Published:Updated:

வினைகள் தீர்க்கும் - வேல் வணக்கம்

வேல் வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
News
வேல் வழிபாடு

வேலுண்டு வினை இல்லை

`வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயம் இல்லை’ என்பார்கள் பெரியோர்கள். வேலாயுதம் ஞானசக்தியின் அம்சம். அந்த வேலாயுதத்தை வணங்கினால் வினைகள் யாவும் நீங்கும்.

வேலாயுதத்தைப் போற்றும் பல பாடல்களைப் பெரியோர்கள் அருளியுள்ளனர். அவற்றில் ‘வரகவி’ அ.சுப்ரமணிய பாரதி அருளிய இந்த ‘வேல் வணக்கம்’ பாடலை தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி முதலான முருகனுக்கு உகந்த நாள்களில் பாடி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்; சகல சம்பத்துகளும் உண்டாகும்.

வேல்வழிபாடு
வேல்வழிபாடு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருப்பரங்குன்றம்

சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி

ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்

மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்

கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்

குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு

பெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்

ஆறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.

திருஆவினங்குடி (பழனி)

மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ

மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான

ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்

நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.

திரு ஏரகம் (சுவாமிமலை)

சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்

சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்

பொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட

பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.

குன்றுதோறாடல் (திருத்தணி)

கொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண,

மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்,

குன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து

வென்றிசேர் சத்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.

பழமுதிர்ச்சோலை

புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில்

அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர்

பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்

சிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.

வேலும் மயிலும் துணை!

தொகுப்பு: எஸ்.கண்ணன், சென்னை-87