேண்டும். `தத்துவமசி' என்று ஐயப்பன் சொன்னதுக்குக் காரணமே, `நானும் நீயும் ஒன்று' என்பதுதான். இப்படி மாலை அணியும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் அமைவது இயற்கை'' என்கிறார் வீரமணிராஜூ. அவர் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

வீரமணிராஜூ என்கிற நான் மிகப்பெரிய செலிபிரிட்டி என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் எல்லா செலிபிரிட்டியுடனும் பழகக்கூடிய வாய்ப்பை பெற்றவன். நான் மிகவும் சாதாரணமானவன். ஆனால் வீரமணிராஜூ என்று சொன்னால், உலகம் முழுவதும் தெரிகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அந்த ஐயப்பன் பக்தி பாடல்களைப் பாடியதுதானே தவிர, வேறு எதுவும் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஐயப்பனை `தெய்வம்' என்று தள்ளிவைத்து விடாதீர்கள். அவர் ஒரு சித்த புருஷர். பிரத்யட்சமாக நீங்கள் எந்த இடத்திலிருந்துகொண்டு நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் உடனே தன்னுடைய இருப்பை அவர் உங்களுக்குக் காண்பிப்பார்.
சபரிமலைக்கு மண்டல பூஜை, மகரஜோதி ஆகியவற்றுக்குச் செல்பவர்கள் ஒருவிதமென்றால் மாதாமாதம் கோயில் நடை திறக்கும்போது சென்று தரிசனம் செய்பவர்கள் இன்னொரு விதம். இப்படி மாதாமாதம் சென்று தரிசனம் செய்யும்போது கிடைத்த ஒரு சிலிரிப்பூட்டும் அனுபவம்.

மாதாமாதம் 5 நாள்கள் கோயில் திறந்து நடை சாத்தும்போது ஐயப்பனை விபூதியால் முழுவதும் மூடி வைத்திருப்பார்கள். அப்போது ஐயப்பன் தவத்தில் இருப்பதாக ஐதிகம்.
`ஹரிவராசனம்' பாடல் பாடி முடித்த பிறகு ஒரே ஒரு விளக்கையேற்றி வைத்துவிட்டு நடையை சாத்துவார்கள். ஐயனின் வலதுபுற கைகளில் இருக்கும் சின்முத்திரையில் ஒரு ருத்ராட்ச மாலையும் இடதுபுறம் ஒரு தண்டத்தையும் வைத்துக் கோயில் நடையை சாத்துவார்கள். நடை சாத்திய பிறகு எவரும் கருவறைக்குள் செல்ல மாட்டார்கள். மேல்சாந்திகூட கருவறைக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்படும். ஒரு மாத காலம் அந்த விளக்குக்கு யாரும் எண்ணெய் ஊற்றமுடியாது. ஆனால், அந்த விளக்கு ஐயப்பனின் மகிமையால் ஒருமாதம் முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் சத்தியம்.
நான் சென்றபோது ஒருமுறை, ஒரு மாதம் கழித்து நடைதிறக்கும்போது இடதுபுறம் இருந்த தண்டம் வலதுபுறத்துக்கு மாறி இருந்தது. வலது கை `சின் முத்திரை'யிலிருந்த ருத்ராட்ச மாலை இடது கைக்கு மாறியிருந்தது. எனக்கோ தாங்க முடியாத ஆச்சர்யம்.

`சுவாமி, எப்படி இந்தத் தண்டம் இங்கிருந்து அந்தக் கைக்கு மாறியது' என்று என் சந்தேகத்தை மேல்சாந்தியிடம் கேட்டேவிட்டேன். அவர், `வா' எனத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
`நீங்கள் எத்தனை முறை மலைக்கு வந்திருப்பீர்கள்?''
``ஐம்பது ஆண்டுகளில் 100 முறைக்கு மேல் வந்திருப்பேன்.''
``நீ 100 அல்ல 120 முறை வந்தாலும் சரி, ஓராயிரம் முறை வந்தாலும் வேஸ்ட். சபரிமலையில் ஐயப்பன் உயிரோடு இருப்பதே உனக்கு தெரியவில்லையென்றால், நீ எத்தனை முறை மலைக்கு வருவதும் வீண்தானே?'' என்று கேட்டார்.
சுளீரென என் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது.
``சாமி இதை நான் கொஞ்சம் விவரமாக தெரிந்து கொள்ளலாமா?''
``நான் உனக்குப் புரிகிற மாதிரியே சொல்றேன். நீ ஒரு கச்சேரியில் பாடுகிறாயென்றால் எவ்வளவு நேரம் பாடுவாய்?
``நான் ஒரு மூன்று மணி நேரம் பாடுவேன் ''
``3 மணிநேரம் இப்படி உட்கார்ந்த நிலையிலேயே உன்னால் பாட முடியுமா? ஒரே ஒரு பாட்டு `பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' என்ற அந்த ஒரு பாடலை மட்டுமாவது உன்னால் எந்தவித அசைவும் இல்லாமல் பாட முடியுமா?''
``அது எப்படி சாமி என்னால முடியும்? கையை ஆட்டிப் பாடுவேன் ஆர்கெஸ்டாவைப் பார்த்து சைகை கொடுப்பேன்''
``உன்னால் ஒரு மூன்று நிமிட பாடலுக்கு, ஒரு இடத்தில் நின்றுபாட முடியவில்லையென்றால் ஐயப்பன் ஒரு மாதகாலம் தவக்கோலத்தில் இருப்பவர் அங்கே இங்கே கையை இடம் மாற்றிக் கொள்ளமாட்டாரா?
இதைவிடத் தெளிவாக எவரும் விளக்கிக் கூற முடியாது இதை கேட்டதும் நான் மிகவும் ஆடிப்போய்விட்டேன். ஐயப்பன் சபரிமலையில் உயிரோடு பக்தர்களுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் உண்மை." என்று முடித்தார்.